சென்னையில் இருக்கும் ஆட்டோ டிரைவர் நாயகன் விஷ்வத் விஞ்ஞானியாகும் கனவில் ஆட்டோவை ஓட்டி பிழைத்து வருகிறார். இதனால் விரக்தியும் வெறுப்புமாக இருக்கும் அவர் ஆட்டோவில் ஒரு நாள் ஒரு சிறுவன் ஏறுகிறார். தான் ராமேஸ்வரத்திலிருந்து வருவதாகவும், தனது பெயர் அப்துல் கலாம் என்றும் கூறுகிறார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், டைம் டிராவல் செய்து வந்திருக்கிறார்” என்று உற்சாகத்தில் குதிக்கிறார் பிரபா. இதை, பிரபாவின் தோழி, கமல், அறிவியல் ஆசிரியர் ஆனந்த் குமாரசாமி உள்ளிட்ட எவரும் நம்பவில்லை. ஆனால் பிரபா நம்புகிறார்.
அந்த சிறுவன், தனது தாயைப் பார்க்க வேண்டும் என சொல்ல.. இருவரும் ராமேஸ்வரம் செல்கிறார்கள்.
அங்கு, அப்துல்கலாமின் பால்ய நண்பரான, முதியவர் சாஸ்திரியை சந்திக்கிறார்கள். அந்த முதியவரும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு நம்புகிறார்.
அப்துல்கலாம் ஏன் வந்தார் ? அவரது நோக்கம் என்ன ? என்பதை அழகான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர் .
கதாபாத்திரத்திற்கு ஏற்ற முக பாவத்தோடு நடித்திருக்கிறார் நாயகன் விஷ்வத். ஆங்காங்கே நமக்கே ஆத்திரமூட்டும் நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அவரது பாத்திர வடிவமைப்பும், உருவாக்கமும் சிறப்பாக இருக்கிறது.
கலாமாக நடித்திருக்கும் அந்த சிறுவன் கவனிக்க வைத்திருக்கிறான். உருவ ஒற்றுமை அப்படியே பொருந்திப் போகிறது. சாஸ்திரி பாத்திரத்தில் வரும் காத்தாடி ராமமூர்த்தி வந்த பிறகு கதை வேகம் எடுக்கிறது. காத்தாடி போகிற போக்கில் அடிக்கிற காமெடி கைதட்டல் பெறுகிறது. சிறுவன், இவரை “டேய்” என்று அழைக்க, பக்கத்தில் இருப்பவர் கோபப்பட, இவரோ, “அவன் என்னைத்தானே கூப்பிடுறான்.. நீ ஏன் டென்சன் ஆகிற” என கூலாக சொல்வது அட்டகாசம். முதல் பாதி ஏனோ தொய்வாக இருந்தது. இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் தெளிவாகவும் நகர்கிறது.
விஷ்வத், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன் ராமசந்திரன் துரைராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ராக்கெட் டிரைவர்’. ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு கௌஷிக் க்ரிஷ் இசையமைத்து இருக்கிறார்.
இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் மக்கள் கொண்டாடும் படமாக மாறியிருக்கும்.