இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனாக் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே அவரது செல்வச் செழிப்பைப் பற்றித்தான் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இங்கிலாந்து அரசரைவிட மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார் என்று சிலர் அவரைப் பார்த்து பொறாமைகூட படுகிறார்கள். இன்றைய நிலவரப்படி ரிஷி சுனாக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 6,661 கோடி ரூபாயாக இருப்பதே இதற்கு காரணம்.
இதன்மூலம் இங்கிலாந்து மட்டுமின்றி உலகிலேயே பணக்காரரான பிரதமாக இருக்கிறார் ரிஷி சுனாக். அவர் வைத்துள்ள விலை உயர்ந்த சில பொருட்களைப் பார்ப்போம்…
யாக்ஷயர் வீடு:
சுனாக் வைத்துள்ள விலையுயர்ந்த சொத்துகளில் ஒன்று வடக்கு யாக்ஷயர் பகுதியில் மனைவியுடன் அவர் வசித்த வீடு. கிர்பி சிக்ஸ்டன் பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு, அவர் இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்பே வாங்கியது. இதன் மதிப்பு 14.3 கோடி ரூபாய். 12 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த வீட்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், போட் அவுஸ், டென்னிஸ் கோர்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
கலிபோர்னியாவில் கடல் பார்த்த வீடு:
இங்கிலாந்தில் வசித்தாலும் விடுமுறையைக் கழிப்பதற்காக அடிக்கடி அமெரிக்காவுக்கு செல்வது ரிஷி சுனாக்கின் வழக்கம். இதற்காக கலிபோர்னியாவில் கடல் பார்த்த வீடு ஒன்றை வைத்துள்ளார் ரிஷி சுனாக். பிட்னெஸ் செண்டர், செல்லப் பிராணிகளுக்கான ஸ்பா உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு 59 கோடி ரூபாய்.
லண்டன் வீடுகள்:
மேலே பார்த்த வீடுகள் மட்டுமின்றி லண்டன் நகரில் மேலும் சில வீடுகளை சொந்தமாக வைத்துள்ளார் ரிஷி சுனாக். இதில் முக்கியமானது டவுனிங் ஸ்டிரீட்டில் உள்ள 5 படுக்கை அறைகளைக் கொண்ட வீடு. இந்த வீட்டின் மதிப்பு 68.8 கோடி ரூபாய்.
இதைத்தவிர 2.46 கோடி ரூபாயில் மேலும் ஒரு வீட்டை லண்டனில் சொந்தமாக வைத்துள்ளார் ரிஷி சுனாக்.
இப்படி பல வீடுகள் எல்லாம் இருந்தாலும் டவுனிங் ஸ்டிரீட்டில் உள்ள 100 அறைகளைக் கொண்ட அரசு வீடுதான் இனி அவரது அதிகாரபூர்வ இல்லமாக இருக்கும்.
சொகுசுக் கார்கள்:
வீடுகளுக்கு அடுத்ததாக ரிஷி சுனாக் அதிகமாக வைத்திருக்கும் விஷயம் சொகுசுக் கார்கள். Volkswagen Golf GTI, sedan Jaguar XJ L, Land Rover Discovery, Land Rover Range Rover Sentinel உள்ளிட்ட பல சொகுசுக் கார்களை அவர் வைத்துள்ளார். இத்தனை கார்கள் இருந்தாலும் இனி இங்கிலாந்து பிரதமர் என்ற முறையில் Land Rover Range Rover Sentinel காரைத்தான் இனி அதிகாரபூர்வமாக அவர் பயன்படுத்த உள்ளார்.