சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தியிருக்கிறார் ரிங்கு சிங். அயர்லாந்துக்கு எதிராக நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் 21 பந்துகளில் 38 ரன்களைக் குவித்த ரிங்கு சிங், தனது பினிஷிங் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். இந்த போட்டிக்கு பிறகு, பினிஷிங்கில் தோனியின் இடத்தை ரிங்கு சிங் நிரப்பியிருக்கிறார் என்று சிலர் புகழ, ஒரே போட்டியில் ஆடிய ரிங்கு சிங்கை தல தோனியுடன் ஒப்பிடுவதா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
எப்படியோ ஒரே போட்டியின்மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார் ரிங்கு சிங்.
யார் இந்த ரிங்கு சிங்?
பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில்தான் உருவாவார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். கிரிக்கெட் பிட்ச் முதற்கொண்டு வீட்டிலேயே அனைத்தையும் சொந்தமாக வைத்திருப்பார்கள். ஆனால் இப்படி எந்த வசதியும் இல்லாத, சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் ரிங்கு சிங்.
உத்தரப் பிரதேச மாநிலம்தான் ரிங்கு சிங்கின் சொந்த ஊர். அங்குள்ள அலிகார் பகுதியில் வீடுகளுக்கு காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்யும் கான்சந்திர சிங்கின் 3-வது மகன்தான் ரிங்கு. ரிங்குவின் அப்பாவுக்கு மொத்தம் 5 குழந்தைகள். அப்பாவுக்கு குறைந்த வருமானம் என்பதால் கஷ்ட ஜீவனம். படிக்க வைப்பதற்கே பணம் செலவு செய்ய யோசிக்கும் அப்பாவிடம் போய் கிரிக்கெட் கோச்சிங்குக்கு பணம் கேட்டால் கொடுபாரா?
“நமக்கெல்லாம் கிரிக்கெட் சரிப்பட்டு வராது… போய் ஒழுங்கா படி இல்லைன்னா கூலிவேலை செய்து பொழைக்கற வேலையைப் பாரு” என்று சொல்லிவிட்டார்.
ரிங்கு சிங் கவலைப்படவில்லை. அப்பா சொன்னபடி படிக்காவிட்டாலும், கூலி வேலை தேடினார். 13 வயதில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை கூட்டிப் பெருக்கும் வேலை கிடைத்துள்ளது,. அந்த வேலையில் சேர்ந்த ரிங்கு, மாலை நேரங்களில் கிரிக்கெட் கோச்சிங்கில் சேர்ந்திருக்கிறார். அப்பாவின் முதலாளி ஒரு பேட்டை வாங்கிக் கொடுக்க, அதையே மூலதனமாக்கி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். உள்ளூர் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்க கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கிவிட்டார். இதனால் உத்தரபிரதேச அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.
ஒரு கட்டத்தில் கேகேஆர் அணியின் தேர்வாளர்களுக்கு அவரது ஆட்டத்தைப் பற்றி தெரியவர 2018-ம் ஆண்டில் 80 லட்சம் கொடுத்து வாங்கிப் போட்டிருக்கிறார்கள். ஆனால் போதுமான வாய்ப்புகள் இல்லாததால் அவரால் எதுவும் சாதிக்க முடியவில்லை. இதனால் 2021 ஏலத்தில் ரிங்குவின் மதிப்பு குறைந்தது. 2018-ல் 80 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய கேகேஆர் அணியே இப்போது 55 லட்சம் ரூபாய்க்கு அவரை வாங்கியது.
தன் மதிப்பு குறைந்ததைப் பற்றி கவலைப்படாமல் எப்போதும்போல் உற்சாகமாக இருந்துள்ளார் ரிங்கு. தனக்கென்று ஒரு வாய்ப்பு வரும் என்று அவர் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார். கடந்த ஐபிஎல்லில் நடந்த ஒரு போட்டியில், கடைசி 5 பந்துகளில் மொத்தம் 30 ரன்களை அடித்து கொல்கத்தாவை ஜெயிக்க வைத்திருக்கிறார் ரிங்கு சிங். இதைத்தொடர்ந்து மேலும் சில போட்டிகளை இவர் சிறப்பாக பினிஷிங் செய்ய, சிறந்த பினிஷராக கருதப்பட்டார் ரிங்கு சிங். அந்த பினிஷிங் திறமைதான் இந்திய அணிக்காக ஆட இவரை தேர்ந்தெடுக்க வைத்த்து.
பொதுவாக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடும் வீர்ர்கள், சர்வதேச போட்டிகளில் சொதப்புவார்கள். ஆனால் ரிங்கு சிங், இந்த சோதனையையும் பாஸ் செய்து விட்டார். தனது முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதைப் பெற்று ரசிகர்களின் குட் புக்ஸில் இடம்பிடித்து விட்டார்.
முதல் போட்டியில் சிறப்பாக ஆடியதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரிங்கு சிங், “ஐபிஎல் கிரிக்கெட்டில் என்ன செய்தேனோ, அதையே இந்த போட்டியில் செய்தேன். கடைசிவரை ஆட்டத்தை கொண்டுசென்று பினிஷிங் செய்ய நினைத்தேன் அது நடந்துவிட்ட்து. கடந்த 10 ஆண்டுகால கிரிக்கெட் அனுபவம் இதற்கு கைகொடுத்தது. கேப்டனின் வழிகாட்டுதல்படி செயல்பட்டதும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம்” என்று கூறியிருக்கிறார்.