ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தனது 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 7 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மிகுந்த மன வருத்தத்துக்கு உள்ளாக்கி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கான சில காரணங்களைப் பார்ப்போம்…
அணித் தேர்வில் அலட்சியம்:
சிஎஸ்கே அணியின் நேற்றைய தோல்விக்கு முக்கியமான காரணமாக அதன் அணித்தேர்வு உள்ளது. கடந்த காலங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும் வெற்றிகளைப் பெற்றதற்கு அதன் தொடக்க ஜோடிதான் காரணம். ருதுராஜ் கெய்க்வாட் – டெவன் கான்வே இணை பல போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர். ஆனால் தேவை இல்லாமல் இந்த முறை அந்த ஜோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் பிரித்துள்ளது.
டெவன் கான்வேயை இந்த ஏலத்தில் வாங்கினாலும், அவருக்கு ஒரு போட்டியில்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மற்றொரு வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டையும் தொடக்க பேட்ஸ்மேனாக பயன்படுத்தாமல் 3-வது பேட்ஸ்மேனாக பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு பதில் திரிபாதி – ரச்சின் ரவீந்திரா ஜோடியை தொடக்க ஜோடியாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அதிரடி தொடக்கத்தை ஏற்படுத்தி தராதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடுமையாக பாதிக்கிறது.
இளம் வீரர்கள் மீது நம்பிக்கையின்மை:
மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் இளம் வீரர்களை நம்பி களத்தில் இறக்குகிறார்கள். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் புதிய வீரர்களை நம்பி களத்தில் இறக்க யோசிக்கிறது. உதாரணமாக அன்சுல் கம்போஜ் மிகச்சிறந்த இளம் பந்துவீச்சாளராக இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை நம்பாமல் வாய்ப்பு தராமல் இருக்கிறது. இதனால் சென்னை அணி வெற்றி வாய்ப்பை இழப்பதுடன், அந்த இளம் வீர்ரின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.
தேவை அதிரடி வீரர்கள்:
கடந்த ஆண்டுமுதல் ஐபிஎல் கிரிக்கெட்டின் குணம் மாறி இருக்கிறது. ஒரு அணி வெற்றி பெற வேண்டுமானால், ஒரு குறைந்தது நான்கைந்து அதிரடி பேட்ஸ்மேன்களாவது தேவைப்படுகிறார்கள்.
ஆனால் சென்னை அணியில் ருதுராஜ், திரிபாடி, ரச்சின் என்று நின்று நிலைத்து ஆடும் வீரர்கள் இருக்கும் அளவுக்கு அதிரடி பேட்ஸ்மேன்கள் இல்லை.