யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற பழமொழிக்கு உதாரணம் ரஜினி. காரணம் ப்ளாப் கொடுத்தாலும் ரஜினி ரஜினிதான்.
’அண்ணாத்தே’ படம் பாக்ஸ் ஆபீஸில் பதுங்கினாலும், சட்டென்று ‘ஜெயிலர்’ என்று பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பெரும் சம்பளத்துடன் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.
இப்பொழுது அதற்கும் அடுத்தகட்டமாக ரஜினி, லைக்கா நிறுவனத்திற்கு தொடர்ந்து படம் பண்ண கமிட்டாகி இருக்கிறார்.
சம்பளம் வெறும் 250 கோடிதான் என்று கிசுகிசுக்கிறார்கள்.
யார் டைரக்டர் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற விவரங்கள் கூடிய சீக்கிரமே வெளியாகக்கூடும்.
’வாரிசு’ நேரடி தமிழ்ப்படம் மட்டும்தான் – வம்சி பல்டி
தமிழில் ‘வாரிசு’, தெலுங்கில் ‘வாரிசுடு’ என்ற பெயர்களில் விஜய் நடிக்கும் படங்களை எடுக்கிறோம் என்றுதான் இயக்குநர் வம்சி படிப்பள்ளி ஆரம்பத்தில் கூறியிருந்தார்.
அதாவது தமிழ் மற்றும் தெலுங்கில் விஜய் நடிக்கும் படம் என்று முதலில் விளம்பரப்படுத்தப்பட்டது.
டோலிவுட்டில் பந்த் நடைபெற்ற போது நேரடி தெலுங்குப் படங்களின் ஷூட்டிங்கிற்கு தடை இருந்தது. இதனால் அப்போது ‘வாரிசுடு’ நேரடி தெலுங்குப் படம் அல்ல. தமிழ் படம்தான். அதனால் ஷூட்டிங்கை தொடர்கிறோம் என்று தயாரிப்பாளர் பக்கமிருந்து பதில் வந்தது.
அதற்கு பிறகு கூட ‘வாரிசுடு’ விஜயின் தெலுங்குப் படம் என்றுதான் அங்கே தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.
லேட்டஸ்ட்டாக மகேஷ் பாபு நடித்த ‘மஹர்ஷி’ படத்தின் ரீமேக்தான் ‘வாரிசுடு’ என்ற பேச்சு தெலுங்கு சினிமாவில் எழுந்திருக்கிறது. இதற்கு காரணம் ஒரே மாதிரியான காட்சிகள் என்கின்றன. ஜெயசுதாவுடன் விஜய் இணைந்து நடித்த காட்சிகளின் புகைப்படங்களையும், மஹர்ஷி படத்தின் காட்சிகளையும் ஒப்பிட்டு தெலுங்கு சினிமா பத்திரிகையாளர்கள் நெட்டில் கலங்கடித்தனர்.
இதற்கிடையில் முதல் முறையாக ’வாரிசு’ படத்தின் ப்ரமோஷனுக்காக மெளனத்தைக் கலைத்த வம்சி படிப்பள்ளி, ‘வாரிசு’ நேரடி தமிழ்ப் படம். என்று பல்டி அடிக்க கலகலத்து போயிருக்கிறது தெலுங்கு சினிமா.
ஏன் இப்படி மாற்றி மாற்றி தகவல்களை கசியவிட்டார்கள் என்பது படம் வெளிவந்த பிறகே வெளிச்சம்.
சர்ச்சையில் ‘காந்தாரா’
’கேஜிஎஃப்’ வரிசை படங்களுக்குப் பிறகு கன்னட சினிமா மீது அனைவரது கவனமும் திரும்பியிருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் ‘காந்தாரா’, உலகப் புகழ்பெற்ற சினிமா தகவல் இணையதளமான ஐஎம்டிபி-யில் அதிக ரேட்டிங் பெற்ற இந்தியப் படம் என்ற பெரும் கெளரவத்தைப் பெற்றிருக்கிறது.
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்து தரப்பிலும் இருந்து காந்தாரா படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
படம் பார்த்த அனைவரது மனதையும் பிழிந்து எடுத்த ‘வராஹ ரூபம்’ பாடல் ஊரெங்கும் ஒலித்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்பாடல் எங்களது ட்யூன் என குரலெழுப்பி இருக்கிறது பிரபல தாய்க்குடம் குழு.
‘எங்களது ’நவரசம்’ பாடலின் இசையை அப்படியே பிரதிபலிப்பது போல இருக்கிறது ’வராஹ ரூபம்’ பாடலின் இசை. ஒரு பாடலின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இசையமைப்பது என்பது வேறு. அதை கொஞ்சம் மாற்றங்கள் செய்து அப்படியே திரும்ப பயன்படுத்துவது என்பது வேறு. அதனால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாமா என யோசித்து கொண்டிருக்கிறோம்’ என தெரிவித்து இருக்கிறது தாய்க்குடம்.
ஆனால் ‘காந்தாரா’ படத்தின் க்ரியேட்டிவ் டீம் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.