எங்க பட பாடல் வெளியீட்டுக்கு வர முடியுமா? ஒரே ஒரு பாடலை வெளியிட முடியுமா? ரொம்ப வித்தியாசமான படம், டிரைலர் ரிலீஸ் செய்ய முடியுமா? இந்த படம் குறித்து நாலு வார்த்தை பேச முடியுமா? சில நிமிட வீடியோ பேட்டி தர முடியுமா? எங்க படக்குழுவை ஆசீர்வாதம் செய்துவிட்டு, ஒரே ஒரு போட்டோவுக்கு போஸ் தர முடியுமா? படம் அருமைனு உங்க லட்டர்பேடில் ஒரு வாழ்த்து செய்தி அனுப்ப முடியுமா?
இப்படி நாள்தோறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏகப்பட்ட அன்பு தொல்லைகள். கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் சினிமாவில் இருப்பதாலும், 171 படங்களில் நடித்து இருப்பதால் அது தொடர்பான தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என ஏகப்பட்டபேரிடம் இருந்து ரஜினிகாந்த்துக்கு வேண்டுகோள் வந்துககொண்டே இருக்கும். ரஜினிகாந்த் ஒரு படத்தை பற்றி பேசினால், அது தொடர்பான செய்தியை வெளியிட்டால் அந்த படம் இந்தியா மட்டுமல்ல, உலக முழுக்க பேசப்படும், வியாபார ரீதியாகவும் நிறைய பலன்கள்.
ஆனால், ஒருவருக்கு உதவி செய்தால், மற்றவர்கள் கோவித்துக்கொள்வார்களே என ரஜினிகாந்த் 99% அழைப்புகளை தவிர்த்துவிடுவார். மிக, மிக அரிதாக மற்றவர்களின் பாடல் வெளியிட்டுவிழாவில், சினிமா நிகழ்ச்சியில், வெற்றி விழாக்களில் கலந்துகொள்வார். பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டுவிழாவில் அவர் கலந்துகொண்டு பேசிய, அவ்வளவு ரீச் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.
அதேசமயம், நல்ல படங்கள், நல்ல கதைகள் என்றால் சின்ன டீமாக இருந்தால் கூட, தனக்கு அதிகம் தொடர்பு இல்லாவிட்டால் கூட அந்த படக்குழுவை தொடர்பு கொண்டு பேசுவார். அவர்களை நேரில் அழைத்து பாராட்டுவார். அயோத்தி, மகாராஜா என அந்த லிஸ்ட் தனி. அது ரஜினியின் நல்ல குணங்களில் ஒன்று. சரி, விஷயத்துக்கு வருவோம்.
அலங்கு என்ற படக்குழுவை நேரில் அழைத்து, அந்த பட டிரைலரை, தனது போயஸ்கார்டன் இல்லத்தில் வெளியிட்டு இருக்கிறார் ரஜினிகாந்த். படக்குழுவுக்கு அங்க ராஜமரியாதை. அந்த படத்தின் ஹீரோ குணாநிதி என்பவர், எஸ்.பி.சக்திவேல் இயக்கியுள்ளார். உறுமீன், பயணிகள் கவனிக்கவும் போன்ற படங்களை இயக்கியவர். ஹீரோ குணாநிதி. இதற்கு முன்பு ஜி.வி.பிரகாசுடன் செல்பி படத்தில் நடித்தவர். இவர்கள் அதிகம் பிரபலம் ஆகாதவர்கள். சரி, எதற்காக ரஜினிகாந்த் அலங்கு பட டீசரை வெளியிட்டார் என்றால், அந்த பட தயாரிப்பாளர் சங்கமித்ரா.
இவர் வேறுயாருமல்ல, பாமக நிறுவனர் ராமதாஸ் பேத்தி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள், சமீபத்தில் தனது அம்மா சவுமியா தர்மபுரி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்காக தீவிர பிரச்சாரம் செய்தவர். இப்போது அலங்கு படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். அந்தவகையில், சங்கமித்ராவை உற்சாகப்படுத்த வேண்டும். படத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்ற கோணத்தில் படக்குழுவை வீட்டுக்குஅ ழைத்து, டிரைலரை பார்த்தவிட்டு பாராட்டிவிட்டு, அதை வெளியிட்டு இருக்கிறார். படம் தொடர்பான பல விஷயங்களை கேட்டு, விரைவில் படம் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
இந்த செய்தி பரபரப்பாகி இருந்தாலும், சில சர்ச்சைகளை, விமர்சனங்களையும் கிளப்பி உள்ளது. காரணம், ரஜினியின் பாபா படம் தியேட்டரில் வெளியாகக்கூடாது என்று தியேட்டரில் போராட்டம் நடத்தியவர்கள் பாமகவினர். ரஜினிக்கு எதிராக அப்போது கடும் எதிர்ப்பு நிலையை கடை பிடித்தனர். அதை பற்றி கவலைப்படாமல், பழசை யோசிக்காமல் ரஜினி அன்புமணி மகள் பட டிரைலரை வெளியிட்டுள்ளார். தனது வீட்டில் பல இடங்களில் இருந்தாலும் யோகி பாபா படம், பாபா முத்திரை கீழே நின்று பட டிரைலரை ரஜினி வெளியிட்டுள்ளார். இது தற்செயலாக அமைந்ததா? ரஜினியின் குசும்பா என தெரியவில்லை என நெட்டிசன்கள் கலாய்கிறார்கள்.