பிரபல தொழிலதிபர் முருகப்பா தன்னுடைய அபார திறமையால் தொழிலில் கொடிகட்டி பறக்கிறார். முருகப்பா என்றாலே ஒரு பயம், மரியாதை என்ற நிலை வருகிறது. பலருக்கும் உழைப்புக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் அவருக்கு பெண்கள் வடிவில் வினை வந்து சேர்கிறது. தன்னுடைய உயரத்திற்கு மனைவிதான் காரணம் என்று நினைக்கும் அவருக்கு மனைவியிடம் நல்ல பெயர் இல்லை. இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.
இதனால் தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். அவரது சபலத்தை தெரிந்து கொண்ட சிலர் அவருக்கு பெண்கள் சகவாசத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இதனால் அவரது நல்ல பெயருக்கு களங்கம் உண்டாகிறது. அதிகார வர்க்கத்தில் இருக்கும் சிலர் அவருடன் பார்ட்னராக சேரக் விரும்புகிறார்கள். ஆனால் அவர் மருத்து விடுகிறார். இந்த நிலையில் அவருடன் இருந்தவர்கள் செய்த ஒரு கொலையால் முருகப்பா சிறைக்குப் போக நேர்கிறது.
அவரை மிரட்டிய அதிகாரமிக்கவர்கள் ஒரு பக்கம், வழக்கு ஒரு பக்கம், குடும்பத்தில் மகன்கள் எதிர்ப்பு ஒருபக்கம், வழக்கு ஒரு பக்கம் என்று நிம்மதி இழக்கிறார். முருகப்பா. அவர் மீண்டு வந்தாரா ? இல்லையா ? என்பதே ராஜாகிளி படத்தின் கதை.
சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த ஒரு தொழிலபதிபரின் மரணத்திற்கு பின்னால் நடந்த சமபவங்களை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குனர் உமாபதி ராமையா.
தொழிலபதிராக தம்பி ராமையா படம் முழுவதும் பந்தா காட்டியபடியே நடித்திருக்கிறார். அந்த அதீத நடிப்பு ஒரு கட்டத்தில் கதாபாத்திரத்தை மீறி தம்பி ராமையாவையே காட்டுகிறது. அதுவும் காதலிக்காக இளைமையாக மாறி கோட் சூட் போட்டு வரும் இடங்களில் அவரது உடல் மொழியை ரசிக்க முடிகிறது. ஆனால் அந்த தொழிலபதிருக்காக நம்மால் பரிதாபம் கொள்ள முடியாததால் படத்தில் ஒன்ற முடியவில்லை. படத்தில் அவருக்கே அதிக காட்சிகள் இருப்பதால் மற்ற பாத்திரங்கள் டம்மியாக தெரிகிறது.
சமுத்திரகனி அநாதை விடுதியின் உரிமையாளராக வந்து தம்பி ராமையாவை தத்து எடுத்துக் வளர்க்கிறார். அதே நடிப்பு, அக்கறை, பரிதாபம் என்று பலவேறு பாவங்களை காட்டி தம்பி ராமையாவுக்காக வாதாடுகிறார். முதல் மனைவியாக தீபா சங்கர் அழகாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். புஷ்பா பசுபலேட்டி வில்லியாக வருகிறார். அதிரகார வர்க்க பெண்ணாக ஐஸ்வர்யா வருகிறார்.
உண்மையில் நடந்த கதையை அப்படியே எடுத்திருப்பதால் எந்தவித தாக்கமும் நமக்குள் ஏற்படவில்லை. மாறாக பல இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது. உண்மையிலேயே பல திகிலான சம்பவங்கள் வெளி வந்திருக்கும் சூழலில் திரைக்கதையில் எந்தவிதமான திருப்பங்களும் இல்லாமல் நகர்கிறது படம். இதனால் எப்போது படம் முடியும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது.
படத்தில் பாடல்கள், பின்னணி இசை என்று எல்லாமே சம்பிரதாயத்துக்கு ஒலிக்கிறது. இசை சாய் தினேஷ். தம்பி ராமையாவை ஒரு பாடலுக்கு ஆட வைத்த நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை பாராட்ட வேண்டும். கேதார் நாத் – கோபிநாத் ஒளிப்பதிவில் ஒரு ஜொலிப்பு.
நடந்த கதையை சுவாரஸ்யமாக மாற்ற திரைக்கதையில் உழைப்பு வேண்டும்.