இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக வங்கதேச அணி சரிவில் இருந்து தப்பியது.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் ஆடிய வீர்ர்களே இன்றைய போட்டியிலும் களம் இறங்கினர்.
டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். மழையால் ஆடுகளம் ஈரமாக இருந்த நிலையில், அது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அவர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அவர் எதிர்பார்த்த்தை போலவே ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.
ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப், வங்கதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களான சகிர் ஹசன் (0), ஷட்மான் இஸ்லாம் (24 ரன்கள்) ஆகியோரை அவுட் ஆக்கினார். இதைத்தொடர்ந்து பந்துவீச வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், வங்கதேச கேப்டன் நஜ்மல் ஹுசைன் ஷாண்டோவின் விக்கெட்டைக் கைப்பற்றினார். இதனால் வங்கதேச அணி 80 ரன்களில் 3 விக்கெட்களை இழந்தது.
அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் மொமினுலும் முஷ்பிகர் ரஹிமும் ஈடுபட்டனர். இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களை அவுட் ஆக்க தீவிரமாக பந்து வீசிக்கொண்டு இருந்தபோது, மழையால் முதல் நாள் ஆட்ம் கைவிடப்பட்டது. இதனால் மேலும் சரிவதில் இருந்து வங்கதேச அணி தப்பியது.