இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன் முதல் படமான ரோஜா படத்திலேயே எப்படி மாபெரும் ஹிட் இசையைக்கொடுத்து திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்தார். அதே போல அவரது மகள் கதீஜா ரகுமான் தன் முதல் படமான மின்மினி படத்தின் மூலம் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
இயக்குனர் ஹலீதா ஷமீம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படமான மின்மினி சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் இதுவரைக்கும் வராத பயண அனுபவத்தின் அடிப்படையில் கதையை அமைத்து கைதட்டல் வாங்கியிருக்கிறார் இயக்குனர் ஹலீதா ஷமீம். படத்தில் இடம்பெற்றிருக்கும் மெலடி பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
மின்மினி படத்தை பார்க்க வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மகள் கதீஜா பற்றி பேசியிருக்கும் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பேசும்போது, என்னுடைய மகள் கதீஜாவை கடந்த பத்து ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் இசையில் அவருடைய முன்னேற்றைத்தைப் கவனித்திருக்கிறேன். முதல் படத்திலேயே தரமான இசையைக் கொடுத்திருக்கிறார். இதை நான் அப்பாவாக சொல்லவில்லை. படமும் நன்றாக தயாராகியிருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு மின்மினி படம் புதிதாக இருக்கிறது. கதீஜா இசை பயின்றுவரும்போது லாக் டவுன் நேரத்தில் லாஸ் ஏஞ்சலிலிருந்து இசைக்குறிப்புகளை கொடுத்து வாசிக்க வைத்திருந்தேன். அதுவே நல்ல பயிற்சியாக இருந்தது. இடையில் இசைப்படிப்பை விட்டிருந்தார். பிறகு மீண்டும் தொடர்ந்து கற்றுக்கொண்டார். முதல்பட இசையமைப்பாளருக்கு நல்ல டீம் அமைவது கடினம். அது கதிஜாவுக்கு கிடைத்திருக்கிறது என்று பேசியிருந்தார்.
அதே மேடையில் படக்குவினரிடம் அவர் தனிப்பட்ட முறையில் பேசியபோது, கதீஜா டுவிட்டரில் ஒரு பதிவு போட்டால்கூட அவரை லட்சக்கணக்கான பேர் விமர்சனம் செய்தார்கள். அவர்களுக்கெல்லாம் சரியான செருப்படி கொடுத்திருக்கிறார் என்று மகள் கதிஜாவின் தோளை தட்டி உற்சாகப்படுத்தினார். அப்பா பாராட்டிப் பேசியதைக்கேட்ட கதீஜா உணர்ச்சி வயப்பட்டு கண் கலங்கினார்.
பொதுவாக ரகுமான் சமூக வளைதளங்களில் தனது கருத்துக்களை பதிவிட்டு எல்லாவற்றுக்கும் பதில் சொன்னது கிடையாது. ஆனால் அவர் தனது மகளை விமர்சிக்கும் பலருக்கும் பதிலடியாக அவர் கொடுத்திருக்கும் இந்த கருத்து கவனிக்கூடியதாக இருக்கிறது.
தனது மகளை பின் தொடரும் லட்சக்கணக்கான ரசிகர்களில் பலருக்கும் பதிலடியாக இந்தப்படத்தில் தனது இசையைக் கொடுத்திருக்கிறார் என்று அவர் கூறியிருப்பதன் மூலம் பொதுவெ:ளியில் பெண்களுக்கு எதிரான கருத்துகளை யாராவது முன் வைத்தால் அதனை கண்டு அஞ்சாமல் எதிர்த்து தங்களின் உழைப்பின் மூலம் பதில் சொல்ல வேண்டும் என்கிற அவரது உற்சாகப்பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.