சீன அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜிங்பிங் பதவியேற்று சில வாரங்கள்தான் ஆகிறது. ஆனால் அதற்குள்ளாகவே அவருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் சீனாவில் தொடங்கி இருக்கிறது. ”எங்களுக்கு பேரரசர்கள் தேவையில்லை. முகக் கவசங்கள் தேவையில்லை. கோவிட் பரிசோதனைகள் தேவையில்லை. எங்களுக்கு தேவை சுதந்திரம்” என்ற கோஷத்துடன் போராட்டக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் சீன மக்கள்.
அந்நாட்டின் முக்கிய நகரங்கள் பலவும் போராட்டங்களால் நிம்மதி இழந்திருக்க, மக்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது சீன அரசு. சீன மக்களின் இந்த தீவிர போராட்டத்துக்கு முக்கிய காரணம் கொரோனாவைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ள சில கட்டுப்பாடுகள்.
சர்வதேச அளவில் கொரோனாவின் பாதிப்பு சற்று குறைந்துவரும் நிலையில், சீனாவில் அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 36,082 பேர் அறிகுறியற்றவர்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் சுகாதார ஆணையம் வெளியிட்டது. இந்த எண்ணிக்கையானது அதற்கு முன்தினம் 35,183 ஆக இருந்தது.
இதை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வியாழனன்று ஜின்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி நகரில் குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு வந்து சேருவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு இது முக்கிய காரணம் என்றும் செய்திகள் பரவ, மக்கள் கொந்தளித்துள்ளனர். இதன் காரணமாகவே அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
தீவிபத்துதான் இந்த போராட்டத்துக்கான காரணம் என்று கூறப்பட்டாலும், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மக்களின் நடமாட்டத்தை சீன அரசு கட்டுப்படுத்தி வைத்திருப்பததுதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் தணிக்கை முறையைக் கண்டித்து வாசகங்கள் எதுவும் எழுதப்படாத வெற்று பேனர்களை ஏந்திக்கொண்டு ஷாங்காய் நகரில் ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நான் என் நாட்டை அதிகம் விரும்புகிறேன். ஆனால் இந்நாட்டு அரசை நான் விரும்பவில்லை. என் நாட்டில் நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். ஆனால் அப்படி இருக்க முடியவில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அரசு எங்களை சிறைவைக்கிறது. ஊரடங்கின் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு விஞ்ஞான ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இந்த அரசு தேவையில்லாமல் எங்களை வீட்டில் சிறைவைத்து வாழ்வாதாரங்களை நசுக்குகிறது” என்கிறார்.