No menu items!

பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டி! – மிஸ் ரகசியா

பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டி! – மிஸ் ரகசியா

“பிரதமர் ராமேஸ்வரத்துக்கு வரப் போறாராம்” என்றபடி ஆபீசுக்குள் எண்ட்ரி கொடுத்தாள் ரகசியா.

“நாடாளுமன்றத் தேர்தல்ல ராமேஸ்வரத்துல பிரதமர் நிக்கப் போறதா வதந்தி பரவுதே. அதுக்கும் இந்த நியூஸுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?”

“அது பத்தி தெளிவா தெரியல. ஆனா அவருக்காக ராமேஸ்வரத்துல சிறப்பு பூஜைகள் நடக்கப் போறதா சொல்றாங்க. வெறும் பூஜைக்காக பிரதமர் வந்தா நல்லா இருக்காது இல்லையா. அதனால ராமேஸ்வரத்துக்கு பிரதமர் வரும்போது அங்க சில நலத்திட்ட பணிகளையும் பிரதமர் தொடங்கி வைப்பார்னு காவிக் கட்சிக்காரங்க சொல்றாங்க. அதோட காசி தமிழ் சங்கமம் கூட்டத்தில் கலந்துக்கிட்டவங்களை இந்த நிகழ்ச்சியில கவுரவிக்கவும் பிரதமர் திட்டமிட்டு இருக்காராம்.”

“அதிமுக தலைவரை விமர்சிச்சு பேசக் கூடாதுன்னு பாஜக நிர்வாகிகளுக்கு நட்டா உத்தரவு போட்டிருக்காரே?”

“ஆனாலும் உள்ளூர் பாஜக தலைவர்கள் எடப்பாடியை திட்டிட்டுதான் இருக்காங்க. அண்ணாமலை மேல காவல் துறை வழக்கு பதிவு செஞ்சதைக் கண்டித்து சமீபத்துல சென்னைல பாஜக போராட்டம் செஞ்சது. ஆனா அந்த போராட்டத்துல பேசுனவங்க முதல்வர் ஸ்டாலினைவிட எடப்பாடியைத்தான் அதிகமா திட்டியிருக்காங்க. ஒரு மாவட்டச் செயலாளர் பேசும்போது, ‘திறமையற்ற எடப்பாடி… ஆளுமையற்ற எடப்பாடி…’ன்னு கடுமையா விமர்சிச்சு இருக்காரு. மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன் அவர்கிட்ட இருந்து மைக்கை பிடுங்கி இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்கார்”

“அதிமுககாரங்களும் பாஜகவை விமர்சனம் பண்ணிக்கிட்டுதானே இருக்காங்க”

“ஆமாம். அண்ணாமலையை கிண்டல் பண்ணி கடம்பூர் ராஜூ பேசினார். டெபுடேஷன்ல அரசியலுக்கு வந்தவர்னு கேலி பண்ணி மேடைல பேசுனார். கடம்பூர் ராஜு இப்படி பேசுனதுக்கு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டிச்சு அறிக்கை வெளியிட்டிருக்கார். நெருக்கடி காலத்துல நாங்க உங்களோட இருந்தோம்னெல்லாம் சொல்லி அந்த அறிக்கையில அதிமுகவை கடுமையா சாடி இருக்கார். இதுதான் கள நிலவரம். இப்படிப்பட்ட சூழல்ல நட்டாவோட முயற்சி எந்த அளவுக்கு இந்த கட்சிகளோட தொண்டர்கள் மத்தியில இணைப்பை ஏற்படுத்தும்னு தெரியல.”

“ஆனா எடப்பாடி பழனிசாமி ஃபுல் ஸ்பீட்ல போறாரு போல இருக்கே?”

“ஆமாம். இப்ப இடைக்கால பொதுச்செயலாளரா இருக்கற எடப்பாடி கூடிய சீக்கிரம் பொதுச் செயலாளர் ஆவார்னு சொல்றாங்க. அதுக்காக பொதுக்குழு கூடற வரை அவர் காத்திருக்க மாட்டார். இந்த மாசத்துக்குள்ள கட்சியோட செயற்குழுவை கூட்டி அதிமுக அவரை பொதுச் செயலாளரா தேர்ந்தெடுக்கும்னு ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க.”

“மதுரை விமான நிலையத்துல அமமுக கட்சிக்காரர் ஒருத்தர் அவரை அவமானப்படுத்துனது பெரிய நியூஸா ஆயிடுச்சே.”

“அதுக்குப் பழிவாங்கத்தான் அடுத்த நாளே அந்த கட்சியோட முக்கிய நிர்வாகிகளை அவர் கட்சியில சேர்த்திருக்காரு. சமீபத்துல முன்னாள் அமைச்சர்கள்கிட்ட பேசின எடப்பாடி, ‘ஒருங்கிணைந்த அதிமுகவைத்தானே பாஜக விரும்புது. அப்படின்னா அதுபடியே செஞ்சுடுவோம். ஓபிஎஸ் அணியில இருந்து அவரைத் தவிர மத்த அத்தனை பேரையும் இழுத்துடுவோம். அமமுகல இருந்து டிடிவி தினகரன் தவிர்த்து மத்தவங்களை கட்சியில சேர்த்திடுவோம். அதேமாதிரி சசிகலா ஆதரவாளர்களையும் சேர்த்துடுவோம்’னு சொல்லி இருக்காரு.”

“அப்ப வைத்தியலிங்கம் மாதிரி ஆட்களையெல்லாம் இழுத்துடுவாஅங்கன்னு சொல்லு.”

“வைத்தியலிங்கம் வருவாரான்னு தெரியல. வைத்தியலிங்கத்தோட ஆதரவாளர்கள் அவர்கிட்ட ‘கட்சி சின்னம் எல்லாம் எடப்பாடி கைக்கு போயிடுச்சு. நாங்களும் எங்க எதிர்காலத்தை பார்க்க வேணாமா?’ன்னு கேட்டிருக்காங்க. அதுக்கு வைத்தியலிங்கம், ‘உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அதைச் செய்யுங்க. நான் திரும்ப அங்க வர முடியாது. அப்படியே வந்தாலும் எனக்கு பழைய மரியாதை கிடைக்காது. அதனால உங்க இஷ்டப்படி நீங்கள் செய்யுங்க’ன்னு சொல்லி இருக்கார்.”

“இப்படியே போனா ஓபிஎஸ் கூடாரம் சீக்கிரமே காலியாடுமே?”

“அந்த நிலை வரக்கூடாதுன்னுதான் உடனே ஒரு மாநாட்டையோ போராட்டத்தையோ நடத்தச் சொல்லி அவருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கார் பன்ருட்டி ராமச்சந்திரன். ஓபிஎஸ்ஸும் இந்த அட்வைஸைக் கேட்டு மாநாடு நடத்தறதுக்கு இடம் தேடிட்டு இருக்காராம்.”

“திருமாவளவன் வைகோவை சந்திச்சிருக்காரே?”

“சமீபத்துல கொடுத்த ஒரு பேட்டியில இலங்கைத் தமிழர்கள் பத்தின கேள்விக்கு பதிலளிச்ச திருமாவளவன் வைகோவை குறை சொல்றா மாதிரி பேசி இருக்கார். மதிமுக நிர்வாகிகள் அதை விமர்சிச்சு அறிக்கையெல்லாம் விட்டாங்க. ஏற்கெனவே திமுகவோட கசப்பான மனநிலை இருக்கும்போது மதிமுகவையும் பகைச்சுக்க வேணாமேன்னுதான் வைகோவை நேர்ல சந்திச்சு திருமாவளவன் விளக்கம் கொடுத்திருக்கார். அப்ப திமுக பத்தி சில குறைகளை திருமா சொல்ல, அதுக்கு வைகோ திமுகவுக்கு ஆதரவா பேசி இருக்கார். இந்த சந்திப்புக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்கிட்ட பேசின திருமாவளவன், ‘நிலைமை சரியில்லை. நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்’னு சொல்லி இருக்கார். அவர் அப்படி சொன்னதுக்கு இன்னும் ஒரு காரணம் இருக்குன்னு சொல்றாங்க”

“அது என்ன காரணம்.”

“சமீபத்துல முதல்வர் ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திச்சு பேசி இருக்காரு. மேலோட்டமா நெய்வேலி நிறுவனம் தொடர்பான விஷயத்தைப் பேச இந்த சந்திப்பு நடந்ததா சொன்னாலும், இந்த சந்திப்பின்போது கூட்டணி பத்தியும் அவங்க பேசினதா சொல்றாங்க. கூட்டணிக்கு வந்தா 2 எம்பி சீட்களையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் தர்றதா முதல்வர் அன்புமணிகிட்ட சொன்னாராம். அதுக்கு அப்பாகிட்ட பேசி பதில் சொல்றேன்னு அன்புமணி சொன்னாராம். இது நடந்தா திமுக கூட்டணியில இருந்து விலக வேண்டி வரும்னு திருமாவளவன் நினைக்கிறார். அதான் நிர்வாகிகள்கிட்ட இப்படி பேசி இருக்கார்.”

”ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினரா ஆனதும் காங்கிரஸ்ல கோஷ்டி பூசல் ஜாஸ்தியாயிடுச்சுனு சொல்றாங்களே?”

“உண்மைதான். தன்னோட பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சில காங்கிரஸ் தலைவர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் இளங்கோவன் கூப்பிடலையாம். இதுல அவங்களுக்கு கோபம் இதுபத்தி விஜயதரணி அவர்கிட்ட கேட்டிருக்காங்க. அதுக்கு ஈவிகேஎஸ், ‘நான் தேர்தல்ல ஜெயிக்க யார் வேலை பார்த்தாங்களோ அவங்களைத்தானே அழைக்க முடியும்’ன்னு சொல்லி இருக்கார்.”

“சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர் வேணாம்னு சொன்னதா கேள்விப்பட்டேனே. இதனால அந்த பதவியில இருக்குற செல்வப் பெருந்தகை சந்தோஷப்பட்டிருப்பாரே?”

“இதுக்காக செல்வப்பெருந்தகை ஈவி கே எஸ்ஸுக்கு நன்றி சொல்லப் போயிருக்கார். அதுக்கு இளங்கோவன், ‘நீங்க இந்த நன்றியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சொல்லுங்க. அவர்தான் உங்களுக்கு தலைவர் பதவி வேண்டாம் தேவையற்ற குழப்பம் வரும்னு சொல்லி என்னை சம்மதிக்க வச்சார்’னு சொல்லி இருக்கார். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரியை நீக்கணும்னு கேட்ட தலைவர்கள்ல செல்வப் பெருந்தகையும் ஒருத்தர். இன்னும் சொல்லப்போனா இதுக்கு முதல்ல குரல் கொடுத்ததே அவர்தான்”

“அழகிரி பெருந்தன்மையான தலைவர்தான்”

“இன்னொரு விஷயத்தை சொல்றேன். கேட்டுக்குங்க. ஒரு காலத்துல தமிழ்நாட்டிலேயே முக்கியமான நபரா உலா வந்த ஒருத்தர் சிக்கல்ல இருக்கிறார். சொத்துக்களையும் விக்க முடியல. இப்ப வாழ்ற லைஃப்ஸ்டைலையும் விட முடியல. என்ன பண்றதுனு தெரியாம உறவுகள் கிட்டயும் நட்புகள் கிட்டயும் போன் அடிச்சு உதவி கேட்கிறாராம். இவர் போன் வந்தாலே எல்லோரும் சைலண்ட் மோடுக்கு போயிறாங்கலாம்”

“யார் அந்த பிரபலம்”

“நம்ம வளர்ப்பு மகன் தான்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...