பானுமதி, சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற நடிகைகளுக்கு நிகராக தமிழகம் கொண்டாடிய நடிகை எம்.என்.ராஜம். 7 வயதுமுதல் 70 வயது வரை கதாநாயகி, வில்லி, குணச்சித்திரம் என அனைத்து வகையான வேடங்களையும் ஏற்று நடித்த அவரது பயணத்தின் சில துளிகள்…
7 வயதிலேயே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார் எம்.என்.ராஜம். அப்போதே படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். எம்.என்.ராஜம் நடித்த முதல் படம்’ மனிதனும் மிருகமும்’ இதில் டி. ஆர். ராமச்சந்திரனுக்கு ஜோடியாக நகைச்சுவை வேடத்தில் நடித்தார். எம்.என்.ராஜத்தை உயரத்தில் தூக்கி நிறுத்திய படம் ‘ரத்தக் கண்ணீர்’.
ரத்தக் கண்ணீர் பட அனுபவத்தைப் பற்றிச் சொல்லும் எம்.என்.ராஜம், “அப்படத்தில் எம்.ஆர்.ராதா அண்ணனை நான் உதைத்து தள்ளிவிடும் காட்சியில் அவரை உதைப்பதற்கு பயந்தேன். உதைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். என்னால் முடியாது என்று மறுத்து விட்டேன். அப்போது அவர் நாடகவுலகிலும் சினிமாவுலகிலும் மிகப் பெரிய நடிகர். நான் மதிக்கின்ற கலைஞர். அவரை எட்டி உதைக்க மறுத்தேன். ஆனால் அவர்தான் விடவில்லை. பயப்படாதே… உதைத்து தள்ளு, என்று அவர் பல தடவை சொன்ன பிறகு தான் நிஜமாகவே அவரை எட்டி உதைத்தேன்.அவர் உருண்டு கீழே விழுவார். அந்த காட்சிஅவ்வளவு தத்துரூபமாக வர காரணம்” என்கிறார்.
தன் திரையுல பயணத்தைப் பற்றிச் சொல்லும் எம்.என்.ராஜம், “1955-ம் ஆண்டு ‘ரத்தக் கண்ணீர்’ ரிலீஸ் ஆன பிறகு நான் மிகவும் பிசியாகிவிட்டேன். ஒரே நாளில் 3 படங்கள் வரை கால்ஷீட் கொடுத்திருந்தேன். அப்போது முதல் நான் படு பிசியாகி விட்டேன். ஒரே நாளில் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பேன். வருடத்திற்கு 20 படங்கள் என்னும் கணக்கில் நடித்திருக்கின்றேன். பிறகு திருமணம் செய்துகொண்டு 2 குழந்தைகளைப் பெற்றதால் சில காலம் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்தேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெய்சங்கர் நடித்த ‘ உனக்கும் எனக்கும் ‘என்ற படத்தில் கதாநாயகி பாரதிக்கு அம்மாவாக நடித்தேன். நான் செய்த அக்கா, அண்ணி, அம்மா வேடங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்ட படம் இது. சுமார் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன்” என்கிறார்.
‘பாவை விளக்கு’ படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி சொல்லும் எம்.என்.ராஜம், “இப்படத்தில் சிவாஜி ஷாஜகானாகவும், நான் மும்தாஜாகவும் நடித்தோம். இதன் படப்பிடிப்புக்காக ஆக்ராவுக்கு அழைத்துப் போனார்கள். நான் வடநாட்டுக்கு போனது அதுதான் முதல் முறை. தாஜ்மஹாலைச் சுற்றி ‘காவியமா… நெஞ்சின் ஓவியமா?..’ பாடலைப் படமாக்கினோம். அப்போது அங்கு வந்த மக்கள் எங்களை நிஜமான ராஜா ராணி என்று நினைத்துக் கொண்டார்கள். பலரும் பரவசத்தோடு, மரியாதையோடு எங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்” என்கிறார்.
அந்தக் கால திரையுலகைப் பற்றிச் சொல்லும் எம்.என்.ராஜம், “எங்கள் காலத்தில் திரையுலகில் ஒற்றுமையும், சகோதர பாசமும் அதிகமாக இருந்தது. ராஜ சுலோசனாவும் நானும் பெரும்பாலும் வில்லி வேடத்தில்தான் நடித்தோம். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் நாங்கள் காரை எடுத்து கொண்டு ஜாலியாக சென்று படம் பார்ப்போம். பின்னர் பப்பி தோட்டத்துக்கு சென்று சாப்பிட்டு, ஏழு மணி வரை ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருப்போம்.