தமிழ் பத்திரிகை உலகின் மூத்த புகைப்பட கலைஞர் சு. குமரேசன் நேற்று நள்ளிரவு மாரடைப்பால் காலமானார். விகடன் குழுமத்தில் 30 ஆண்டுகள் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய குமரேசன், தற்போது தமிழ்நாடு நியூஸ் நவ் ஊடகத்தில் முதன்மை பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். மகாமதுர கவி வி.வே. முருகேச பாகவதரின் பேரனான இவர் தன் கேமிராவின் மூலமாக சரித்திர தருணங்களை கவிதைகளாக படைத்து வந்தவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான தமிழக அரசியலின் முக்கிய சம்பவங்களின் நேரடி சாட்சியாக விளங்கியவர் குமரேசன்.
விகடனில் குமரேசனுடன் பணியாற்றிய அனுபவத்தை நினைவு கூர்ந்துள்ள பத்திரிகையாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான முருகேஷ்பாபு, “மிக நீண்ட நெடிய பயணம் எங்களுடையது. விளையாட்டு தொடர்பான செய்திகளுக்காகச் செல்லும்போது இருவரும் தனித்தனியே சுற்றுவோம். ஆனால், நான் எழுதும் செய்திகளுக்குப் பொருத்தமான படங்களைத் தருவார்.
ஒருமுறை ரஜினி ஒரு பிரஸ் ரிலீஸ் தரப் போகிறார் என்று தினசரி அலுவலகங்களுக்குத் தகவல் செல்ல எல்லோரும் புகைப்படக்காரர்களை அனுப்பி பிரஸ் ரிலீஸை வாங்கி வரச் சொல்லிவிட்டார்கள். அந்தத் தகவல் குமரேசனுக்கு வர, வேறொரு அசைன்மெண்டுக்குச் செல்லும் வழியில் ரஜினி வீட்டுக்குப் போயிட்டு போயிருவோம் என்று அழைத்துச் சென்றார்.
அங்கே பிரஸ் ரிலீஸ் இல்லை. பிரஸ் ரிலீஸ் என்று அவர் அலுவலகத்தில் தவறாகச் சொல்லிவிட்டார்கள். ரஜினி தன் தரப்பைச் சொன்னால் நிருபர்கள் எழுதிக்கொள்வார்கள் என்று காத்திருந்தார். இப்போது பிரஸ் ரிலீஸை ரெடி செய்து பிரிண்ட் எடுத்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். யார் எழுதுவது?
“சார்… எங்க ரிப்போர்ட்டர் இருக்காரு… அவரு எழுதித் தருவாரு… நீங்க எல்லாருக்கும் அனுப்பிடுங்க” என்றான் குமரேசன். ரஜினி எனக்குச் சொன்னார்… நான் எழுதிக் கொடுத்தேன். ரஜினிக்காக மன்றம் வைத்து ஊரில் போஸ்டர் எல்லாம் ஒட்டிய ஒருவன் அவரோடு சரி சமமாக அமர்ந்து பேசி எழுதி விவாதித்தேன். அந்த வாய்ப்பு குமரேசனால் கிடைத்தது” என தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் சுதிர் எழுதியுள்ள அஞ்சலி குறிப்பில், “விகடனில் நான் விளையாட்டுத் துறை சார்ந்த செய்திகளை எழுதிய காலத்தில், எனக்கு ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் குமரேசன். ராகுல் திராவிட், தோனி, சானியா மிர்சா, கங்குலி என பல ஆளுமைகளை பேட்டி எடுக்க பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தனது தொடர்புகள் எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர். என்னுடைய பல கட்டுரைகளுக்கு இவர் எடுத்த படங்கள் மிகப்பெரிய அளவில் வலிமை சேர்த்தது.
பயிற்சியாளர் சேப்பலிடம் ஏற்பட்ட முரண்பாடுகளால் 2005-ம் ஆண்டில் கங்குலியின் கேப்டன் பதவி பறிபோனது. அதன்பிறகு சில காலம் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார் கங்குலி. அதன் பின் சேப்பலின் வழிக்கு வந்ததால் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். அப்போது சென்னையில் நடந்த பயிற்சி ஒன்றில் சேப்பல் முன்பு கங்குலி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் மண்டியிடுவதுபோல் சேப்பலின் முன்பு கங்குலி குனிய, நொடிப்பொழுதில் குமரேசன் படம் எடுத்தார். அதைப் பார்த்த்தும் விகடன் ஆசிரியரான கண்ணன், ‘சேப்பலிடம் மண்டியிட்ட கங்குலி’ என்ற ரீதியில் என்னை கட்டுரை கட்டுரை எழுதச் சொல்ல, பின்னர் அந்த படத்தை இரண்டு பக்க அளவில் வைத்து, ‘சேப்பலே சரணம்’ என்ற தலைப்பில் அது கட்டுரையான வெளியானது. இப்படி அவர் எடுத்த படங்களால் பல கட்டுரைகளுக்கு புதிய பரிணாமம் கிடைத்தது” என தெரிவித்துள்ளார்.
‘ஆனந்த விகடன்’ முன்னாள ஆசிரியர் ரா. கண்ணன், “விகடன் குழுமத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றியவன். இந்தியாவை தன் கேமராவில் பார்ததவன். எனக்கு சென்னையை அறிமுகப்படுத்தியவன். வெகுளியான சிரிப்பும் வியர்வை வழியும் முகமுமாக தமிழக வரலாற்றை, தன் கேமரா விரல்களால் எழுதியவன். உழைப்பால் உயர்ந்தவன் களைத்துச் சரிந்துவிட்டான். குமரேசன் கையில் இன்றுதான் கேமரா இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பலரும் குமரேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள். அந்தளவு, சமகால அரசியல் வரலாற்றின் நடமாடும் என்சைக்ளோபீடியாவாகவும் புகைப்படத்துறையில் தேர்ந்த நிபுணராகவும் திகழ்ந்தார், குமரேசன். அவரது திடீர் மறைவு தமிழ் புகைப்பட இதழியலுக்கு பேரிழப்பு.