No menu items!

Paytm – சிக்கியது எப்படி?

Paytm – சிக்கியது எப்படி?

பலசரக்கு கடைகள் தொடங்கி மின்சார கட்டணம், சினிமா டிக்கெட், மொபைல் ரீசார்ஜ் உட்பட அனைத்துக்கும் ஸ்மார்ட்போன் மூலம் பணம் செலுத்த பயன்படுத்தப்பட்ட பேடிஎம் ஆப் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதனால், பேடிஎம் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஏன் இந்த தடை?

பேடிஎம் செய்த தவறு என்ன என்று பார்ப்பதற்கு முன்…

பேடிஎம் வளர்ந்த கதை

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் 1978 ஜூன் 7 அன்று பிறந்தவர் விஜய் சேகர். இவர்தான் பேடிஎம்மை உருவாக்கி, வளர்த்தவர். அதிபதி.

விஜய் சேகர் அப்பா பிரகாஷ், பள்ளி ஆசிரியர்; அம்மா ஆஷா சர்மா. உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரர், இரண்டு சகோதரிகள். அப்பா பிரகாஷ் சம்பளம், பிள்ளைகள் படிப்பு மற்றும் குடும்ப செலவுகளுக்கே போதுமானதாக இருந்தது. இதனால் மூத்த சகோதரியின் திருமணத்தை கடன் வாங்கிதான் முடித்துள்ளார்கள்.

ஆரம்பக் கல்வியை ஹர்துவாகஞ்சில் சராசரியான ஒரு பள்ளிகளில்தான் படித்தார் விஜய் சேகர். தொடர்ந்து 1994ஆம் ஆண்டு டெல்லி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் படிக்க விஜய் சேகருக்கு சீட் கிடைத்தது. அப்போது அவருக்கு 16 வயது பூர்த்தியாகவில்லை. ஆனாலும், டெல்லி பல்கலைக்கழகம் அவருக்கு அனுமதி அளித்தது.

டில்லி பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே, ஒரு தனியார் விமான நிறுவனத்தின் டெல்லி-மும்பை அட்டவணைக்கான வெப் புரோகிராமை எழுதினார். இதற்காக அவருக்கு ரூ. 1,000 வருமானம் கிடைத்தது. முறையான கல்விச் சான்றிதழ் இல்லாமல் கூட தன்னால் சம்பாதிக்க முடியும் என்று உணர்ந்த சர்மா, கல்லூரிக் காலத்திலேயே, தன் நண்பருடன் இணைந்து இணையம் தொடர்பான ஸ்டார்ட்-அப் ஒன்றை தொடங்கினர். விசிட்டிங் கார்டில் ஹாஸ்டல் அறை எண்ணை தான் அவர்கள் கொடுத்திருந்தனர்.

தொடர்ந்து இந்தியாவின் சுற்றுலாத் துறை சார்ந்த ஒரு இணையதளத்தை உருவாக்கினார். பின்னர், டெல்லியைச் சேர்ந்த ஒரு ஊடக நிறுவனம் இந்த இணையதளத்தை வாங்கியது. அப்போது விஜய் சேகர் சர்மாவுக்கு ஓரளவு பணமும் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பதவியும் கிடைத்தது.

இரண்டு வருடங்கள் கழித்து, One97 எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். வாடிக்கையாளர்களுக்கு நகைச்சுவைகள், செய்திகள், கிரிக்கெட் அப்டேப்கள், ஜோதிடம் போன்ற தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் இந்த நிறுவனம் வழங்கியது. நாட்டில் தொலைத்தொடர்பு துறை வளர்ந்து வந்த நிலையில், அதனுடன் சேர்ந்து இந்த நிறுவனமும் வளர்ந்தது.

2009ஆம் ஆண்டில், சர்மா மொபைல் பேலன்ஸ் டாப்-அப் வழங்கும் பேடிஎம்மை அறிமுகப்படுத்தினார். 2013இல் ரிசர்வ் வங்கியின் அனுமதியை பேடிஎம் பெற்றது. அடுத்தாண்டு பேடிஎம் அதன் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தியது. ரூ. 100-200 சிறிய நிதி பரிவர்த்தனைகளுக்கு மொபைல்களைப் பயன்படுத்த டெலிகாம் ஆபரேட்டர்களோ, வங்கி நிறுவனங்களோ ஆர்வம் காட்டாத நிலையில், ஆந்த இடத்தை வாலட் உரிமங்கள் மற்றும் செயலிகள் மூலம் பேடிஎம்மால் நிரப்ப முடிந்தது அதன் வளர்ச்சிக்கு காரணமானது.

இந்நிலையில், 2016இல் பேடிஎம்முக்கு ஜாக்பாட் அடித்தது. பிரதமர் நரேந்திர மோடி ரூ. 500, ரூ. 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடிரேன அறிவித்தார். நாட்டில் இருந்த 85 சதவீதத்துக்கும் அதிகமான ரூபாய் நோட்டுகள் ஒரே இரவில் மதிப்பிழந்தன. அதன் விளைவுகள் அடுத்த பல மாதங்கள் நீடித்தன. இதனால் மக்கள், ரொக்கப் பரிவர்த்தனைக்கு பதிலாக கிரெடிட் கார்டுகள், இணைய வங்கி சேவை, இணைய ஷாப்பிங் போன்ற வழிகளை பயன்படுத்துவது அதிகரித்தது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை பேடிஎம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமானது. மூன்று மாதங்களில் பேடிஎம் பயனர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்தது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவைச் சேர்ந்த சுமார் 19 கோடி கணக்குகள் பேடிஎம்மில் இணைந்தன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் படங்களுடன் நாடு முழுவதும் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டு, பேடிஎம் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேடிஎம் வளர்ந்தது. 2015இல் நிறுவனத்தின் வருமானம் ரூ. 336 கோடியாக உயர்ந்தது. 2016இல், ஜப்பானின் புகழ்பெற்ற சாஃப்ட் பேங்க், சீனாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா, அமெரிக்க புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே போன்றவற்றின் முதலீட்டை பேடிஎம் ஈர்த்தது. நிறுவனத்தின் மதிப்பு 4.86 பில்லியன் டாலர்களை எட்டியது. 2017இல் வருமானம் 828.6 கோடியாக அதிகரித்தது. நிறுவனத்தின் மதிப்பு 9.4 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. கழிவறைகூட இல்லாத வீட்டில் வசித்த விஜய் சேகர் சர்மா ரூ.33,000 கோடி நிறுவனத்துக்கு அதிபதியானார்.

சர்ச்சைகளும் முறைகேடுகளும்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனம் வேகமாக வளர்ந்ததுக்கு பின்னால் விமர்சனங்களும் வைக்கப்பட்டன. அதை உறுதிபடுத்துவதுபோல் பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் பேடிஎம் விளம்பரம் செய்ததுடன், விஜய் சேகரின் சகோதரரும் பேடிஎம்-ன் துணைத் தலைவருமான அஜய் சேகர் சர்மாவின் ரகசிய வீடியோயும் வெளியானது. அதில் பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்.எஸ்.எஸ்) விஜய் சேகர் நெருக்கமானவர் என்றும், காஷ்மீரில் கல் வீச்சு நடத்தியவர்கள் பற்றிய தகவல்களை பிரதமர் அலுவலகத்திற்கு விஜய் சேகர் நிறுவனம் வழங்கியதாகவும் கூறினார். இதுதவிர, பேடிஎம் தனது செயலி மற்றும் இணையத்தில் பிரதமருக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் அஜய் சேகர் கூறினார்.

2020ஆம் ஆண்டில் பேடிஎம் சூதாட்ட விதிகளை மீறுவதாகக் குறிப்பிட்டு பேடிஎம் செயலியை கூகுள் அதன் பிளேஸ்டோரிலிருந்து அகற்றியது.

தொடர்ந்து, கடந்த சில வருடங்களாக பேடிஎம் நிறுவனம் KYC விதிகளைப் பின்பற்றாதது குறித்து ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்தது. நிதியியல் தளங்கள் மற்றும் பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு மத்தியில் முறைகேடாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள விதிமுறைக்கு மீறிய நிதி பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதையும், KYC ப்ரீபெய்டு நிதி திட்டங்களில் அளவுக்கு அதிகமாகத் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதையும் ஆர்பிஐ கண்டுபிடித்ததன் அடிப்படையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இது குறித்து பேடிஎம் தொடர்ந்து மெத்தனமாகவே இருந்தது.

இதனையடுத்து, Paytm விதிமுறைகளுக்கு இணங்காதது குறித்து நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள அமலாக்க இயக்குநரகம் (ED), உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம் (PMO) மூன்று அமைப்பிற்கும் RBI கடிதம் எழுதியது. இப்போது இந்த நான்கு அமைப்புகளும் பேடிஎம் பிரச்சனை குறித்து ஆலோசனை செய்து வருகிறது.

இந்நிலையில்தான் பேடிஎம் நிறுவனத்தின் முக்கியக் கிளை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் பணச் சலவை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகச் சந்தேகித்து, பிப்ரவரி 29க்குப் பின் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் பணத்தை எடுக்கவும் டெப்பாசிட் செய்யவும் தடை விதித்துள்ளது, ஆர்பிஐ. Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சியை நோக்கி பேடிஎம்

ஆர்பிஐயின் நடவடிக்கையை அடுத்து பேடிஎம் ஆப்பை டவுன்லோடு செய்வது சரிந்துள்ளது. அதாவது ஆண்ட்ராய்டு செயலி பதிவிறக்கங்கள் ஜனவரி 27ஆம் தேதி அன்று 90,039 ஆக இருந்த நிலையில், பிப்ரவரி 3 அன்று 68,391 ஆகக் குறைந்துள்ளது. 24 சதவிகிதம் சரிந்துள்ளது. இன்னொரு பக்கம் பேடிஎம் போட்டி நிறுவனங்களான போன்பே, பிம், கூகுள் ஆப்களின் டவுண்லோடு அதிகரித்துள்ளது.

இன்னொரு பக்கம் ரிசர்வ் வங்கியின் உத்தரவைத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான ஒன் 97 (One97) கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. வாரன் பப்பெட் உட்பட அமெரிக்கா, சீனா, ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் தங்கள் பங்குகளை விற்றதாக கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கி முடக்கம், விலகும் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் பேடிஎம்-மின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...