தமிழ் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று ‘பசி’. தமிழின் தலைசிறந்த 100 திரைப் படங்களில் ஒன்றாகவும் இப்படம் போற்றப்படுகிறது. இதனால், இதன் இயக்குநர் துரை, படத்தின் பெயருடனே இணைத்து ’பசி’ துரை என்றே அழைக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்த துரை (வயது 84) இன்று காலமானார்.
ஒட்டேரியில் தொடங்கிய கனவு
‘பசி’ துரையின் இயற்பெயர் செல்லதுரை. சாமுவேல் ஜாக்கப் – ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக 25.02.1940 அன்று பிறந்தவர். சென்னை ஓட்டேரியிலுள்ள ஒரு பள்ளியில்தான் படித்தார். ஆனால், படிப்பில் செல்லதுரைக்கு சிறிதும் ஆர்வமில்லை. அதேநேரம் சிறு வயதிலேயே சினிமா பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளில் சேர்ந்த செல்லத்துரை, கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து திரைப்பட இயக்குநர் ஆனார்.
முதல் படம்
இயக்குநராக துரை அறிமுகமான முதல் திரைப்படம் ‘அவளும் பெண்தானே’ (1975). இப்படத்தில் முத்துராமன், சுமித்ரா, எஸ்.வி. சகஸ்ரநாமம், பண்டரிபாய், தேங்காய் சீனிவாசன், வி. கே. ராமசாமி, மனோரமா, காந்திமதி உட்பட பலரும் நடித்திருந்தனர். ‘ஸ்ரீ பாண்டுரங்கா புரொடக்சன்ஸ்’ என்ற பெயரில் நடிகை பண்டரிபாய் இப்படத்தை தயாரித்தார்.
‘அவளும் பெண் தானே’ விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. பாலியல் தொழிலாளியின் வாழ்வை களமாகக் கொண்ட இப்படம் பற்றி ‘கல்கி’ இதழில் துணிச்சலாக புனையப்பட்ட படம் விமர்சனம் என்று எழுதியிருந்தனர். மேலும், துரை எழுதிய வசனங்களுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
‘அவளும் பெண் தானே’ படத்திற்காக துரை தேசிய விருதை வென்றார். இது தவிர தமிழ்நாடு அரசு வழங்கும் சிறந்த இயக்குநருக்கான விருது, கலைமாமணி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ரஜினி நடிப்பில் ஒரே ஆண்டில் முன்று படங்கள்
முதல் படத்திலேயே வித்தியாசமான கருத்துகளால் தமிழ்த் திரை ரசிகர்களை நிமிர்ந்து பார்க்க வைத்த துரை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் ‘பாவத்தின் சம்பளம்’ (1978), ‘சதுரங்கம்’ (1978), ‘ஆயிரம் ஜென்மங்கள்’ (1978); கமல்ஹாசன் நடிப்பில் ‘நீயா’ (1979), ‘பசி’ (1979), சிவாஜி கணேசன் நடிப்பில் ‘துணை (1982) உட்பட மொத்தம் 47 திரைப்படங்களை துரை இயக்கியுள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் துரை படங்கள் இயக்கியுள்ளார். ஏழை மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக திரைப்படங்களில் எடுத்து கூறியதற்கு இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இயக்குநர் மட்டுமன்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் துரை.
சினிமா வாழ்வில் திருப்புமுனை
1979ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி வெளியான ‘பசி’துரையின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.
ஜெயபாரதி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் சென்னையின் கூவம் ஆற்றின் கரையோரம் வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. நகரத்தின் கடைக்கோடியில் வாழும் மக்களின் பாடுகளையும் மிகவும் எளிய வாழ்க்கையையும் மிகவும் உண்மையாகவும் நேர்த்தியாகவும் இந்தப் படத்தில் துரை சொல்லியிருந்தார்.
சிறந்த இயக்குநர், திரைப்படம், சிறந்த நடிகை என்று மூன்று தேசிய விருதுகளோடு மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளை இந்த எதார்த்த திரைப்படம் குவித்தது.
இதனைத் தொடர்ந்து மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலசந்தர் என 1970களில் எழும்பி வந்த தமிழின் ‘புதிய அலை’ சினிமா இயக்குநர்களில் தவிர்க்க முடியாத கலைஞர் – இயக்குநராக துரையும் கொண்டாடப்பட்டார்.
காலம்கடந்த காவியம்
‘பசி’ துரையின் நிகரற்ற படம் என்றால் காலங்கடந்த காதல் காவியம் அவருடைய ‘கிளிஞ்சல்கள்’. இன்றைய தலைமுறையினரும் பார்த்து நெகழ்கிறார்கள்.
‘கிளிஞ்சல்கள்’ 1981ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் உட்பட பலரும் நடித்திருந்தனர்.
இந்து மதத்தைச் சார்ந்த இளைஞன் பாபு; கிறித்தவப் பெண் ஜூலி. இருவரும் காதலர்கள். ஆனால், மத வேறுபாடு காரணமாக இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடும் எதிர்ப்பையும் மீறி, பாபு – ஜூலி இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருக்கிறார்கள். இதனால், ஜூலியின் தந்தை ஸ்டீபன் அவளை ஒரு அறையில் பூட்டி வைக்கிறார். பாபுவின் தந்தை மாணிக்கமும் அவரை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. இந்நிலையில், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ஜூலி தற்கொலை செய்துகொள்கிறார். இதைக் கேள்விப்பட்டு சுடுகாட்டிற்கு விரைந்து செல்லும் பாபு, ஜூலியின் உடலை தகனம் செய்யும் போதே இறந்துவிடுகிறார்.
‘கிளிஞ்சல்கள்’ விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 175 நாள்கள் வெற்றிகரமாக ஓடியது.
திரைத்துறையில் இருந்து ஒதுங்கிய துரை
1990ஆம் ஆண்டு வெளியான ‘புதிய அத்தியாயம்’ படத்துக்குப் பின்னர் திரையுலகில் இருந்து துரை ஒதுங்கினார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அவருடைய மகன்கள் யாரும் சினிமாவில் இல்லை. வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடைசிக் காலத்தில் ரஜினியின் அறிவுறுத்தலின் படி சென்னையை அடுத்த புறநகரில் வேப்பம்பட்டு என்ற இடத்தில் ஒரு கல்யாண மண்டபத்தை நிறுவினார், துரை. அதன் மேற்பகுதியில் அவர் குடியிருந்து கொண்டு, கீழ்ப்பகுதியைக் கல்யாண காரியங்களுக்காக வாடகைக்கு விட்டுவந்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக துரை இன்று (22-04-2024) உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு திரை உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.