சென்னை புத்தகக் காட்சி இந்த ஆண்டு கடும் கண்டனங்களை சந்தித்துள்ளது. கடை ஒதுக்குவதில் பாரபட்சம் என பதிப்பாளர்கள் கொதிக்கிறார்கள்; எந்த கடை எங்கே உள்ளது என அறிவிப்பு இல்லை என வாசகர்கள் புலம்புகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல், சேறும் சகதியுமான பாதை ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் சிறு மழைக்கு கூட தாங்காத மேற்கூரையால் பல லட்சம் புத்தகங்கள் நனைந்து நாசமாகியுள்ளது. என்னதான் நடக்கிறது சென்னை புத்தகக் காட்சியில்?
மோசமான கூரையால் பாழான புத்தகங்கள்
எழுத்தாளர் சாரு நிவேதிதா தான் முதலில் புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பாளர்களின் குழப்பமான ஏற்பாடுகள் மற்றும் கடை ஒதுக்குவதில் இருக்கும் பாரபட்சம் பற்றி, ‘முதல்வருக்கு இரண்டு கடிதங்கள்’ என சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தொடர்ந்து, ‘4 ஸ்டால் எடுத்தால் வாடகை 3.5 லட்சம்’ என்ற அநியாயத்தை எழுத்தாளர் அராத்து கொதித்துப் போய் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக அராத்து எழுதியிருந்த பதிவில், “தமிழ்நாட்டின் அறிவுத்தளத் தொடர்ச்சியாகவும் சங்க காலம் தொட்டு தொடர்ந்து வரும் இலக்கியத் தொடர்ச்சியாகவும் பதிப்பகளைப் பார்க்கிறேன் பார்க்கிறேன். இந்த செயல்பாட்டின் குரல்வளையை நெறிப்பது போலுள்ளது பபாசியின் செயல்பாடுகள். பதிப்பகங்களுக்கு வருடத்தில் ஒரே ஒரு முறைதான் கொண்டாட்டமான காலம் வரும். அதுதான் புத்தகக் கண்காட்சி. இந்த சொற்ப நாட்களில் கொஞ்சம் லாபம் வரும். அதை வைத்துக்கொண்டு வருடம் முழுதும் ஓட்ட வேண்டும். இப்போது அதிலும் மண். ஒரு பதிப்பகம் 3.5 லட்சம் ரூபாய் கொடுத்து ஸ்டால் எடுத்து, இன்றைய காலகட்டத்தில் லாபம் பார்க்க முடியுமா? ஒரு சங்கம் என்றால் அது சார்ந்து இயங்குபவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். எல்லா சங்கங்களும் இப்படித்தான் இயங்கி வருகின்றன. ஆனால், பபாசி மட்டும் பதிப்பகங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது’ என்கிறார் அராத்து.
சாரு நிவேதிதா, அராத்து இருவரின் குரலை பிரதிபலிப்பது போலிருந்தன அடுத்தடுத்தடுத்து வந்த நாட்கள். சிறு மழைக்கே புத்தகக் காட்சி உள்ளே பந்தலில் ஈரம் தேங்க ஆரம்பித்தது. வெளியேயோ சேறும் சகதியுமாய் மாறிய பாதைகளால் வாசகர்கள் கடும் எரிச்சலடைந்தனர்.
ஒவ்வொரு வருடமும், எந்த வரிசையில் என்னென்ன பதிப்பகங்களின் ஸ்டால்கள் உள்ளன என்று, ஒவ்வொரு வரிசையின் முன்பும் ஒரு அறிவிப்பு போர்ட் வைத்திருப்பார்கள். மேலும், ஸ்டால்கள் பட்டியலும் புத்தகக் காட்சி வாசலிலேயே கொடுக்கப்படும். ஆனால், இந்த வருடம் அதெல்லாம் காணோம்.
ஸ்டால்கள் ஒதுக்குவதில் பாரபட்சம்
பதிப்பகங்களுக்கு கடை ஒதுக்குவதிலும் ஜனநாயகத் தன்மை இல்லாமல் பாரபட்சம் காட்டியுள்ளனர், பபாசி நிர்வாகிகள். குறிப்பாக அப்படி ஒதுக்கப்பட்ட கடைகளில் மழை தண்ணீர் நுழைந்து புத்தகங்கள் பாழாகியுள்ளன. இது குறித்த ஜீரோ டிகிரி பதிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் வேதனையுடன் வெளியுள்ள அறிக்கை வைரலாகியுள்ளது.
ராம்ஜி நரசிம்மன் அறிக்கையில், “நாங்கள் பதிப்பகம் தொடங்கி 6 வருடங்கள் முடிந்து ஏழாம் வருடம் அடி எடுத்து வைக்கிறோம். இந்த ஆறு வருடத்தில் 700 புத்தகங்களை பதிப்பித்துள்ளோம். 150க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எங்களை நம்பி தங்கள் புத்தகங்களை எங்களிடம் பதிப்பித்துள்ளார்கள். இதை வெறும் வியாபாரமாக மட்டுமே நாங்கள் பார்க்கவில்லை. பல லட்சங்கள் செலவு செய்து பல தமிழ்ப் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளோம். இலக்கிய உலகில் எங்கள் பதிப்பகத்தை பலருக்கு நன்றாகவே தெரியும்.
நியாயமாக புத்தகங்கள் எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டும், பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் நன்றாக வளர வேண்டும் என்று நினைக்கும் எந்த அமைப்பும் நீங்கள் போன வருடம் இத்தனை புத்தகங்களை பதிப்பித்தீர்கள், இத்தனை அரங்குகள் எடுப்பீர்கள் இந்த வருடம் நீங்கள் வெளியிட்ட புத்தகங்கள் பெருகி இருக்கின்றன, ஆகையால் உங்களுக்கு பெரிய அரங்கம் வேண்டுமா? நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்டால் அது வளர்ச்சிக்கு வழி. அதே அமைப்பு நீங்கள் போன வருடம் நான்கு அரங்குகள் எடுத்தீர்கள், இந்த வருடம் உங்களுக்கு ஒரு அரங்குதான் என்று சொல்வது இந்தத் தொழிலை எப்படி வளர்க்கும் என்று எனக்குப் புரியவே இல்லை.
எங்களுக்கு நடந்தது இதுதான். கடந்த நான்கு வருடங்களாக 4 அரங்குகள்தான் எடுத்து வருகிறோம். உறுப்பினராக அல்லாமல் இருப்போருக்கு என்ன தொகையோஅதை கொடுத்துதான் எடுத்து வருகிறோம். இந்நிலையில், இந்த வருடம் உங்களுக்கு இரண்டு அரங்குகள்தான் ஒதுக்க முடியும். நான்கு அரங்குகள் வேண்டுமென்றால் ‘நான்-மெம்பர்’ கேட்டகிரியில் மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்றார்கள். அவ்வளவு பணம் கொடுத்து அரங்கு எடுத்து நிச்சயமாக போட்ட பணத்தை எடுக்கவே முடியாது. ஆகையால் இரண்டு போதும் என அதற்குண்டான தொகையை செலுத்திவிட்டேன்.
ஆனால், பத்துக்கு 20 என்ற சைஸ் இருக்கும் ஓர் அரங்கை கொடுத்திருக்கிறார்கள். இதில் நிற்கவும் முடியவில்லை நடக்கவும் முடியவில்லை எல்லா புத்தகங்களையும் வைக்கவும் முடியவில்லை. போதாக்குறைக்கு மோசமான கூரையால் மழை நீரில் 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை பாழாகிவிட்டது.
இத்தனைக்கும் மெம்பரே இல்லாத பல புதிய நிறுவனங்களுக்கு இரண்டு அரங்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களை சார்ந்தவர்களுக்கு இன்னும் இரண்டு அரங்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர, புத்தகத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாத பல அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன” என நொந்துபோய் எழுதியுள்ளார்.
இது குறித்து எழுத்தாளருமும் மொழிபெயர்ப்பாளருமான இந்திரன், ‘தமிழை முதலில் கடல் அழித்தது. பிறகு கரையான். அடுத்து தீ. மழை வெள்ளம். இப்போது பபாசி அழிக்கிறது” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
புத்தகக் காட்சியை அரசே நடத்த வேண்டும்
சென்னை புத்தக கண்காட்சியை நடத்தும், பபாசி என சுருக்கமாக அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மீது புகார்கள் வருவது புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தகக் காட்சியின் போது புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளன.
சில வருடங்களுக்கு முன்பு ஈழ விடுதலை போராட்டம் பற்றிய நூல்கள் சென்னை புத்தகக் காட்சியில் தடை செய்யப் பட்டது. சென்ற முறை சால்ட் பப்ளிகேஷன் உட்பட சில பதிப்பகங்களுக்கு ஸ்டால்கள் தர மறுத்ததால் அவர்கள் சாலையில் கடை விரித்து போராட்டம் நடத்தும் அளவுக்கு சென்றது. கலைஞர் கருணாநிதி தனது சொந்தப் பணம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து நிறுவிய பொற்கிழி பரிசிற்கு பல வருடங்கள் அவர் பெயரையே போடாமல் இருந்தனர். இதை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வேதனையுடன் பதிவு செய்த பின்பே விருதில் கலைஞரின் பெயரை சேர்த்தார்கள்.
புத்தகக் காட்சியையை நடத்த அரசு மானியமாக வருடம்தோறும் 75 லட்சம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், வாசகர்களிடம் பபாசி நுழைவுக் கட்டணம் பெறுவதும் ஆண்டுதோறும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், இதுவரையான சம்பவங்களை எல்லாம் மிஞ்சும் வகையில் இந்த வருட வேதனைகள் அமைந்துள்ளது. இதனால், சென்னைப் புத்தகக் காட்சியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
அரசு நடவடிக்கை எடுக்குமா?