தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குறித்த நெகிழ்ச்சியான பதிவொன்றை இரு தினங்கள் முன்பு எழுத்தாளர் இந்துமதி ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். அந்தளவு என்ன நடந்தது? எழுத்தாளர் இந்துமதி ‘வாவ் தமிழா’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே…
முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். மொபைலில் அழைத்திருக்கிறார்; வாசலில் கேட்டை அசைத்து சப்தம் எழுப்பியிருக்கிறார். ஆனால், நீங்கள் அவற்றையெல்லாம் கவனிக்கவேயில்லை. அவர் திரும்பிச் சென்ற பின்னர்தான் கவனித்திருக்கிறீர்கள். அன்று என்ன நடந்தது?
அன்று சரஸ்வதி பூஜை. எனக்கு மிகவும் பிடித்தமான பூஜை. சரஸ்வதியின் கருணை, அவள் போட்ட பிச்சைதான் என் எழுத்து என்று நினைப்பவள் நான். இவ்வளவு பெயரும் புகழும் சரஸ்வதியால்தான். ஆகவே வேறு எந்த பண்டிகையும் கொண்டாடாத நான் சரஸ்வதி பூஜையை மட்டும் சிறப்பாக கொண்டாடுவேன். ஆத்மார்த்தமாக கலை மகளுக்கு நன்றி சொல்லுவேன். இந்த வருடமும் நவராத்திரி கொலு வைத்து கொண்டாடினேன்.
சென்ற வருடம் சரஸ்வதி பூஜைக்கு துர்காவும் அவரது சகோதரி ஜெயந்தியும் என் வீட்டுக்கு வந்திருந்தாங்க. அதனால், இந்த வருடமும் சரஸ்வதி பூஜைக்கு வருமாறு அழைத்திருந்தேன். அன்று காலை போனில் பேசிய போது வருகிறேன் என்று துர்கா சொல்லியிருந்தாங்க. ஆனால், வேலைக் களைப்பில் அதை மறந்துவிட்டேன்.
நான் அன்று அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சரஸ்வதியை அலங்கரித்து பூஜை முடித்தேன். பின்னர் வெளியில் சென்றுவிட்டு, அழைத்தவங்க வீடுகளுக்கு எல்லாம் போய்விட்டு, களைத்துப் போய் ஆறு மணியளவில் வீடு திரும்பினேன். வாட்ச்மேன் அன்று அவரது ஒரு உறவினர் மறைவு காரணமாக ஊருக்கு போயிருந்தார். வாட்ச்மேன் வரமாட்டார் என்பதால் 7 மணிக்கெல்லாம் கேட்டைப் பூட்டி விட்டு வெளிவாசல் விளக்குகளையெல்லாம் அணைத்து விட்டு உள் கதவையும் தாழிட்டு விட்டு வந்துவிட்டேன்.
தினமும் மாலையில் ஒருமுறை குளிக்கும் பழக்கம் உள்ளவள் நான். குளித்துவிட்டு இரவு உணவு தயார் செய்வதில் முனைந்தேன். தொடர்ந்து நான், என் கணவர், மறுமகள் மூவரும் டைனிங் ஹாலில் அமர்ந்து பேசியபடி சாப்பிட்டு முடித்து, டைனிங் டேபிள், சமையலறையை சுத்தம் செய்துவிட்டு படுக்கை அறையில் வைத்துவிட்டு வந்த மொபைலை எடுத்துப் பார்த்தால், துர்கா நாலைந்து முறை போன் செய்திருக்கிறாங்க.
அப்போது எப்படியிருந்தது, பதற்றமாக இருந்திருக்குமே?
எனக்கு பகீர் என்றது. மனசு வலித்தது. எப்படி மறந்தேன். நான் செய்தது தவறாக தெரிந்தது எனக்கு. பதற்றம் இல்லை, வருத்தமாக இருந்தது.
திரும்ப அவரை அழைத்தபோது என்ன சொன்னீர்கள்? அவர் என்ன சொன்னார்?
உடனே அவங்களுக்கு போன் செய்தேன். “என்னங்க நான் வீட்டுக்கு வந்திருந்தேங்க. கேட் பூட்டி இருந்திச்சு. லைட் எல்லாம் அணைந்திருந்திச்சு. கேட்டைத் தட்டினேன். டிரைவர் வேறு பூட்டை இழுத்து சத்தப்படுத்தினார். நாலைந்து தரம் போன் பண்ணினேன். நீங்க எடுக்கல. திரும்பி வந்துட்டேங்க” என்றார்.
“ஸாரிங்க, ரொம்ப ஸாரி. பிளீஸ் திரும்பி வாங்க. இல்லாட்டி நான் ரொம்ப கஷ்டப்படுவேங்க” என்றேன்.
“சரிங்க, நான் கோபாலபுரத்தில் தான் இருக்கேன். மாமியாருக்கு உடம்பு சரியில்லை என்று வந்தேன். இதோ வரேங்க” என்றார்.
மடமட வென்று கேட்டைத் திறந்து வாசல் விளக்குகளையெல்லாம் போட்டு காத்திருந்தேன். ஐந்தே நிமிடத்தில் திரும்பி வந்தார். கேட் வரை போய் கை பிடித்து அழைத்து வந்தேன்.
உள்ளே வந்தவர் பாபாவை, சரஸ்வதியை, பூஜை அறையின் சகல தெய்வங்களையும் வணங்கினார். அவரது காலில் விழுந்து வணங்கிய என் மகன், மருமகளை ஆசீர்வதித்தார். பிறகு என் கணவரிடமும் என்னிடமும் ஆசி பெற்றார்.
“எல்லாம் கிடைக்குங்க, உங்களுடையது மாதிரி நிஜமான எதிர்பார்ப்பு இல்லாத அன்பு கிடைக்காதுங்க. அது கிடைத்த நாங்க பாக்கியசாலி” என்று அவர் கூறியதைக் கேட்ட நான் சிலிர்த்துப் போனேன்.
மீண்டும் அவர் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். நாம் வந்தபோது கதவைத் திறக்கவில்லை, நமது அழைப்பை பார்க்கவில்லை என்றெல்லாம் அவருக்கு எந்த வருத்தமும் இல்லையா?
கொஞ்சமும் வருந்தவில்லை, கோபப்படவில்லை. இதில் என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது அதுதான். அவர் எப்பேர்ப்பட்ட மனுஷி. நான் ரொம்ப சாதாரண மனுஷி. ஆத்மார்த்தமான அன்பு தவிர வேறு இல்லாதவள். அந்த அன்புக்காக, அந்த அன்பை மதித்து வீடு தேடி வந்து பூட்டிக் கிடந்த கதவைத் தட்டி, போனில் அழைத்து பதிலற்று திரும்பிப் போனவர் என் வேண்டுகோளை ஏற்று திரும்பி வந்தார் என்றால், எவ்வளவு கிரேட் அவங்க. சாதாரணமான நமக்கே கோபம் வரும். ஈகோ தலைக்கு ஏறும். ஆனால், அவர்… அந்த எளிமை, மதிக்கும் தன்மை, அன்பைப் புரிந்துகொண்டு, அதே அன்பைத் திருப்பித் தந்து, அவர் உயர்ந்து நிற்பதன் காரணம் இதுதான். ஆண்டவன் அவரை உயரத்தில் உட்கார வைத்திருப்பதன் காரணமும் இதுதான். எப்போதும் அவரை எனக்குப் பிடிக்கும், இப்போது அதிகம் பிடிக்கிறது.
அவர் எப்போதுமே இப்படிதானா? எளிமையாக இருப்பாரா?
ஆமாம், எப்போதும் இப்படித்தான். நீங்கள் நம்ப மாட்டீர்கள். அவங்க வீட்டில் இருந்து பாபா கோவிலுக்கு நடந்தே வருவாங்க. பாபா கோவிலில் உட்கார்ந்தாங்க என்றால், சிலை, மாதிரி அரை மணி நேரம் உட்கார்ந்து வேண்டுவாங்க. முதல்வர் மனைவி என்கிற எண்ணமோ தலைக் கனமோ சிறிது கூட அவங்களிடம் பார்க்க முடியாது.
உங்களுக்கு எப்போதிருந்து துர்கா ஸ்டாலினுடன் நட்பு. அவரது புத்தக வெளியீட்டு விழாவிலும் நீங்கள் பேசினீர்கள்? அவருடன் உங்கள் நட்பு தொடங்கியது எப்படி?