சினிமாவில் ரசிகர்களுக்கு நடிகைகள் மீது ஒரு காதல் கலந்த ஈர்ப்பு இருப்பதைப் போலவே இயக்குநர்களுக்கு ஆஸ்கர் விருதுகளின் மேல் எப்போதுமே ஒரு மவுசு இருக்கும்.
இதனால்தான் நம்மூர் இயக்குநர்களில் பலர், எடுத்த எடுப்பிலேயே ‘ஆஸ்கர் விருது வாங்கணும்’ என்று ஒரு பேட்டி கொடுப்பார்கள்.
ஆஸ்கர் விருது மீது இப்படியொரு கிறக்கமும் மயக்கமும் இருப்பதால்தான் ஓவ்வொரு ஆண்டும் வந்துப்போகும் இன்ஃப்ளூயன்ஸா ஜூரத்தைப் போல படைப்பாளிகளுக்கு ஆஸ்கர் ஜூரம் வந்து போகும்.
இப்போது அந்த ஆஸ்கர் ஜூரம் ஹை டெம்ப்ரேச்சரில் எகிற ஆரம்பித்திருக்கிறது.
2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள போகும் படம் எது என்று இதுவரையில் விடை தெரியாமல் இருந்தது. இந்த ரேசில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் ’ஆர்.ஆர்.ஆர்.’ படமும், அனுபம் கேர் நடித்து பரபரப்பாக பேசப்பட்ட. ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படமும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொண்டாட்டமாக மிகப்பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘பிரம்மாஸ்திரா’ படமும் இருப்பதாக பேச்சு அடிப்பட்டது. இந்தப் படங்களில் ஏதாவது ஒன்றுதான் தேர்வாகும் என்று அதிகம் முணுமுணுக்கப்பட்டது.
ஃப்லிம் பெடரேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் திரு. டி.பி.அகர்வால், 2023 ஆஸ்கர் விருதிற்கு குஜராத்திப் படம் ஒரு மனதாக தேர்வாகி இருக்கிறது என்று தெரிவித்ததும் கூகுளில் குஜராத்தி சினிமா பற்றிய் தேடல்கள் அதிகமாகி இருக்கிறது.
மறுபக்கம் தங்கள் படம்தான் தேர்வாகும் என எதிர்பார்த்த பான் – இந்தியா இயக்குநர்கள் எல்லோரும் தங்களது படத்திற்காக திட்டமிட்டிருந்த ப்ரமோஷன் சமாச்சாரங்களையெல்லாம் ரத்து செய்துவிட்டு, சோஷியல் மீடியா அக்கெளண்ட்களை சைன் ஆஃப் செய்துவிட்டு அமைதியாகிவிட்டார்கள்.
யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு குஜராத்திப் படம் இப்போது இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ‘செலோ ஷோ’ என்பதுதான் அந்தப் படத்தின் பெயர்.
‘கடைசி சினிமா காட்சி’ என்பதுதான் ‘செலோ ஷோ’வின் அர்த்தம்.
17 தேர்வாளர்களைக் கொண்ட குழு ‘செலோ ஷோ’வை ஒரு மனதாக தேர்ந்தெடுத்து இருக்கிறது. ஆஸ்கர் விருதில் ‘பெஸ்ட் இன்டர்நேஷனல் ப்யூச்சர் ஃப்லிம்’ பிரிவில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்படும் படமாக தேர்வாக கடும் போட்டி நிலவியது.
மொத்தம் 13 படங்கள் போட்டியில் இருந்தன. இதில் ‘பிரம்மாஸ்திரா’, ’த காஷ்மீர் ஃபைல்ஸ்’, ’அனேக்’, ’ஜூண்ட்’, ‘பதாய் தோ’, ‘ராக்கெட்ரி’ என 6 ஹிந்திப் படங்கள் அடங்கும். தமிழில் ‘இரவின் நிழல்’ களத்தில் குதித்தது. தெலுங்கில் இருந்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ போட்டிக்குள் நுழைந்தது. ’அபாரஜிதோ’ என்ற பெங்காலி படமும், குஜராத்திப் படம் ‘செலோ ஷோ’வும் முன்மொழியப்பட்டது. இந்தப் பட்டியலில் இன்னும் சில படங்களும் அடங்கும்.
’செலோ ஷோ’ – ஒரு குறிப்பு
‘சம்ஷாரா’. ‘ஆங்க்ரி இந்தியன் காட்டெஸ்சஸ்’, ‘வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ்’ படங்களை இயக்கிய பான் நலின் ‘செலோ ஷோ’வின் இயக்குநர். தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியிருப்பதாக கூறுகிறார். சினிமா மீது ஒரு சிறுவனுக்கு உண்டாகும் காதல்தான் ஒன்லைன்.
செளராஷ்டிராவில் இருக்கும் ஒரு தொலைதூர கிராமம்தான் கதையின் களம். அங்கு வசிக்கும் ஒன்பது வயதாகும் சிறுவன் சமய். இவனுக்கு சினிமா மீது அப்படியொரு காதல், தனது கோடைக்கால விடுமுறை முழுவதையும் ஒரு திரையரங்கின் ப்ரொஜெக்டர் அறையில் இருந்தபடி திரைப்படங்கள் பார்த்தபடியே செலவிடுகிறான் என ‘செலோ ஷோ’ ஓடுகிறது.
இப்படம் அக்டோபர் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே ராபர்ட் டீனிரோவின் ‘ட்ரைபெக்கா ஃப்லிம் ஃபெஸ்டிவலில்’ வேர்ல்ட் ப்ரீமியர் ஷோவாக திரையிடப்பட்டது. இதையடுத்து ஸ்பெயினில் நடைபெற்ற 66-வது வேலாடொலிட் ஃப்லிம் ஃபெஸ்டிவலில் ’கோல்டன் ஸ்பைக்’ விருதையும், தட்டிச் சென்றிருக்கிறது.
’செலோ ஷோ’ தேர்வு செய்யப்பட்டிருப்பதை குஜராத்தி சினிமாவில் கொண்டாடி கொண்டிருக்க, மறுபக்கம் சில சலசலப்புகள் இருக்கத்தான் செய்கிறது.
சமூக ஊடகங்களில் இப்பொழுதும் எஸ்.எஸ். ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்காக பல ரசிகர்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ரசிகர், ’ஆர்.ஆர்.ஆர். படத்தை இப்பொழுது கூட ‘பெஸ்ட் பிக்சர்’ பிரிவில் பரிந்துரை செய்யலாம்’ என்று ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
அதேபோல் உலகப்புகழ் பெற்ற 1988-ல் அகாடமி அவார்டை வென்ற ‘சினிமா பாரடைசோ’ படத்தின் தழுவலைப் போல இப்படம் இருக்கிறது. அதனால் ஆஸ்கரில் இப்படம் விருதை வெல்ல வாய்ப்புகள் குறைவு’ என்றும் கமெண்ட் அடித்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள்.