ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளது. இதுபற்றி ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சமீபத்தில் மத்திய அரசுக்கு தனது பரிந்துரையை அனுப்பியது. 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், ஒரே நேரத்தில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதில் சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் தேர்தல்களை நடத்தும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மாநில அரசின் அனுமதி தேவை இல்லை எனவும் கூறப்பட்டது. அதே சமயம் இந்த திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம் எனவும் கூறப்பட்டது. அதோடு ஒரே நாடு ஒரே தேர்தலை வரும் 2029ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் சட்டமன்றங்களின் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு உபகரணங்கள், மனிதவளம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுமாறு குழு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஒரே நாடு ஒரே தேர்தல் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கு ஏராளமான கட்சிகளின் ஆதரவு கிடைத்திருக்கிறது. அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கு ஒரு அமலாக்கக் குழு அமைக்கப்படும்” என்றார்.