No menu items!

AI தந்தை ஜாஃப்ரிஹிண்டனுக்கு நோபல் பரிசு – என்ன செய்தார்?

AI தந்தை ஜாஃப்ரிஹிண்டனுக்கு நோபல் பரிசு – என்ன செய்தார்?

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியமான கட்டமைப்பான செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்கள் (artificial neural networks) சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இரண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் இயற்பியலுக்கான நோபல் பரிசை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், பிரிட்டனில் பிறந்து கனடாவில் பணியாற்றும் ஜாஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

“இந்த இரு ஆராய்ச்சியளர்களும், இன்றைய இயந்திரக் கற்றல் (machine learning) தொழில்நுட்பத்துக்கு அடித்தளமாக இருக்கும் முறைகளை உருவாக்க இயற்பியல் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்,” என்று சுவீடனின் அரச அறிவியல் கழகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஜாஃப்ரி ஹிண்டன் செயற்கை நுண்ணறிவின் தந்தை என்றழைக்கப்படுகிறார். செயற்கை நரம்பியல் வலைப் பின்னல்களில் ஜாஃப்ரி ஹின்டனின் முன்னோடி ஆராய்ச்சிதான் ‘ChatGPT’ போன்ற தற்போதைய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் உருவாக்கப்பட வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவில், நரம்பியல் வலைப்பின்னல்கள் என்பவை மனித மூளையைப் போலவே தகவல்களைக் கற்றுக்கொள்வது மற்றும் செயலாக்குவது போன்ற அமைப்புகளாகும். ஒரு மனிதரைப் போலவே, அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள இந்த நரம்பியல் வலைப்பின்னல், செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு உதவுகின்றன. இது ‘ஆழ்ந்த கற்றல்’ (deep learning) என்று அழைக்கப்படுகிறது.

தரவுகள், படங்கள் அகியவற்றைச் சேமித்து வைத்து, அவறைத் தேவைக்கேற்ப மறுகட்டமைப்பு செய்யும் ஒரு ‘நினைவுக் கட்டமைப்பை’ ஜான் ஹாப்ஃபீல்ட் உருவாக்கினார். ஜாஃப்ரி ஹின்டன், இந்தத் தரவுகள், படங்கள் ஆகியவற்றில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை அடையாளம் காணும் முறையைக் கண்டுபிடித்தார்.

இந்தக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த இவர்கள் இயற்பியலைப் பயன்படுத்தினர். அதைத் தொடர்ந்து இந்தக் கண்டுபிடிப்புகள் இயற்பியல் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகள் அணு இயற்பியல், விண்ணியல், காலநிலை மாற்றம், சோலார் செல்கள், மருத்துவ ஸ்கேன்கள் எனப் பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்டிருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.

“தொழில் புரட்சி எப்படி மனிதர்களின் உடல் வலிமையை மீறிச் சென்றதோ, அதேபோல் தங்கள் கண்டுபிடிப்புகள் மனிதர்களின் அறிவு வலிமையை மீறிச் செல்ல உதவின. ஆனால், இந்தக் கட்டமைப்புகள் மனிதர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் அபாயமும் உள்ளது. நான் கணிப்பது என்னவென்றால் 5 முதல் 20 ஆண்டுகளுக்குள், AI முழு கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும் என்ற சிக்கலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று ஜாஃப்ரி ஹின்டன் கூறியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய ஜாஃப்ரி ஹிண்டன் 2023-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து தனது பணியை ராஜினாமா செய்தார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இயற்பியலுக்கான நோபல் பரிசு இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடி பரிசுத் தொகையை கொண்டது. இது பரிசு அறிவிக்கப்பட்டுள்ள இருவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...