நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலருக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட ‘போலி’ டாக்டர் பட்டம் சர்ச்சையாகியுள்ளது. ஒரு தனியார் அமைப்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு அரங்கத்தை வாடகைக்கு பிடித்து அண்ணா பல்கலைக்கழகமே இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். மேனாள் நீதிபதி வள்ளிநாயகமும் இந்த தனியார் அமைப்பின் ‘பிராடு’ வேலையில் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்பின் முக்கிய நபரான ஹரீஷ் தலைமறைவாகியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தை ஹரீஷ் ஏமாற்றியது போல் ஐநா சபையையே ஏமாற்றி ஒரு ‘சித்து’ வேலையை அரங்கேற்றியுள்ளார், நித்தியானந்தா. இதுவும் சர்ச்சையாகியுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் போல் ஐநா சபையும் அதிர்ச்சியடைந்து இப்போது விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
என்ன நடந்தது? விரிவாக பார்ப்போம்…
பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும், ‘கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் கூறி வருகிறார். ஆனால், இந்த இடம் பற்றி பல ஊகங்கள் வெளியாகி உள்ளது வேறு விஷயம்.
இந்நிலையில், நித்தியானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் ‘கைலாசா’ தேசத்தின் பிரதிநிதிகள் சிலர், ஐக்கிய நாடுகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றும் காணொளி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தது. நீங்களும் பார்த்திருக்கலாம்.
ஜெனீவா கூட்டத்தில் கைலாசா பிரதிநிதிகள் கலந்துகொண்டதை அடுத்து கைலாசா தேசத்தை ஐநா சபை அங்கீகரித்துவிட்டதா என்ற கேள்வி எழுந்தது. தங்களை ஐ.நா அங்கீகரித்து விட்டது போல நித்தியானந்தாவின் சீடர்களும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விளக்கமளித்துள்ளது. அதில், “கைலாசா பிரதிநிதிகள் பிப்ரவரி மாதம் ஜெனீவாவில் இரண்டு ஐநா கூட்டங்களில் கலந்து கொண்டனர். முதலாவது கூட்டம், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான குழு (CEDAW) பிப்ரவரி 22ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்ததாகும். அதில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம், பிப்ரவரி 24ஆம் தேதி பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உரிமைகளுக்கான குழு (CESCR) நடத்திய நிலையான வளர்ச்சி குறித்ததாகும்.
பொது விவாதங்கள் தலைப்பில் நடந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுள்ள எவரும் பங்கேற்க முடியும். அதேபோல ஐநாவின் சில கிளை அமைப்புகளின் கூட்டத்தில் ஒரு தனிப்பட்ட நாட்டின் சார்பாக மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. தன்னார்வ அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
இந்த இரு ஐநாவின் கூட்டத்தில் எந்த அமைப்பு அல்லது நிறுவனத்தின் பெயரில் கைலாசா உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை ஆனால், ஐநாவின் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளின் பட்டியலில் கைலாசா நிச்சயம் இல்லை. இதில் இடம் பெற ஐ.நா பாதுாப்பு கவுன்சில் மற்றும் பொது சபை அனுமதி வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், கைலாசா பிரதிநிதிகள் பேசியதையும் ஐநா சபை நிராகரித்துள்ளது.