’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களால் மணி ரத்னத்திற்கோ, லைகா ப்ரொடக்ஷனுக்கோ எந்தளவிற்கு லாபம் என்பது தெரியவில்லை.
அதேபோல் விக்ரமிற்கோ, ஜெயம் ரவிக்கோ, கார்த்திக்கோ எந்தளவிற்கு பலன் என்று இன்னும் தெரியவில்லை, ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு படங்கள் கிடைக்குமா, சோபிதா துலிபாலா தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா என்ற நிலவரமும் கூட உறுதியாகவில்லை.
ஆனால் பிஎஸ் படங்களால் ரொம்பவே உற்சாகத்தில் இருப்பவர் த்ரிஷாதான்.
இடைப்பட்ட காலத்தில் வாய்ப்புகளே இல்லாமல் வீட்டில் கட்டாய ஓய்விலிருந்த த்ரிஷாவுக்கு இப்போது முக்கிய முன்னணி நடிகர்களின் படங்கள் கமிட்டாகி தொடர்ந்து வருகின்றன.
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தில் இப்போது விஜயுடன் நடித்து வருகிறார் த்ரிஷா.
அடுத்து தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸில் முன்னணியில் இருக்கும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் த்ரிஷா கமிட்டாவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
தனுஷ் தன்னுடைய 50-வது படவிஷயத்தில் மும்முரமாக இருக்கிறார். தற்போதைக்கு ’D50’ என பெயரிடப்பட்டிருக்கும் தனுஷின் கோல்டன் ஜுப்ளி படத்திலும் த்ரிஷா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தமிழ்ப்படங்கள் இப்படி ஒரு பக்கமிருக்க, மலையாளத்திலும் த்ரிஷாவுக்கு திடீர் மவுசு உருவாகி இருக்கிறது. இதனால் இயக்குநர் ராம், மலையாளர் சூப்பர்ஸ்டாரான மோகன்லாலை வைத்து இயக்கும் படத்திலும் த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
இந்தப்படங்களில் வரிசையாக கமிட்டானால், 2023 மற்றும் 2024-ல் த்ரிஷாவின் மார்க்கெட் மீண்டும் உச்சத்தில் இருக்கும் என்பதால் த்ரிஷா ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார்.
சிரஞ்சீவிக்கு புற்றுநோய்?
தெலுங்கு சினிமா ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சி. நம்பவே முடியவில்லை. கடவுள் காப்பாற்ற வேண்டுமென சமூக ஊடங்கங்களில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
காரணம், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு புற்றுநோய் தாக்கிவிட்டது என்று ஒரு வதந்தி மிக வேகமாகப் பரவி வருகிறது.
முதலில் இதைக் கண்டுகொள்ள சிரஞ்சீவி, பிறகு ரசிகர்கள் மத்தியில் இந்த வதந்தி மிகவேகமாக பரவியதால், உடல்நிலை குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
‘எனக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை. ஆனால் புற்றுநோய் பாதிப்பு இல்லாத கட்டிகள் இருப்பது வழக்கமாக செய்து கொள்ளும் பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. இது பெருங்குடலில் உருவாகும் வழக்கமான கட்டிகள்தான். ஆனால் இந்தகட்டிகளை சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டால் அவை கேன்சர் கட்டிகளாக மாறிவிடவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
பெருங்குடலுக்கான காலன் ஸ்கோப் டெஸ்டை எடுத்தபோது, புற்றுநோய் அல்லாத கட்டிகள் இருந்தன. அதை மருத்துவர்கள் கண்டுபிடித்து நீக்கிவிட்டார்கள். ஆனால் சில ஊடகங்களில் இதை தேவையில்லாமல் பெரிதுபடுத்திவிட்டன, தவறான செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன’ என்று வருத்தப்பட்டிருக்கிறார் சிரஞ்சீவி.