பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சைபர் கிரைம் வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். மேலும் அவரது தரப்பில், சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு நீக்கப்பட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்டதாகவும், வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை என கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்.10 முதல் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்
ஏப்.,10 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “வரும் 10-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் போட தகுதி பெற்றவர்களாவர். அவர்கள், தனியார் மையங்களில் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் தனது பள்ளி, ஆசிரமத்திற்கு செல்லக்கூடாது என்றும், சாட்சியங்களை கலைக்க முயன்றால் ஜாமீன் மனு ரத்து செய்யப்படும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி
தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் உள்ள “வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்” என்ற பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
மக்கள் நலப்பணியாளர்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது இதை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இவர்களுக்கு மாதம்தோறும் மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கப்படும் என்றார்.