இன்றைய தினம் (ஆகஸ்ட் 29) தேசிய விளையாட்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது. விளையாட்டுத் துறைக்கும் வீர்ர்களுக்கும் இந்த நாளில் இந்தியர்கள் அனைவரும் மரியாதை செலுத்துகிறார்கள். எத்தனையோ நாட்கள் இருக்க, ஆகஸ்ட் 29-ம் தேதியை இந்தியா ஏன் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறது என்ற கேள்வி விளையாட்டுத் துறையைப் பற்றி தெரியாத பலருக்கு வரலாம். இந்த கேள்விக்கான பதில் தியான் சந்த். இன்று அவரது பிறந்த நாள். அதனாலேயே இந்த நாளை நாம் தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடுகிறோம்.
இப்போதுள்ள இளம் தலைமுறையினரில் பலருக்கு தியான் சந்த்தை அவ்வளவாக தெரியாது. அவர் ஒரு முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் என்று மட்டும்தான் தெரியும். ஆனால் உண்மையில் அவர் ஒரு சாதாரண ஹாக்கி வீரர் மட்டுமல்ல, அதையெல்லாம் கடந்து, ஹாக்கி விளையாட்டின் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்தவர். கிரிக்கெட்டுக்கு பிராட்மேன், குத்துச்சண்டைக்கு முகமது அலி, கால்பந்துக்கு பீலே என்று ஒவ்வொரு ஆட்டத்துக்கும் உள்ள சூப்பர் ஹீரோக்களைப் போல, ஹாக்கி விளையாட்டின் சூப்பர்மேனாக திகழ்ந்தவர் தியான் சந்த். இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ம் தேதியைத்தான் இந்திய அரசு தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறது. அந்த அளவுக்கு ஹாக்கி விளையாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தியான் சந்த்.
1905-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரக்யா ராஜில் தியான் சந்த் பிறந்தார். தியான் சந்தின் அப்பா ராணுவத்தில் இருந்தார். அதனால் தனது சிறு வயது முதலே ராணுவ குவார்ட்டர்ஸில் உள்ள ஹாக்கி கேம்ப்பில் தியான் சந்த் பயிற்சி பெற்று வந்தார். நாளடையில் ஹாக்கி மட்டையும், பந்தும் தியான் சந்த் சொல்வதைக் கேட்கும் வகையில் இப்போட்டியில் மிகச்சிறந்த வீரராக உருவெடுத்தார்.
1922-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த தியான் சந்த், அங்கும் தனது ஹாக்கி ஆற்றலை வளர்த்துக்கொண்டார். ராணுவத்தில் இருக்கும்போது இரவு நேரங்களில் அவர் தீவிரமாக பயிற்சி பெறுவாராம். அதனால் சக வீரர்கள் அவரை ‘சந்த்’ (இந்தியில் நிலா) என்று செல்லமாக அழைத்துள்ளனர். இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்ட தியான் சந்த், 1928, 1932 மற்றும் 1936-ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதில் 1928-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மட்டும் இவர் 14 கோல்களை அடித்துள்ளார். 1932-ம் ஆண்டில் நடந்த ஒரு ஹாக்கி போட்டியில் இந்திய அணி 24-1 என்ற கோல்கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இபோட்டியில் மட்டும் தியான் சந்த் 13 கோல்களை அடித்தார்.
பொதுவாகவே மைதானத்தில் ஆட வந்துவிட்டால் குறைந்தபட்சம் ஒரு கோலையாவது அடிக்காமல் திரும்பமாட்டார் தியான் சந்த். ஆனால் ஒரு போட்டியில் அவரால் கோல் அடிக்க முடியவில்லை. இப்போட்டி முடிந்ததும் நடுவரிடம் சென்ற தியான் சந்த், “கோல் போஸ்ட்களின் அகலம் சில அங்குலங்கள் குறைவாக உள்ளன” என்று புகார் செய்தார். தான் கோல் அடிக்க முடியாததால்தான் தியான் சந்த் இப்படி புகார் செய்கிறார் என்று நடுவர் முதலில் நினைத்தார். ஆனால் பிறகு கோல்போஸ்ட்டை அளந்து பார்த்தபோது நிஜமாகவே அதன் அகலம் சற்று குறைவாக இருந்துள்ளது. இந்த அளவுக்கு ஹாக்கி விளையாட்டைப் பற்றி மட்டுமின்றி, ஹாக்கி மைதானத்தைப் பற்றியும் நுட்பமாக அறிந்தவராக தியான் சந்த் இருந்துள்ளார்.
பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தியான் சந்த்தின் ஆற்றலைப் பார்த்து வியந்த ஹிட்லர், அவர் ஜெர்மனிக்கு வந்தால் அந்நாட்டு குடியுரிமை வழங்கி, ஜெர்மன் ராணுவத்தில் மரியாதைக்குரிய பதவியையும் வழங்குவதாக அறிவித்தார். ஆனால் தியான் சந்த் அதை ஏற்காமல் இந்தியாவிலேயே தங்கிவிட்டார்.
தியான் சந்த் ஆடுவதைப் பார்த்த எதிர் அணி ஒன்று, அவரது ஹாக்கி மட்டையில் காந்தம் இருக்குமோ என்று சந்தேகித்து அதை உடைத்துப் பார்த்த சம்பவமும் உண்டு.