No menu items!

3 ஷிஃப்ட் வேலை செய்யுங்க!: இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி அடுத்த அதிரடி!

3 ஷிஃப்ட் வேலை செய்யுங்க!: இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி அடுத்த அதிரடி!

70 மணி நேர வேலை நேரத்தை தொடர்ந்து, இலவசங்கள் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சைக்குள்ளான இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, இப்போது அடுத்த அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். உள்கட்டமைப்பு துறையில் உள்ளவர்கள் 3 ஷிப்ட் வேலை செய்ய வேண்டும் என்று நாராயண மூர்த்தி தெரிவித்துள்ள சமீப கருத்து சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

பெங்களூருவில் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் ஜெரோதா இணை நிறுவனம் நிகில் காமத் உடன் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி உரையாடினார். அப்போது, “உள்கட்டமைப்பு தொழில் துறையில் ஈடுபட்டு வரும் நபர்கள் 3 ஷிப்ட் வேலை பார்க்க வேண்டும். காலை 11 மணிக்கு வந்து மாலை 5 மணிக்கு திரும்பும் ஒரே ஒரு ஷிப்ட் மட்டும் அவர்கள் வேலை பார்க்க கூடாது. பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் அதை தான் நான் பார்க்கிறேன். ஆனால், பிற நாடுகளில் இரண்டு ஷிப்ட்டில் வேலை பார்க்கிறார்கள். அது போல இங்கு மூன்று ஷிப்ட் இல்லை என்றாலும் இரண்டு ஷிப்டுக்கு என்னால் உறுதி அளிக்க முடியும். மற்ற நாடுகளை காட்டிலும் நாம் முன்னேற விரும்புகிறோம். அது நடக்க வேண்டும் என்றால் உள்கட்டமைப்புத் தொழில் துறையினர் 3 ஷிப்ட் வேலை செய்ய வேண்டும். அந்த வேலை நடக்க ஊழியர்களின் தேவை அறிந்து, அதை நிறைவேற்ற வேண்டும். அது நடந்தால் சந்தேகமே இல்லாமல் சீனாவை இந்தியா முந்தும் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதுபோல் சீனாவை மற்றும் வளர்ந்த நாடுகளை முன்னிறுத்தி இந்தியர்களுக்கு நாராயண மூர்த்தி கூறும் ஆலோசனைகள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சில மாதங்கள் முன்பு, ‘தி ரெக்கார்ட்’ என்ற பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் பேசும்போது, “உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது இந்தியாவின் வேலை உற்பத்தித் திறன் மிகக் குறைவாக இருக்கிறது. நாம் நமது வேலை உற்பத்தித் திறனை மேம்படுத்தாத வரை நம்மால் மற்ற உலக நாடுகளுடன் போட்டிப் போட முடியாது. அந்த நாடுகள் கடந்த 20, 30 ஆண்டுகளில் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளன. உலக அரங்கில் போட்டிபோட வேண்டுமானால் அதற்கேற்ப இந்திய இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த பலர், “அறிவியல் கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பங்கள், அதிவேக உற்பத்தி கருவிகள் இவ்வளவு வந்துள்ள நிலையில், நியாயமாக மனிதர்களின் உழைப்பு நேரம் குறையத்தானே வேண்டும்? ஆனால், இப்போது எல்லாம் நேர்மாறாக நடக்கின்றன” என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதுபோல், ‘இந்தியா போன்ற ஏழை நாட்டை வளமான நாடாக மாற்ற தாராளமய முதலாளித்துவமே ஒரே தீர்வு. எதையும் இலவசமாக தரக்கூடாது’ என்று நாராயண மூர்த்தி கூறியதும் சர்ச்சையை கிளப்பியது.

சமீபத்தில் பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசும்போது நாராயண மூர்த்தி இதனை தெரிவித்திருந்தார். ஆனால், தொடர்ந்து, “நான் இலவசங்களுக்கு எதிரானவன் அல்ல. நிலைமையை என்னால் புரிந்து கொள்ள முடியும். நானும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன் தான். ஆனால், அந்த இலவசச் சலுகைகளைப் பெற்றவர்களிடம் இருந்து சமுதாயத்துக்குச் சில பொறுப்புகளை எதிர்பார்க்க வேண்டும். இத்திட்டத்தின் பயனாளிகள் தங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள், கொள்ளுப் பேரக்குழந்தைகளை வருங்கால சந்ததியினரின் நலனுக்காக பள்ளிக்கு அனுப்ப அதிக பொறுப்பை ஏற்க வேண்டும்.

உதாரணமாக இலவச மின்சாரம் தருகிறேன் என அரசு அறிவிப்பது மிகவும் நல்ல விஷயம். ஆனால், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை 20 சதவீதத்தை எட்டினால் மட்டுமே இந்த வசதியை உங்களுக்கு செய்து கொடுப்போம் என சொல்ல வேண்டும்” எனக் கூறினார்.

இதனிடையே, “நாட்டில் திறமையான, ஊழலற்ற மற்றும் பயனுள்ள பொது பொருட்களை உருவாக்க, வளர்ந்த நாடுகளில் காணப்படுவதை விட அதிக வரி விதிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இந்தியாவும் சீனாவைப் போல் வேகமாக வளரும்” என நாராயண மூர்த்தி தெரிவித்த கருத்தும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...