1947-ல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசின் சார்பில் தசரா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
மைசூரு தசரா விழாவையொட்டி அரண்மனை, சாமுண்டி மலை, கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் மைசூரு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
கி.பி. 1610ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்வடி கிருஷ்ணராஜ உடையார் மன்னர், போரில் வென்றதை முன்னிட்டு விஜயதசமி காலத்தில் தசரா விழாவை 10 நாட்கள் கொண்டாட தொடங்கினார்.
தற்போது 415-வது ஆண்டாக தசரா விழாவை புக்கர் பரிசு வென்ற கன்னட எழுத்தாளர் பானு முஸ்தாக் கடந்த திங்கட்கிழமை மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார். அக்டோபர் 2ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் தசரா விழாவில் உணவு திருவிழா, திரைப்பட திருவிழா, கிராமிய விழா, மலர்க் கண்காட்சி, பொருட்காட்சி, இசைக் கச்சேரி, இலக்கிய விழா மற்றும் கன்னட கலை பண்பாட்டை பறை சாற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை, சாமுண்டீஸ்வரி கோயில், கிருஷ்ணராஜ சாகர் அணை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், பூங்காக்கள் உட்பட 100 கி.மீ. தூரத்துக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனால் மைசூரு மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கர்நாடகாவின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மைசூருவில் குவிந்துள்ளனர். இதனால் அரண்மனை வளாகம், பிரதான சாலைகளில் கூட்டம் அலைமோதியது. திருவிழாவின் இறுதி நாளான அக்.2ம் தேதி சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமந்து அபிமன்யு யானை ராஜ வீதியில் ஊர்வலமாக செல்லும் ஜம்பு சவாரி நடைபெறுகிறது.