ஹாலிவுட் படங்களில் லயன்கிங்கிற்கு எப்போதும் தனி மவுசு உண்டு. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அந்த விலங்குகளின் நடிப்பு, வாய்ஸ்க்கு ரசிகர்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக் ஷன் பிளாக்பஸ்டர் படமான ‘தி லயன் கிங்’ வெற்றியைத் தொடர்ந்து ‘முஃபாசா: தி லயன் கிங்’ என்ற அடுத்த வெர்சன் வரும் டிசம்பர் 20ம் தேதி அன்று வெளியாகிறது. தமிழிலும் இந்த படம் டப்பாகி உள்ளது. முஃபாசா என்ற அந்த முக்கியமான கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸ் வாய்ஸ் கொடுத்துள்ளார். டாக்காவுக்கு அசோக் செல்வன், பும்பாவுக்கு ரோபோ சங்கர், டிமோனுக்கு சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு விடிவி கணேஷ் டப்பிங் பேசியுள்ளனர். கிரோஸின் குரலாக நடிகர் எம். நாசர் குரல் ஒலிக்க உள்ளது. சென்னையிலேயே தமிழ் டப்பிங் பணிகள் நடந்துள்ளன.
சென்னையில் நடந்த விழாவில் இந்த டப்பிங் அனுபவம் குறித்து நாசர் பேசுகையில் இதுவரை பல மொழிகளில் 600க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டேன். டப்பிங் கலைஞராகவும் பல படங்கள் பணிபுரிந்து விட்டேன். எனக்கு சிவாஜி சார், அமிதாப் பச்சன் சார், டி.எஸ்.பாலையா குரல்கள் ரொம்பப் பிடிக்கும். நமக்கு எத்தனை வயதானாலும் நமக்குள் ஒரு குழந்தை தனம் இருக்கும். அதை இந்த படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இது குழந்தைகளுக்கான படம் மட்டும் கிடையாது. அனைவரும் பார்க்கலாம். தொன்மையான புராணக்கதைகள், வரலாற்றுக்கதைகள் எல்லாம் நம்மிடம் உள்ளது. அதெல்லாம் விரைவில் நல்ல தரத்தில் படமாக்கப்பட வேண்டும்’ என்றார். நடிகர் சிங்கம்புலி பேசுகையில் ‘‘முதலில் இந்த படம், கேரக்டர் பற்றி அதிகம் தெரியும். என் வீட்டில் மகன்கள் கொண்டாடினார்கள். “’தி லயன் கிங்’ படத்தில் டப்பிங் வாய்ப்பு எனக்குக் கிடைத்த கிஃப்ட். குறிப்பாக டீமோன் கதாபாத்திரம் கிடைத்திருப்பது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி என்றார்
நடிகர் அர்ஜூன்தாஸ் பேசுகையில் ‘‘வெளிநாட்டில் வசிக்கும் என் அக்கா குழந்தைகள் இந்த படத்தின் தீவிர ரசிகர்கள். அவர்களுக்காகவே நான் டப்பிங் பேசினேன். இந்தப் படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் நிறைய எமோஷன் இருக்கும். அதனால், மற்ற படங்களுக்கு டப் செய்வது போல அல்லாமல், கவனமாக செய்தேன். நானும் முஃபாசாவின் மிகப்பெரிய ரசிகன்.’’ என்றார்.