டெல்லி கணேஷின் மறைவை முன்னிட்டு அவரைப் பற்றிய நினைவுகளை பலரும் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இதில் ரசனை ஸ்ரீராம் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு…
இளையராஜா இசைக்கு நடித்தவர்கள், வாயசைத்தவர்கள் உண்டு. ஆனால் ஒருவரின் நடிப்புக்கு ராஜா இசையமைத்தது தெரியுமா?
கிடைத்த வாய்ப்புகளில் டெல்லி கணேஷ் மெல்ல முன்னேறிக் கொண்டிருந்த நேரம். சிந்துபைரவி மிருதங்க வித்வான் கதாப்பாத்திரத்துக்கு நன்கு மிருதங்கம் வாசிக்கத்தெரிந்த ஒருவரை (டிவிஜி) இயக்குனர் கேபி ஏற்கனவே போட்டுவிட்டார். ஆனால் குடித்துவிட்டு வாசிக்கும் கேரக்டர் என தெரிந்தவுடன் ‘நேக்கு சரியாப்படலை’ என அவர் விலகிவிட்டார். கடைசி நிமிடத்தில் டெல்லி கணேஷுக்கு வாய்ப்பு போகிறது.
“நீ மிருதங்கம் வாசிப்பியா, கத்துட்டிருக்கியா” டெல்லியை கூப்பிட்டு கேபி கேட்கிறார்.
“தெரியும் சார்”
ஆனால் டெல்லிக்கு வாசிக்க தெரியாது. பொய் தான், ஆனால் வாய்ப்பை நழுவவிடக்கூடாதே? அந்த குறிப்பிட்ட ஜேகேபி வீட்டு தோட்டத்தில் கோபத்தில் வாசிக்கும் காட்சி வருகிறது. ஷாட்டில் டெல்லி கணேஷ் இயக்குனர் சொன்னதை விட improvise செய்கிறார். வசனம் தனி, வாசிப்பு தனி என இருந்ததை ஒன்றாக்கி, ”“உங்களுக்காச்சு எனக்காச்சு பார்த்துரலாம்ண்ணா” என அழுகையுடன் வாசிக்கிறார்.
இந்த சீன் பின்னணியிசைக்கு ராஜா அவர்களிடம் வருகிறது. எப்போதுமில்லாதபடி, அக்காட்சியில் நடித்த குணச்சித்திர நடிகரான டெல்லியை தன்னை வந்து பார்க்கச்சொல்கிறார். பயந்துகொண்டே டெல்லி கணேஷ் போய்ப்பார்க்கிறார்.
“உனக்கு மிருதங்கம் வாசிக்க தெரியுமா?”
“தெரியாது சார்”
“அது தெரிஞ்சுது. ஆனா தெரியாத மாதிரி பிரமாதமா நடிச்சிருக்க. உன் நடிப்புக்கு நான் வாசிச்சிருக்கேன் பார்” என சீனை இசையோடு காட்டுகிறார். அச்சு அசலாய் டெல்லிகணேஷ் வாசித்தது போல கச்சிதமாய் இன்று வரை நினைவில் நிற்கும் ஒரு காட்சியாய் அமைந்து விடுகிறது.
இதில் ராஜா அவர்களின் brilliance ஒரு பக்கம். ஆனால் அக்காட்சியை பார்த்தால், அதுமட்டுமல்ல பாடறியேன் உட்பட ஏனைய கச்சேரி சீன்களிலும், டெல்லி அவர்கள் வாசிப்பது போலவே அச்சு அசலாய் ஒரு தோற்றமயக்கம் ஏற்படும். இதை தில்லானா மோகனாம்பாளில் சிவாஜி நாதஸ்வரம் வாசிப்பது, பாலையா தவில் வாசிப்பதுடன் ஒப்பிட முடியும்.
மைக்கேல் மதனகாமராஜனின் பாலக்காட்டு சமையக்காரர் ஆகட்டும், நாயகனின் அய்யரு ஆக்கட்டும், அல்லது டௌரி கல்யாணத்தின் குசேலன் ஆகட்டும், ஆஹா ஏஜிஎஸ் கணேசன் ஆகட்டும், ’அவரா, குணச்சித்திரமாவும் நடிப்பார், காமெடியாவும் நடிப்பாரே’ என்ற வடிவேலுவின் வசனத்தின் முழுவடிவம் டெல்லிகணேஷ். அவரின் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் உடல்மொழி உட்பட கதாபாத்திரத்திற்குள் இறங்கிவிடுவார். சிந்துபைரவியில் சிவகுமார் “என்ன சப்போட்டா வாசனை?” எனக்கேட்பார். டெல்லிகணேஷின் வெத்தலையை அதக்கியது போன்ற திருட்டுமுழியிலேயே அவரின் சல்பேட்டா நெடி நமக்கும் அடிக்கும்.