தமிழக கேரள எல்லையான குமுளி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறார். சமுத்திரக்கனி. அவர் ஒன்றரைக் கோடி ரூபாய் எடுத்துக் கொண்டு ஓடிவதாக போலீஸ் துரத்துகிறது.ஆனால் சமுத்திரக்கனி நேர்மையுடன் நடப்பவர். கடையில் விற்பனையான லாட்டரி சீட்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த சீட்டைப் பாரதிராஜா அவரிடம் காசு இல்லாததால் தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிட்டு பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று செல்கிறார். அந்த சீட்டுக்குத்தான் பரிசு விழுந்துள்ளது.
சமுத்திரக்கனியின் குடும்பத்தில் பணத்தேவை உள்ளது. இரண்டு பெண் பிள்ளைகளைக் கொண்ட சமுத்திரக்கனி குடும்பத்தில் இளைய பிள்ளைக்குக் திக்குவாய் பிரச்சினை. சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. எந்த வகையிலும் பொருளாதாரத்தில் திருப்தி வராத குடும்பம் .பணத் தேவை அதிகம் உள்ள குடும்பம் .அந்த பரிசுக்குரிய சீட்டு அவரிடம் இருப்பதால் அது நமக்குத் தான் சொந்தம் என்று குடும்பம் வாதிட்டு மன்றாடுகிறது .அது இன்னொருவர் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீட்டு அவரிடம் தான் அதை ஒப்பபடைக்க வேண்டும் என்று சமுத்திரக்கனி பிடிவாதமாக இருக்கிறார். காசு கொடுத்து வாங்காததால் அது நமக்குத் தான் சொந்தம் என்று மனைவி மாமியார், மாமனார், மைத்துனர் என்று குடும்பத்தினர் சமுத்திரக்கனிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
இதையெல்லாம் மறுத்து விட்டவர், அந்த பெரியவரைத் தேடிப் பயணப்படுகிறார் . போலீஸ் ஒரு பக்கம் குடும்பத்தினர் ஒரு பக்கம் என்று அவரைத் துரத்துகிறார்கள்.
பாரதிராஜாவை அவர் சந்தித்தாரா ? போலீஸில் சிக்கினாரா ? என்பதை குடும்பத்தின் செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி.
சமுத்திரக்கனி அதே அப்பாவி தோற்றம் , நேர்மையான குணம் என்று வழக்கமாக வந்து நிற்கிறார். மனைவி அனனயாவிடம் மருகுவதும், குழந்தையிடம் குழைவதுமாக நாம் எல்லா படங்களிலும் பார்த்த அதே நல்லவர். அனன்யா நடுத்தர வர்க்கத்து மனைவியாக அழகாக நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்குறை இல்லை என்றாலும் அவரை பயன்படுத்திய விதத்தில் இயக்குனர் பல இடங்களில் லாஜிக் மீறல் செய்திருக்கிறார்.
பாரதிராஜா உடலில் நடுக்கம் காட்டி, பரிதாப தோற்றத்தில் வருகிறார். பணத்தைக் தவறவிட்டு பதறும் இடத்தில் கலங்க வைக்கிறார். எந்த இடத்திலும் அவர் எல்லை மீறாமல் நடித்திருப்பது அவரது சிறப்பு.
பங்கு சந்தை முதலீட்டாளாராக இளவரசு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கருணாகரன், வடிவுக்கரசி போன்றவர்களை ரெண்டே காட்சிகளில் பயன்படுத்தி வீணடித்திருக்கிறார் இயக்குனர். பேருந்து காமெடி காட்சியில் தம்பி ராமையாவின் வருகை இம்சையாக இருக்கிறது. பயணிகளாக காட்டப்பட்டிருக்கும் பல விஐபி நபர்களை வெறுமனே உட்கார வைத்திருப்பது செயறகையாக இருக்கிறது. தவர்த்திருக்கலாம்.
காவல்துறை வழக்கம்போல் வில்லத்தனம் செய்ய பயன்படுத்தப்பட்டிருக்கிறது. லாட்டரி தொகை உரியவரிடம் சேர்ந்ததா என்பதை சொல்லும் கதையில், லாட்டரியை விட பெரிய மரியாதையும், பயனும் கேரளா முதலமைச்சரே கொடுக்கும்போது அதை நிராகரிப்பதும், மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் சோக வசனம் பேசி நகர்வதும் அப்பட்டமான சினிமாத்தனமாக இருக்கிறது.
இயக்குனர் நந்தா பெரியசாமி திரைக்கதையை வேறு கோணத்தில் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பல காட்சிகள் சீரியல் பார்ப்பதைப் போல இருக்கின்றன. நாசர் வரும் பிளாஷ் பேக் காட்சி ஜவ்வு. சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார் .இயக்குநர் என். லிங்குசாமி வழங்க GPRK சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.