தமிழ் சினிமாவில் வரும் சில திரில்லர் படங்களில் சத்தங்களையும், நிழல் உருவத்தையும் வைத்து மிரட்டுவது வழக்கம். ஆனால் அதையும் தாண்டி நம்மை மிரட்டுகிறது மிரள்.
குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது, முகமுடி அணிந்த நபரால் கணவர் கொல்லப்படுவதாகக் கனவு காண்கிறார், கட்டிடப் பொறியாளர் ஹரியின் மனைவி ரமா. அந்தகனவுக்குப் பின் நிம்மதி இழந்து தவிக்கும் மனைவியைத் தேற்ற, சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார் ஹரி. அங்கு குலதெய்வக் கோயிலில் வழிபாடு முடித்து ஊருக்குக் கிளம்புகிறார்கள். ஆள் அரவமற்ற சாலையில் கார்வரும்போது, ரமா கனவில் கண்டகாட்சிகள் அரங்கேறத் தொடங்குகின்றன. மனைவியையும் மகனையும் காப்பாற்ற ஹரி நடத்தும் போராட்டமும் அவர்களைக் கொல்லத் துடிக்கும் முகமுடி மனிதனின் நோக்கமும் என்ன என்பதுதான் கதை.
ஹாலிவுட் திகில் பட வகையில் ‘ஸ்லாஷர் த்ரில்லர்’கள் மினிமம் கியாரண்டி வசூலுக்குப் புகழ்பெற்றவை. காரணம், நிமிடத்துக்கு நிமிடம் பயமுறுத்தும் விதமாகக் காட்சிகளை அமைத்திருப்பார்கள். அதேபோல், அடையாளம் தெரியாத கொலைகாரன் அல்லது சைக்கோவால் துரத்தப்படும் முதன்மைக் கதாபாத்திரங்கள், உயிரைக் காத்துகொள்ள ஓடும் ஓட்டத்தில், தங்களைப்பொருத்திக்கொள்ளும் பார்வையாளர்களின் உளவியல் அட்டகாசமாக வேலை செய்யும். தமிழில் இப்படி சில படங்கள் வந்திருந்தாலும், நேர்த்தியான ‘ஸ்லாஷர் த்ரில்ல’ரைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் எம்.சக்திவேல்.
தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும், இறுதிமுடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தீர்க்கமாக அறிந்திருந்தார் என்பதை உணர முடிகிறது. இப்படம் ஓர் அறிமுக இயக்குனரால் உருவாக்கப்பட்டது போல் இல்லாமல், மிகுந்த அனுபவம் மிக்க இயக்குனரால் உருவாக்கப்பட்டது போல் சிறப்பாக இருக்கிறது. இதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள்.
சஸ்பென்ஸ் – ஹாரர் – திரில்லர் ஜானரிலான ஒரு படத்துக்குத் தேவையான ஒளிப்பதிவை சுரேஷ் பாலாவும், இசையை பிரசாத்தும் வழங்கி இயக்குனருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள்.