உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ‘ஸ்கைப்’ தளத்தை வரும் 5-ந்தேதியோடு நிறுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் புதிய உச்சங்களை அடைந்து வரும் நிலையில், நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்து வரும் தொழில்நுட்பங்கள் காலாவதி ஆகி வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டு ‘ஒமேகில்'(Omegle) வீடியோ சாட் தளம் மூடுவிழா கண்டது. அந்த வரிசையில் தற்போது ‘ஸ்கைப்’ தளம் இணைந்துள்ளது.
இதன் மூலம் 21 ஆண்டுகளாக பயனாளர்களுக்கு இலவச வீடியோ கால் சேவைகளை வழங்கி வந்த ‘ஸ்கைப்’, தனது சேவையை இறுதியாக நிறைவு செய்ய உள்ளது.
எஸ்டோனியாவை சேர்ந்த 4 மென்பொருள் பொறியாளர்களால் கடந்த 2003-ம் ஆண்டு ‘ஸ்கைப்’ தளம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து வேறு நிறுவனங்களுக்கு கைமாறிய ‘ஸ்கைப்’, கடந்த 2011-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் வந்து சேர்ந்தது. ஸ்கைப் தளத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 8.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.
அதற்கு முன் பயன்பாட்டில் இருந்த ‘விண்டோஸ் லைவ் மெசென்ஜர்’ தளத்திற்கு மாற்றாக ‘ஸ்கைப்’ கொண்டு வரப்பட்டது. இதற்கு பயனாளர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில வரவேற்பு கிடைத்தது. உலகம் முழுவதும் 2023 பிப்ரவரி நிலவரப்படி, தினந்தோறும் 30 கோடியே 60 லட்சம் பேர் ஸ்கைப் தளத்தை பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டது