No menu items!

கோயிலுக்குள் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல வேண்டும்! – புது சர்ச்சை

கோயிலுக்குள் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல வேண்டும்! – புது சர்ச்சை

தமிழ்நாட்டில் திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் சுசீந்திரம் உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களுக்குள் ஆண்கள் சட்டை அணிந்து செல்வதற்கு தடை உள்ளது. எனவே, ஆண்கள் சட்டையைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டுதான் உள்ளே செல்ல முடியும். கேரளாவிலும்  குருவாயூர், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயில் உள்ளிட்ட அனேகமாக கோயில்களிலும் ஆண்கள் சட்டையைக் கழற்றி விட்டுதான் கோயிலுக்குள் செல்ல முடியும். இந்நிலையில், ‘இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்; ஆண்களை சட்டை அணிந்து கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்ற குரல் கேரளாவில் எழுந்துள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதன் குரல் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

கேரளாவின் ஸ்ரீநாராயண தர்ம சங்க அறக்கட்டளையின் தலைவர் சுவாமி சச்சிதானந்தா தான், ‘கோவில்களில் ஆண்கள் மேல் சட்டையை கழற்ற வேண்டும் என்பது சமூகத்தீமை – இதற்கு முடிவு கட்டவேண்டும். நடைமுறையை மாற்றலாம்; ஆண்களை சட்டை அணிந்து கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கலாம்’ என்ற கருத்தை முதலாக முன்மொழிந்துள்ளார்.

கேரளா மாநிலம் வர்கலாவில் சமூக சீர்திருத்தவாதி, நாராயண குருவின் 92ஆவது சிவகிரி யாத்திரை மாநாடு அண்மையில் நடந்தது. இந்த மாநாட்டில் சிவகிரி மடத்தலைவர் சச்சிதானந்தா பேசும்போது, “கோவில்களுக்குள் நுழைவதற்கு ஆண் பக்தர்களின் மேல் சட்ைடயை அகற்றக் கோரும் நீண்டகால நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும். கேரள மாநிலத்தில் உள்ள பல கோவில்களில் இந்த நடைமுறை உள்ளது. இந்த நடைமுறை ஒரு சமூகத்தீமை! இந்த நடைமுறை நாராயண குருவின் பிரசங்கங்களுக்கு எதிரானது. சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்திய நாராயண குரு தொடர்புடைய சில கோயில்கள் கூட இதைப் பின்பற்றுவது வருத்தமாக இருக்கிறது. சில கோவில்களில், பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சில நாராயணர் கோவில்களும் இதைப் பின்பற்றுவதைக் காணும்போது, நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஏனென்றால், கோவில்களை புனிதப்படுத்துவதை விட்டுவிட்டு அதனை மனிதாபிமான நடைமுறைக்கும் அனைத்து மக்களுக்குமான ஒன்றாகவும் மாற்றிக்காட்டியவர் நாராயண குரு’’ என்று பேசினார்.

மடாதிபதியின் இந்த கருத்தை, மேடையில் இருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் ஆதரித்தார்.

சச்சிதானந்தா கருத்துக்கு சில அமைப்புகள் ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன. கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, சட்டை அணியாமல் சாமி கும்பிடச் செல்வது இறைவனை அவமதிக்கும் செயல் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இப்படி கோயில்களில் சட்டையை கழற்றிவிட்டுச் செல்லும் நடைமுறைக்கு எதிரான கருத்து, கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சரி, ஆண்கள் சட்டை அணிந்து கோயிலுக்குள் செல்லக்கூடாது என்ற நடைமுறை எப்படி வந்தது?

‘சாதி தான் இதற்குக் காரணம். பூணூல் அணிந்தவர் யார், அணியாதவர் யார் என்று அறிந்து கொள்வதற்காகவே இந்த நடைமுறை வழக்கத்தில் வந்தது” என்று நாத்திகர்கள் சொல்கிறார்கள். இதை மறுக்கும் ஆத்திகர்கள், “ஆண்கள் மார்பு மற்றும் தோள்களின் வழியாகவே இறைசக்தியை பெற முடியும் என்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது” என்கின்றனர்.

“ஆன்மிக நம்பிக்கை உள்ளோர் மட்டுமே இதை ஆலோசித்து முடிவு செய்ய வேண்டுமே தவிர, நம்பிக்கை இல்லாதவர்கள் ‘அரசியல்’ செய்வதற்காக தலை நுழைக்கும்போதுதான் சமூகத்தில் சந்தேகமும் பதற்றமும் எழுகிறது. ஆகவே, இந்து மடாதிபதிகள், மத குருமார்கள், கோயில் நிர்வாகிகள், ஆன்மிக நம்பிக்கை கொண்ட சீர்திருத்தவாதிகள் மற்றும் பக்தர்கள் கூடி `சட்டை’ விஷயத்தில் முடிவு எடுப்பதே சரியாக இருக்கும்” என்பது ஆத்திகர்கள் வாதம்.

எது எப்படியிருந்தாலும் தேங்காய் உடைப்பது, தீபம் ஏற்றுவது, வெண்ணை வீசுவது, கோயில்களில் குளத்தில் துணிகளை கழற்றி எறிவது என பல காலம் காலமாக பின்பற்றப்பட்ட நடைமுறைகளை சுற்றுச்சூழல் மற்றும் சுத்தம் கருதி காலப்போக்கில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம். அத்தகைய ஒரு மாற்றமாக சட்டை அணிந்து இறைவனை தரிசிக்க அனுமதிப்பதிலும் தவறில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். அந்தந்த கோயில்களே முடிவெடுக்க அனுமதிக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் சாமித் தோப்பு அய்யா வைகுண்டசாமி கோயில் தலைமை பதி பாலபிரஜாபதி அடிகளார் இந்த கருத்தை வரவேற்றுள்ளார். இனி வைகுண்டசாமி கோயில்களில் ஆண் பக்தர்களை சட்டை அணிந்து அனுமதிக்கப் போவதாக பாலபிரஜாபதி அடிகளார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...