தான் கற்ற கலைதான் தனக்கு முதல் காதலி என சில கலைஞர்கள் வார்த்தை அலங்காரத்திற்குச் சொல்வார்கள். காரைக்குடி மணிக்கு நிஜமாகவே முதல் காதலி, மனைவி அவரது மிருதங்கம்தான். திருமணமே செய்துகொள்ளாமல் அந்த வாத்தியத்துடனேயே வாழ்ந்தவர்.
சாதகம் என்றால் சாதாரணமல்ல… அது அசுர சாதகம். இளம் வயதில் காலை 6 மணியிலிருந்து லஞ்ச் பிரேக் ஒரு மணி நேரம் தவிர இரவு வரை செய்தவர். புதுப்புது கோர்வைகளைக் கண்டுபிடித்தவர். அந்த நாதமே கீர்த்தனையைக் கேட்பது போல இருக்கும். அது ஒரு தனி சுகம். வழக்கமாகத் தனி ஆவர்த்தனம் என்றால் நடையைக் கட்டும் ரசிகர்கள் அவரது தனி ஆவர்த்தனத்துக்காக காத்திருப்பது மணியின் லயத்திற்குக் கிடைத்த மரியாதை. எத்தனை எத்தனை ஜுகல்பந்திகள், என்ஸாம்பில்கள்… வெள்ளைக்கார வித்துவான்கள் காரைக்குடி காரரின் லாவகத்தைக் கண்டு பிரமித்துப் போனதைப் பலமறை பார்த்து சிலிர்த்திருக்கிறேன்.
எம்.எஸ்ஸிலிருந்து டி.எம்.கிருஷ்ணா வரை அவர் வாசிக்காத பெரிய தலைகள் கிடையாது. பணமே எல்லாமாகிவிட்ட உலகில் சாபாக்கள் அளிக்கும் விருதுப் பணங்களை தர்ம காரியங்கள் செய்யும் அமைப்புகளுக்கு அந்த நேரத்திலேயே திருப்பி தந்துவிடுவார். வீட்டுக்கு மிருதங்கம் வந்தா போதும் என்பார். அவர் கலைமாமணியிலிருந்து எந்த விருதையும் ஏற்கவில்லை. என்னைவிடத் தகுதியானவர்களுக்குத் தந்துவிடுங்கள் என்பார்.
சித்த புருஷர்களைத் தேடித் தேடிப் போவார். அவர் குருவாக ஏற்ற சுவாமி சுரஜானந்தா ஒருகாலத்தில் அவரிடம் மிருதங்கம் கற்றவர். காரைக்குடி மணியையே ஆன்மீக குருவாக ஏற்றவர்கள் பல வித்துவான்கள் உண்டு. டிரம்ஸ் சிவமணி முக்கியமானவர்.
அருமையாகச் சமைப்பார் மணி. வெளிநாடுகளில் நண்பர்கள் வீட்டில் தங்கும் போது யாரையும் எதிர்பார்க்காமல் சமைக்கக் கிளம்பி விடுவாராம். அளந்து பேசுவார். அந்த தாடியிலிருந்து புன்னகை எப்போதாவது எட்டிப் பார்க்கும். அதற்கு நாம் அவரை புரிந்துகொண்டு ஞானமாகப் பேச வேண்டும்.
அது ஒரு தவ வாழ்க்கை.