இந்த ஆண்டில் முதல் வெற்றி படமாக அமைந்தது, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி நடித்த மதகஜராஜா . இதுவரை அந்த படம் 60 கோடிக்குமேல் வசூலித்துள்ளது. தெலுங்கிலும் ரிலீஸ் ஆகியுள்ளது. 100 கோடி வசூலை அள்ளுமா என்பது சில வாரங்களில் தெரிய வரும். அடுத்ததாக, ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் படம், 2வது வெற்றி படமாக அமைந்துள்ளது. இதன் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. அதில் ஹீரோ மணிகண்டன் பேசியது..
‘‘சினிமா பின்புலம் இல்லாத, எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் இந்த படத்தில் பணியாற்றினார்கள். டீம் வொர்க்கால் இந்த படம் வெற்றி பெற்றது. குறுகிய காலத்தில் இந்த படம் மக்களிடம் போய் சென்று சேர்ந்தது. இந்த படத்தின் வெற்றி, இன்னமும் அதிகமாக உழைக்கணும். பொறுப்புடன் வேலை செய்யணும்ங்கிற எண்ணம் அதிகமாகிவிட்டது. யூடியூப் சேனல், டிவி, ரேடியாவில் இருந்து வந்தவர்கள், இந்த படத்தில் அதிகம் வேலை செய்து இ ருக்கிறார்கள். இப்போது ஒரு படத்தை கஷ்டப்பட்டு எடுத்துவிடலாம்.
ஆனால், அதை மக்களிடம் போய் சேர்ப்பதுதான் சவாலான விஷயம். பல கோடியில் பிரமாண்டமாக எடுக்கும் படத்துக்கு கொடுக்கிற, அதே டிக்கெட் விலையைதான் குடும்பஸ்தன் மாதிரியான படத்துக்கும் கொடுத்து ரசிக்கிறார்கள் மக்கள். நல்ல படத்தை கொடுத்தால் ரசிப்போம் என்கிறார்கள். அந்த மக்களுக்கு நன்றி ’’ என்றார்
இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்த இயக்குனர் பாலாஜிசக்திவேல் பேசுகையில், ‘‘லப்பர்பந்து, குடும்பஸ்தன் மாதிரியான படங்கள் ஜெயிப்பது நல்லது. இரண்டு படங்களுமே ஒருவகையில் அரசியல் கதை. எளியமுறையில் அரசியலை, இந்த படங்கள் சொல்கின்றன. நக்கலைட்ஸ் குழு குடும்பஸ்தன் படத்தை அழகாக கொடுத்துள்ளது. பிரச்சாரமாக இல்லாமல், வாழ்வியலை கலந்து பதமான விருந்தை இந்த படம் கொடுத்துள்ளது. மணிகண்டன் சிறந்த நடிகர்.
மொழி தெ ரியாவிட்டாலும் ஹீரோயின் சான்வி கலக்கியிருக்கிறார். கொங்கு ஸ்லாங் பேசி அழகாக நடித்துள்ளார் அந்த ஹீரோயின். குடும்பஸ்தன் என்ற தலைப்புக்கு அழகான கதையை, கருவை சொன்ன படக்குழுவுக்கு வாழ்த்துகள். அப்பாவாகவே வாழ்த்து இருக்கிறார் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன். ஜென்சன் திவகார் காமெடியில் சிறப்பாக நடித்து இருக்கிறார். கொடுத்த வாக்கை காப்பாற்றி, இந்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்து இருக்கிறார் ஹீரோ மணிகன்டன். ’’ என்றார்.
விழாவில் பேசிய நக்கலைட்ஸ் பிரசன்னா, ‘நாங்க 8 ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். எங்களின் முதல் வீடியோவுக்கு ரூ 250தான் செலவானது. முதல் ஆண்டு நக்கலைட்டில் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் இல்லை. நம்பிக்கையுடன் உழைத்தோம்.