மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் அசோக் நகர் பள்ளியில் மகாவிஷ்ணு பேசிய வீடியோ யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் கடந்த வாரம் உரையாற்றினார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அப்போது அவர் பேசினார். அப்போது மாற்றுத் திறனாளிகளைப் பற்றி அவர் பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அங்கிருந்த ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியர் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த ஆசிரியருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின, நிகழ்ச்சி நடந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த சனிக்கிழமையன்று சென்னைக்கு வந்த மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் சொன்னது என்ன?
போலீஸார் நடத்திய விசாரணையின்போது, “அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக உரையாற்றினேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் அடிக்கடி தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். அப்போது சித்தர்கள் தன்னிடம் சொன்னதைத்தான் நான் பேசினேன். சிறைக்குச் சென்றால், அங்கு கைதிகளிடமும் இதைத்தான் பேசுவேன். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது” என்று மகாவிஷ்ணு கூறியதாக சொல்லப்படுகிறது.
வீடியோ நீக்கம்
இந்த சூழலில் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய மகா விஷ்ணுவின் வீடியோ, அவரது பரம்பொருள் அறக்கட்டளை யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.