இந்தியாவிலேயே அதிகமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நினைவுச் சின்னம் எது என்று கேட்டால் தாஜ்மஹால் என்றுதான் பலரும் சொல்வார்கள். காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாக இருப்பது இதற்கு முக்கிய காரணம். ஆனால் தாஜ்மஹாலை விட இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் நினைவுச் சின்னம் மாமல்லபுரம்தான் என்று இப்போது தெரியவந்துள்ளது. மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
மத்திய சுற்றுலாத் துறையின் இந்த அறிக்கைப்படி, 2021-2022-ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்துக்கு அதிகமாக வந்துள்ளனர். 2021-2022 காலகட்டத்தில் மட்டும் 1,44,984 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் டிக்கெட் வாங்கி மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பார்த்து ரசித்துள்ளனர். இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளிலேயே மிக அதிகமாக 45.5 சதவீத மக்களை ஈர்த்தது மாமல்லபுரம்தான் என்பதும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொன்மைவாய்ந்த 50 நினைவுச் சின்னங்கள் மாமல்லபுரத்தில் இருப்பதே அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதேநேரத்தில் தாஜ்மஹாலுக்கு 12.21 சதவீத சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.
இந்தியாவின் டாப்10 சுற்றுலா இடங்கள் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் முதல் இடத்தில் மாமல்லபுரம் இருக்க, அடுத்த 9 இடங்களைப் பிடித்துள்ள இடங்களின் பட்டியல்…
2. தாஜ்மஹால்:
மாமல்லபுரத்துக்கு அடுத்ததாக அடுத்த சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த 2-வது இடமாக தாஜ்மஹால் இருக்கிறது. தாஜ்மஹாலை கடந்த ஓராண்டில் 38,922 சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர்.
3.சலுவன்குப்பம் நினைவுச்சின்னம்:
மகாபலிபுரத்தை அடுத்துள்ள சலுவன்குப்பம் நினைவுச் சின்னம் மத்திய சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்த இடம். புலிக்குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களைக் கொண்டுள்ள இப்பகுதிக்கு கடந்த ஆண்டில் 25,579 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
4.ஆக்ரா கோட்டை:
மொகாலய சக்ரவர்த்தியான அக்பர் வாழ்ந்ததாக கூறப்படும் ஆக்ரா கோட்டை இந்த பட்டியலில் 4-வது இடத்தைப் பிடிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்த கோட்டை, மொகாலய மற்றும் இந்திய கட்டிடக் கலையை கலந்து கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டையை கடந்த ஆண்டில் 13,598 சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர்.
5.செஞ்சி கோட்டை:
தமிழகத்தில் உள்ள செஞ்சி கோட்டைக்கு இந்த பட்டியலில் 5-வது இடம் கிடைத்துள்ளது. கோனார் ராஜவம்சத்தால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோட்டையை கடந்த ஆண்டில் 10,483 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர்.
6.வட்டக்கோட்டை:
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டக்கோட்டை, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. திருவாங்கூர் ராஜவம்சத்தால் இது கட்டப்பட்டுள்ளது. கடந்த 2021-2022-ல் 9,174 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்க்க வந்துள்ளனர்.
7.குதுப் மினார்:
குத்புதீன் ஐபக்கால் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டுள்ள குதுப்மினார், 7-வதாக அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ளது. 72.5 மீட்டர் உயரம்கொண்ட குதுப்மினார், முழுக்க முழுக்க செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 8,456 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்த்து ரசித்துள்ளனர்.
8. திருமயம் கோட்டை அருங்காட்சியகம்:
ராமநாதபுரம் மன்னரால் திருமயத்தில் கட்டப்பட்டுள்ள கோட்டை அருங்காட்சியகம் 40 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் இந்த கோட்டை அருங்காட்சியகத்தை கடந்த ஆண்டில் 8,422 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து பார்த்துள்ளனர்.
9. செங்கோட்டை:
டெல்லியில் உள்ள செங்கோட்டை உலகப் புகழ் வாய்ந்த கட்டிடம். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இதன் மீதுள்ள கொத்தளத்தில்தான் பிரதமர் கொடியேற்றுவார். இத்தனை சிறப்புகள் இருந்தாலும் இந்த கோட்டை சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் 9-வது இடத்தில்தான் உள்ளது. கடந்த ஆண்டில் 5,579 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர்.
10. சித்தன்னவாசல் ஜெயின் கோயில்:
டாப் 10 பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ள இடம் சித்தன்னவாசல் ஜெயின் கோயில். இந்தக் கோயிலை கடந்த ஆண்டில் 5,432 வெளிநாட்டினர் பார்த்துள்ளனர்.
மத்திய சுற்றுலாத் துறை வெளியிட்டு இந்த டாப் டென் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 இடங்களில் 6 இடங்கள் தமிழ்நாட்டில் இருப்பது நிச்சயம் நமக்கெல்லாம் பெருமைதான்.