அடுத்தடுத்து இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக, கதாநாயகியின் மகளும் அச்சம்பவத்தில் பாதிக்கப்பட, குற்றவாளி யார் என்பதை கதாநாயகி கண்டறிவதுதான் ‘மஹா” படத்தின் ஒன் லைன்.
படம் தொடங்கியதுமே திரையரங்கில், ஆளாளுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகித்து திரைக்கதையாசிரியர்களாக மாறி அடுத்து வரும் காட்சிகளைக் கூறிவிடுகிறார்கள். அந்தளவிற்கு திரைக்கதையில் ’மஹா’ சுவாஹா ஆகிவிடுகிறாள்.
சிம்பு – ஹன்சிகா மோத்வானி இருவருக்கும் இடையிலான ஒரு காதல் காட்சி மட்டும் சிம்புவின் கொள்கைப் பரப்பு காட்சிகளாக ஐந்து நிமிடங்களுக்கு நீள்கிறது. சிம்புவின் காதல், காதலி, அவருடைய மனத்தில் இருந்தது என்ன என்பதையெல்லாம் வசனங்களின் மூலம் வெளிப்படுத்துவதாக அந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள். இது மட்டும் நம்மை கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
சிம்புவுடனான காட்சிகளில் ஹன்சிகா இளமையாகவும், அவர் தனித்து வரும் காட்சிகளில் கொஞ்சம் தளர்ந்து போயும் காணப்படுகிறார். சிம்பு படத்தில் பத்து நிமிடம் மட்டுமே இருக்கிறார். அவருக்கும் ஹன்சிகாவும் ஒரு சண்டைக்காட்சி, ஒரு பாடல் காட்சி, மூன்று காட்சிகள் மட்டுமே இருப்பது சிம்புவின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கக்கூடும்.
படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் மூவருக்கும் போலீஸ் விசாரணை காட்சிகளில் கெத்து காட்டும் வாய்ப்புகளும் இல்லை. வசனங்களும் இல்லை. இதனால் போலீஸ் விசாரணையுடன் பரபரக்க வேண்டிய காட்சிகளில், ஏதோ தீம் பார்க்கில் தொலைந்துப் போன குழந்தையைத் தேடும் தாயைப் போல ஹன்சிகா வருகிறார்.
’மஹா’ ஹன்சிகா மோத்வானிக்கும் ஐம்பதாவது படம். அதனால்தான் இந்த கதாநாயகியை மையமாக கொண்ட இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் போல. ஆனால் நம்பி வந்த ஹன்சிகாவை, கதையின் பாதியிலேயே சிம்பு விட்டுச் சென்றதை போலவே இயக்குநரும் கைவிட்டுவிட்டார்.
பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை ஏதோ ரகம்.