“அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்கவும், உறவினர்கள் வீட்டு விருந்தில் கலந்துகொள்ளவும் மதுரைக்கு வந்திருக்கிறேன். அதனால் இன்று மதியம் வாட்ஸ்அப் காலில் பேசலாம்” என்று காலையிலேயே மெஸேஜ் அனுப்பி இருந்தாள் ரகசியா. சொன்னபடி மதியம் 1 மணிக்கு டாணென்று வாட்ஸப் காலில் வந்தாள்.”
“என்ன இது என்றைக்கும் இல்லாத மதுரைப் பாசம்?”
“கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டைப் பார்க்க முடியவில்லை. அதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டைப் பார்க்க வந்தேன்.”
“நான் உன்னைப் பற்றிக் கேட்கவில்லை. உதயநிதியைப் பற்றிக் கேட்கிறேன்.”
“ஓ… மு.க.அழகிரியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்ததைப் பற்றி கேட்கிறீர்களா? உதயநிதிக்கு முன்பிருந்தே தனது பெரியப்பா மீது பாசம் அதிகம். அடிக்கடி அவர் டெலிபோனில் அவருடன் பேசிக்கொண்டுதான் இருந்தார். பெரியப்பா மட்டுமில்லாமல் பெரியப்பா மகன் துரை தயாநிதியுடனும் நெருக்கமாகதான் இருந்தார். இது முதல்வருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் அவர் தலையிடாமல் இருந்தார். உதயநிதி மட்டுமின்றி ஸ்டாலின்கூட அழகிரியின் சில சிபாரிசுகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருவதாக ஒரு பேச்சு கோட்டை வட்டாரத்தில் இருக்கிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க மதுரை செல்லும் உதயநிதி, அழகிரியையும் சந்தித்தால் நன்றாக இருக்குமே என்று காந்தி அழகிரியும் துரை தயாநிதியும் விரும்பியிருக்கிறார்கள். ஸ்டாலினும் இதற்கு அனுமதி கொடுக்க இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் குடும்பத்தில் உள்ள சிக்கல்களைக் களைய விரும்புகிறாராம் ஸ்டாலின். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த சந்திப்புக்கு அவர் அனுமதி தந்ததாக சொல்கிறார்கள்.”
“சந்திப்பின்போது அரசியல் பேசப்பட்டதா”
“இல்லை. இருவருமே அரசியலைத் தவிர்த்ததாக சொல்லப்படுகிறது. சந்திப்பின்போது அழகிரியின் உடல்நிலையைப் பற்றித்தான் உதயநிதி அதிகம் பேசினாராம். தேவைப்பட்டால் சென்னைக்கு வந்து சிகிச்சை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். உதயநிதியின் இந்த கரிசனம், அழகிரியை உருக வைத்துவிட்டதாம். இன்னொரு விஷயம், துரை தயாநிதிக்கு மாணவரணி செயலாளர் பதவி கிடைக்கலாம் என்ற பேச்சு அறிவாலயத்தில் இருக்கிறது”
“இந்த சந்திப்பினால் மதுரை அரசியல் மாறும். அமைச்சர் பிடிஆர்க்கு சிக்கல் உருவாகப் போகிறது என்று கூறப்படுகிறதே?”
“இந்த செய்தியை பாஜகவினர்தான் கிளப்பிவிடுகிறார்கள் என்று அறிவாலயத்தில் கூறுகிறார்கள். பிடிஆர் லோக்கல் அரசியல் செய்ய மாட்டார். லோக்கல் அரசியலும் அவருக்குத் தெரியாது. கட்சியில் அவரை அரசியல்வாதியாக பார்த்து அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. பொருளாதாரம் தெரிந்தவர் என்ற அடிப்படையில்தான் அமைச்சர் பதவியில் இருக்கிறார். அதனால் மதுரை அரசியலில் அவர் பாதிக்கப்பட மாட்டார் என்று கூறுகிறார்கள்”
”அப்போ, இந்த சந்திப்பு பாசக்கார குடும்பத்தின் சந்திப்பு என்று மட்டும்தான் பார்க்க வேண்டுமா? குடும்பப் பிரச்சினைகள் எல்லம் இனி தீர்ந்துடுமா?”
“தீர்ந்துவிடுமா என்று தெரியவில்லை ஆனால் குடச்சலாக இருக்காது.”
“குடும்பம்னா பல பிரச்சினைகள் இருக்கும். ஆனா இருக்கிறது ஒரு குடும்பம்தானே?”
“வாரிசு படம் பார்த்துட்டீங்க போல. பஞ்ச் டயலாக்கெல்லாம் பேசுறீங்க.”
“அழகிரியைப் போலவே எல்லா மாவட்டத்து திமுக பொறுப்பாளர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறதா சொல்றாங்களே?’
“எல்லாவற்றுக்கும் பொங்கல் கவனிப்புதான் காரணம். ஒவ்வொரு மாவட்ட செயலாளர் அலுவலகத்திலும் வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், கிளைக் கழகச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்பாளர்களுக்கு பொங்கல் பரிசுகளுடன் கரன்ஸி நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர் பொறுப்பாளர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருக்க, மாவட்ட செயலாளர்கள் இதை வேறு மாதிரி யோசிக்கிறார்கள். ‘கடந்த தீபாவளி பண்டிகை முதல் இப்படி ஒரு புது பழக்கத்தை நாம் ஏற்படுத்தி விட்டோம். இன்னி ஒவ்வொரு தீபாவளி, பொங்கலுக்கும் இப்படி நம்மிடம் பொறுப்பாளர்கள் எதிர்பார்ப்பார்களே’ என்பது அவர்களின் கவலையா இருக்கு.”
“2022-ல ஆளுநர் கொடுத்த தமிழ் புத்தாண்டு விருந்தில் தமிழக அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் விருந்தில் பல அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள் என்று செய்தி வந்திருக்கிறதே?”
“ஆளுங்கட்சி – ஆளுநர் மோதலில் நாம் தலையிட வேண்டாம் என்று அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் சொல்லியிருக்கிறார். தலைமைச் செயலரின் இந்த முடிவுக்கு முதல்வரும் ஒகே சொன்னாராம். அதனால்தான் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டார்கள் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..”
“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் யார் போட்டியிடப் போகிறார்களாம்? செய்தி ஏதாவது கசிந்திருக்கிறதா?”
“அதிமுக கூட்டணியில் கடந்த பொதுத்தேர்தலில் தமாகா இங்கு போட்டியிட்டது. அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜா அங்கு போட்டியிட்டார். இடைத் தேர்தலிலும் தமாகா அங்கு போட்டியிட விரும்புகிறது. அதனால் அதிமுகவிடமும் பாஜகவிடமும் தமாகாவினர் பேசியிருக்கிறார்கள். தேர்தல் அறிவிப்பு வரட்டும், அப்போது பார்க்கலாம் என்று இரண்டு கட்சிகளும் நழுவியிருக்கிறார்கள். இதில் ஜி.கே.வாசன் அப்செட்டாம்.”
“ஜி.கே.வாசன் அப்செட் பத்திலாம் நீதான் கவலைப்படுவே. நான் கேட்டது அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால் விட்டுருக்காங்களே அதைப் பத்தி. அவங்க அங்க போட்டிப் போடப் போறாங்களா?”
“அண்ணாமலை போட்டியிட்டா அவரை எதிர்த்து போட்டியிடுவேன்னு சொல்லியிருக்காங்க. காயத்ரி ரகுராமை எப்படி அடக்குவதுனு கமலாலயத்துல தீவிர யோசிச்சுட்டு வராங்க”
“ஜனவரி 27லருந்து சென்னைலருந்து கன்னியாகுமரிக்கு நடைபயணம் போறாங்களாமே”
“ஆமாம். அதுக்கு யார் ஸ்பான்ஸர்னு பாஜகவுல ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. நடைபயணம் முழுக்க பாஜகவை திட்டி தீர்ப்பாங்களாம், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைனு சொல்லப் போறாங்களாம்”
“கஷ்டம்தான். ராகுல் காந்தி ஸ்டைல்ல நடைபயணம் போறாங்களே?”
“அவங்க பக்கம் கொஞ்சம் காங்கிரஸ் காத்து வீசுது. ஈவிகேஎஸ் இளங்கோவன் கௌரவ காமராஜர் பட்டம் பெற்றதுக்கு வாழ்த்தியிருக்கிறார். அதை கவனிச்சிங்களா?”
“ஆமாம். விமானத்தோட எமர்ஜென்சி கதவைத் திறந்த விவகாரத்துல அண்ணாமலையும் சிக்கியிருக்கிறாராமே?”
“ஆமாம். முதல்ல இந்த செய்தியை அமைச்சர் செந்தில் பாலாஜிதான் வெளில சொன்னார். அவர் பெயர் சொல்லாம குறிப்பிட்டிருந்தார். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நியூஸ் வெளில வந்துருச்சு. இப்போ அதிகாரப்பூர்வமாக வெளில வந்துருக்கு. சென்னை – திருச்சி இண்டிகோ விமானத்துல டிசம்பர் பத்தாம் தேதி அவசரகால கதவுக்குப் பக்கத்துல பாஜகவின் இளம் எம்.பி. தேஜஸ்வி சூர்யாவும் அண்ணாமலையும் உக்காந்திருக்காங்க. விமானப் பணிப் பெண் விமான நடைமுறைகளை விளக்கிக் கொண்டிருக்கும்போது தேஜஸ்வி அவசரகால கதவைத் திறந்திருக்கிறார். இது பெரிய குற்றம். ஆனால் பாஜகவினர் சம்பந்தப்பட்டிருந்ததால தேஜஸ்வி மன்னிப்பு கடிதம் மட்டும் எழுதிக் கொடுத்துட்டு அதே விமானத்துல போயிருக்கிறார். இதனால விமானம் ரெண்டு மணி நேரம் தாமதம். இப்போ இந்த சம்பவத்தை விசாரிக்க சொல்லி விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் அண்ணாமலை உடன் இருந்ததால் அவர் பெயரும் மாட்டியிருக்கிறது”
“இந்த விஷயம் எப்படி செந்தில் பாலாஜிக்கு முதல்ல தெரிஞ்சது?”
“அந்த விமானத்துல திமுகவின் பி.டி.அரசகுமாரும் இருந்திருக்கிறார். அவர் ஏற்கனவே பாஜகவில இருந்தவர். அவர் பார்த்துட்டு திமுகவினரிடம் சொல்லியிருக்கிறார்”
”பாவம் அண்ணாமலை…அவர் கிட்டயும் விசாரணை நடக்குமா?”
”விசாரணை நடக்குதானு பாருங்க. அறிவிப்பு மட்டும்தான் வெளில வந்திருக்கு. சரி, அப்புறம் பேசுகிறேன்” என்று சிரித்துக் கொண்டே போனை கட் செய்தாள் ரகசியா.