வீடுகளுக்கு அடுத்ததாக விஐபிக்களின் அந்தஸ்த்தை உலகுக்கு எடுத்துச் சொல்பவை கார்கள். அவர்களின் ரசனையை எடுத்துச் சொல்லும் விஷயமாகவும் கார்கள் உள்ளன. அதனாலேயே பலரும் கார்களை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் நமது கிரிக்கெட் வீரர்கள் என்னென்ன வகை கார்களை வைத்துள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்:
எம்.எஸ்.தோனி
இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே வாகனங்களை அதிகம் விரும்பும் நபர் என்று தோனியைக் கூறலாம். ராஞ்சி நகரில் உள்ள தனது விஸ்தாரமான பங்களாவில் ஒரு பெரும் பகுதியை தனது வாகனங்களுக்காகவே ஒதுக்கியுள்ளார் தோனி. புதிய மாடல் கார்கள் மட்டுமின்றி, பழைய மாடல் கார்களையும் ஏலத்தில் எடுத்து பயன்படுத்தி வருகிறார். ஜனவரி மாதத்தில் நடந்த ஒரு ஏலத்தில்கூட 1971-ம் ஆண்டு மாடல் லேண்ட் ரோவர் வகை காரை அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.
வீட்டில் பல கார்கள் இருந்தாலும் தோனி அதிகமாக பயன்படுத்துவது போர்ஷே 911 வகை காரைத்தான் 2.50 கோடி ரூபாய்க்கும் மேல் விலைமதிப்புள்ள இந்தக் காரின் நிறம், நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நினைவுபடுத்தும். ஆம்… அதில்கூட மஞ்சள் நிறத்தைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் ‘தல’ தோனி. இந்த காரை ஸ்டார்ட் செய்த 5 விநாடிகளுக்குள் 100 கிலோமீட்டர் வேகத்தில் இதைச் செலுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சமாக உள்ளது.
இந்த காரைத் தவிர ஃபெராரி 599 காரையும் தோனி பயன்படுத்தி வருகிறார். சிவப்பு நிறத்தில் பளபளக்கும் இந்தக் காரின் விலை சுமார் 1.5 கோடி. 2011-ம் ஆண்டில் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது இந்தக் கார் தோனிக்கு பரிசாக வழங்கப்பட்டது. அதனால் தோனிக்கு இந்தக் காரின் மீது பிரியம் அதிகம். இதேபோல் ஹம்மர் கார் உள்ளிட்ட மேலும் பல கார்களையும் தோனி வைத்துள்ளார்.
அதே நேரத்தில் கார்களைவிட மோட்டார் சைக்கிள்களை அதிகமாக நேசிக்கும் நபர் தோனி. சில ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல் போட்டியின்போது சென்னை நகர சாலைகளில் தோனி பைக் ஓட்டிக்கொண்டு சென்றதை யாரும் மறந்திருக்க முடியாது. இப்போதுகூட ஓய்வு கிடைக்கும் நேரத்தில் மகளுடன் சேர்ந்து தனது பண்ணை வீட்டின் வளாகத்தில் பைக்கில் செல்வது தோனிக்குப் பிடித்த பொழுதுபோக்கு. இதுபோன்ற சூழ்நிலைகளில் தோனி அதிகம் பயன்படுத்துவது ஹெல்கேட் எக்ஸ்132 (hellcat x132) என்ற பைக்கைத்தான் 2018-ம் ஆண்டில் தோனி வாங்கிய இந்த பைக்கின் விலை 27 லட்சம் ரூபாய்.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவருமான விராட் கோலி அதிகம் பயன்படுத்துவது ‘ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ்’ (Audi R8 LMX) காரைத்தான். மனைவி மற்றும் மகளுடன் வெளியில் செல்லும் நேரங்களில் இந்த காரைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார் விராட் கோலி. இந்தக் காரின் விலை 2.97 கோடி ரூபாய்.
இந்த காரைத் தவிர ஏ8 எல் டபிள்யூ12 (இந்த காரின் விலை 1.98 கோடி ரூபாய், ஏ க்யூ7 (இதன் விலை 81 லட்சம் ரூபாய்) ஆகிய கார்களையும் விராட் கோலி பயன்படுத்தி வருகிறார்.
சச்சின் டெண்டுல்கர்
ஆரம்ப காலகட்டத்தில் ‘ஃபெராரி 360’ காரைத்தான் சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்தி வந்தார். இதைச் சில ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்த சச்சின் டெண்டுல்கர், தற்போது நிசான் ஜிடி-ஆர் (Nissan GT-R) காரைப் பயன்படுத்தி வருகிறார். சிவப்பு நிறம்கொண்ட இந்த கார், ஸ்டார்ட் செய்த 2.9 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தைத் தொடும் ஆற்றல் வாய்ந்தது. இந்தக் காரைத் தவிர பிஎம்டபிள்யூ எம்5, பிஎம்டபிள்யூ எம்6 வகைக் கார்களையும் வைத்துள்ள சச்சின் டெண்டுல்கர் பிஎம்டபிள்யூ வகை கார்களின் விளம்பர தூதுவராகவும் இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா
கைக்கடிகாரம் முதல் கார்கள் வரை ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து வாங்குபவர் ஹர்திக் பாண்டியா. நடுத்தர குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு வளர்ந்த இவர், வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவயும் ரசித்து வாழ்கிறார். விலைமதிப்புள்ள சிறந்த பிராண்ட் பொருட்களை அதிகமாக விரும்பும் ஹர்திக் பாண்டியா, லம்போர்கினி ஹுராகான் இவோ (Lamborghini Huracan Evo) காரைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார். இதன் விலை 3.73 கோடி. ஆம் இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக விலைமதிப்புள்ள காரை வைத்துள்ளது இவர்தான். இதைத்தவிர டயோட்டா எடியோஸ், ஆடி ஏ6, ரேஞ்ச் ரோவர் ரோக் உள்ளிட்ட பலவகை கார்களை அவர் வைத்துள்ளார்.
கருண் நாயர்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 303 ரன்களை குவித்து சாதனை படைத்தவர் கருண் நாயர். இதன் நினைவாக இவரது காரின் நம்பர் பிளேட்டுகள் அனைத்தும் 303 என்ற எண்ணுடன் உள்ளன. இவர் அதிகமாக பயன்படுத்தும் கார் ஃபோர்ட் மஸ்டாங்க் ( Ford Mustang). இதன் விலை 67 லட்சம்.
ஹர்பஜன் சிங்
தோனியைப் போலவே கார்களை அதிகம் விரும்பும் நபரான ஹர்பஜன் சிங், ஹம்மர் 2 வகைக் காரை வத்துள்ளார்.