No menu items!

கொஞ்சம் கேளுங்கள்… தேர்தல் பிரச்சாரங்கள்… எப்படி இருந்தது… இப்படி ஆகிவிட்டதே!

கொஞ்சம் கேளுங்கள்… தேர்தல் பிரச்சாரங்கள்… எப்படி இருந்தது… இப்படி ஆகிவிட்டதே!

தமிழ் பழமொழிகள் ஒரு மெலிதான சிரிப்பை ஏற்படுத்தும். பல பழமொழிகள் காலப்போக்கில் மருவி மாறிவிட்டதாக சொல்லப்படுகிறது. ‘ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்’ – ‘ஆயிரம் வேரை’ என்பது மருவி விட்டது. இருந்தாலும் ‘ஆயிரம் பேரை’ என்பது ஒருவித முறுவலை ஏற்படுத்தவில்லையா?

அதுபோல ‘வர வர மாமியார் கழுதை போல ஆனார்’ என்பது மாமியார்களை பார்க்கிற போதெல்லாம் விஷம சிரிப்பை ஏற்படுத்துகிறது அல்லவா? ஒருவரின் குணம் அல்லது நடத்தை எதிர்பாராமல் வீழ்ச்சி அடைந்தால் இதை கூறுவதுண்டு.

இந்த பழமொழி இப்போது அதிகம் நினைவுக்கு வந்தது – சமீப கர்நாடக தேர்தல் பிரச்சாரங்களை பார்த்தபோது. தேர்தல் பிரசாரங்களில் அரசியல் பண்புகள் உச்சத்தில் போவதற்கு பதில் அதலபாதாளத்தில் வீழ்ந்து வருகிறதே!

“முன்பெல்லாம் தனிநபர் தாக்குதல்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்காது. கட்சி கொள்கைகள் விமர்சிக்கப்படும். அரசு நிர்வாகத் தோல்விகள் அம்பலபடுத்தப்படும். ஓட்டுக்காக சாதி மத பிரிவுகள் வெளிப்படையாக பேசப்பட்டு, சாதி மத மோதல்கள் ஏற்படும் விதத்தில் பிரச்சாரங்கள் இருந்ததில்லை” என்று கூறினார் கர்நாடக தேர்தல்களை பார்த்து விட்டு திரும்பிய ஒரு அரசியல் நிருபர்.

“ஒரு கட்சிக்கு மக்கள் செல்வாக்குள்ள ஒரு மாபெரும் தலைவர் இருந்தால் தேர்தல் வெற்றிக்கு இதுபோன்ற மோசமான யுக்திகள் தேவைப்படாது. எம்.ஜி.ஆர் தலைமை தாங்கிய அதிமுகவில் தேர்தல் வெற்றிகள் இதற்கு ஒரு உதாரணம். எந்த தொகுதியில், எந்த மதத்தின் செல்வாக்கு, எந்த சாதி எங்கே அதிகம் என்று பார்த்து அவர் வேட்பாளர்களை நிறுத்தியதே இல்லை. அவர் நிறுத்திய வேட்பாளர்களின் வெற்றியை இவையெல்லாம் பாதித்ததே இல்லை. எம்.ஜி.ஆர் நிற்க வைத்திருக்கிறார் என்று மக்கள் அவரது வேட்பாளர்களை ஜெயிக்க வைத்தார்கள்” என்றார் அருகில் இருந்த தமிழ் நிருபர். உண்மைதானே!

மாநிலத் தேர்தல்களில் மத்தியில் ஆளும் தலைவர்கள் வேட்டியை மடக்கிக்கொண்டு ‘நீயா நானா பார்த்துவிடுவோம்’ என்று பிரசாரத்தில் குதிக்க மாட்டார்கள். மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் தெருத் தெருவாக ஓட்டு கேட்பது மத்திய அமைச்சர்களின் வழக்கமாக முன்பெல்லாம் இல்லை.

17 ஆண்டுகள் நாடாண்ட நேரு காலத்தில், நாடாளுமன்றம், சட்டமன்றம் இரண்டுக்கும் சேர்த்து தேர்தல் நடந்தன.

தமிழ்நாட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரு வருவார். சென்னை கடற்கரையில் பிரம்மாண்ட கூட்டத்தில் பேசுவார். பெரும்பாலும் அவர் பேச்சு உலக அரசியல் பற்றியே இருக்கும். கடைசியாக 5 நிமிடம் இந்திய – தமிழ்நாட்டு அரசியல் பற்றி வருவார். அப்போது ராஜாஜியும், அவரது சுதந்திரா கட்சியும் பிரதான எதிர்கட்சியாக விஸ்வரூபம் எடுத்திருந்தது.

“ராஜாஜி என் மதிப்புக்குரியவர். ஆனால் அவர் இப்போது என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை” இதுதான் நேரு தாக்கி பேசியது. நேருவின் முகம் வாடக்கூடாது என்றுதான் மக்கள் அவர் உள்ளவரை பெருவாரியாக காங்கிரசுக்கு வாக்களித்தார்கள். எம்.ஜி.ஆர் உள்ளவரை அதிமுக வெற்றி பெற்றதுபோல!

தமிழ் நண்பர் விளக்கிக்கொண்டே போனார்.

“பிரதமர் மோடியிடம் மக்கள் பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள். அவரது அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமாக புதுமையாக இருக்கிறது என்றே மக்கள் வியப்போடு பார்க்கிறார்கள். நாட்டில் மூலை முடுக்கில் நடப்பவைகள் எல்லாம் அறிந்தவராக இருக்கிறார். சீனாவையும், பாகிஸ்தானையும் திணறடிக்க வியூகம் அமைக்க வேண்டிய தேசப் பாதுகாப்பு உட்பட பல பிரச்னைகளில் அவர் சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவரை தேர்தல் பிரசாரத்திற்காக தெருத் தெருவாக அலைக்கழிப்பது எந்த விதத்தில் சரி?” என்பது நிருபர்கள் கேள்வி.

எதிரியின் கோட்டையைப் பிடிக்க படையெடுத்து வருவது போல, இன்னும் எத்தனை காலத்துக்கு ஒவ்வொரு கட்சியும் தொண்டர்களை திரட்டி பிரம்மாண்ட ஊர்வலங்களை நடத்துவது? ஓட்டளிக்கும் வயது வரம்பு 18 இப்போது! அந்த வயதிலேயே நாட்டு விஷயங்கள் அறிந்தவர்களாக இளைஞர்கள் இருப்பார்கள் என்று முடிவு செய்து இந்த வயது வரம்பு. அவர்களை நிம்மதியாக யோசித்து ஓட்டளிக்க விடவேண்டியது கட்சிகளின் கடமை என்பது இளைஞர்கள் கூறுவது. சாதனைகளையும், சாதக பாதகங்களையும் எடைபோட எங்களுக்கு தெரியும் என்கிறார்கள் இளைஞர்கள்.

முன்பு தேர்தல் பற்றி சில நல்ல கருத்துகள் எழுப்பப்பட்டன! எங்கே! வேறு எங்கே? தமிழ்நாட்டில்தான்! எல்லா கட்சி தலைவர்களையும், முக்கியமான பிரமுகர்களையும் எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கலாம் என்று ஒருமுறை அண்ணா தெரிவித்தார். 1967ல் அவர் முதலமைச்சராக ஆகிவிட்டார். அவரது தென் சென்னை எம்.பி. இடத்துக்கு மறுதேர்தல் வந்தது. காங்கிரஸ் சார்பில் ஆர்.வெங்கட்ராமனை அந்த இடத்துக்கு எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கலாம் என்றார் அண்ணா. காமராஜ் ஏற்கவில்லை. ஒரு மாறுதலான சிந்தனை தடுக்கப்பட்டுவிட்டது.

கர்நாடகா தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தீவிரமாக களத்தில் இறங்கினார். எச்சரிக்கை விடும் தொணியில் மிக உரக்க பேசுகிறார் அவர். அவருடைய ஒரு பேச்சு உச்ச நீதிமன்றத்தில் கண்டனத்துக்கு ஆளாயிற்று. இதற்கு முன் மத்திய உள்துறை அமைச்சர்கள் யாரும் இப்படியெல்லாம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது கிடையாது.

“காங்கிரஸை பொருத்தவரையில் ஜீவ மரண போராட்டம் போல பிரசாரம் செய்ய வேண்டிய பரிதாபநிலை! ராகுல் மீது ஒருவித அனுதாபம் மக்கள் மத்தியில் இருப்பது தெரிந்தது. ஆனால் கொள்கை அலை, லட்சிய அலை என்பதெல்லாம் இப்போது அங்கே வீசவே இல்லை” என்று முடித்தார் நிருபர்.

இருந்தாலும் வடமாநிலங்களை காட்டிலும் தென்னிந்திய வாக்காளர்கள் வித்தியாசமாகவே இருக்கிறார்கள் என்று டெல்லி நிருபர் கடைசியாக முத்தாய்ப்பாக கூறினார்.

ஆனால் இந்த பெரும் கூட்டங்கள், ரோட் ஷோக்கள் எல்லாம் பயன்தராது – உருப்படியான திட்டங்களும், கொள்கைகளும்தான் வெற்றியை தேடித் தரும் என்ற நிலை தேர்தலில் உருவாக வேண்டிய நேரம் நெருங்குகிறது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டதே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...