No menu items!

புத்தகம் படிப்போம் 26: நும்மினும் சிறந்தது நுவ்வை – எளிமையாக சங்க இலக்கியம்

புத்தகம் படிப்போம் 26: நும்மினும் சிறந்தது நுவ்வை – எளிமையாக சங்க இலக்கியம்

பா. அசோக்

சுஜாதா, குமுதம் ஆசிரியராக இருந்தபோது, ‘கண்ணீரில்லாமல்’ என்ற தலைப்பில் சங்க இலக்கியம், கர்நாடக சங்கீதம் உள்ளி்ட்ட பல தலைப்புகளில் எழுதினார். கடுமையான சப்ஜெக்ட்டுகளை எளிமையாக சொல்லிக்கொடுக்கும் வகையில் அத்தொடர் அமைந்தது. அத்தகைய ஒரு நூல் பிரபு ராஜதுரையின் ‘நும்மினும் சிறந்தது நுவ்வை – சங்கப் பாடல்களினூடான தேடல்’.

முகநூல் பதிவுகளில் வாசித்தாலும் நூலாக மொத்த கட்டுரைகளையும் வாசிப்பது வியப்பையே தருகிறது. கற்றுக்கொள்ளும் ஆர்வமும் வாசிப்பு ஆர்வம் மட்டும் போதாதாது. அதை பிறருக்கு கடத்துவது முக்கிய கடமை.  தான் படித்த, உணர்ந்த சங்க இலக்கிய தமிழின்பத்தை, தான் புரிந்துகொண்டதை, நமக்கும் புரியும்படியாக, சமகால நடப்புகள், இலக்கிய, பைபிள், அரசியல், சினிமா இவற்றின் ஊடாக, எளிமையான தமிழில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

நூலை முழுவதுமாக வாசித்த பின்னர் எனக்கு தோன்றியது இதே: தனக்கு என்ன தெரியும் என்பதை விட தனக்கு என்ன தெரியாது என்பதை அறிந்துணர்ந்தவனே அறிஞன். பிரபு ராஜதுரை அறிஞர்.

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்வது தன் பணியல்ல என்பதை நன்குணர்ந்தவர். அதைவிட முக்கியம், இந்த நூலை எழுதியதே பாடலுக்கு பாடல், விளக்கவுரையோ தெளிவுரையோ பதவுரையோ கருத்துரை சொல்லவோ அல்ல. தாகத்தோடு வருபவனுக்கு, இந்த இடத்தில் நீர் சுனை உள்ளது; அது சுவையானது; பருகினால் இன்பம் என சங்கத்தமிழை வாசிக்க சஞ்சலப்படும் என் போன்ற வாசகர்களை, தமிழ்ச்சுனை நோக்கி வர வைக்கும் தூண்டிலாக இந்த நூல் இருக்கிறது.

இந்த நூலில் நான் வாசித்த முதல் கட்டுரை ‘வலவன் ஏறா வானவூர்தி’. அது ஒரு நோஸ்டாலஜியாவை கிளப்பியது. 1980களில் பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தால் நடத்தப்பட்ட, பகீரதன் ஆசிரியராக இருந்த, ‘ஓம் சக்தி’ மாத இதழில், எரிக் வான் டானிகன் எழுதிய ‘chariots of gods’ என்ற நூலை பற்றிய கட்டுரை ஒன்றில் கண்ட பாடல் தான் ‘வலவன் ஏறா வானவூர்தி.’ ஏலியன்களை பற்றிய டானிகனின் கட்டுரைகளில் லாவகமாக இந்த பாடலை கோர்த்திருப்பார்கள். கிட்டத்தட்ட ‘conspiracy theory’தான் அந்நூல். அதிலும் conspire செய்தனர் நம் ‘நூலோர்’.

முதல் கட்டுரையே பெண் பகடி தான். கேலியும் கிண்டலும் நகைச்சுவை உணர்வும் அருகிப்போயே விட்டன இன்று. பெண்ணை கேலி செய்தலும் அவர்கள் ஆண்களை கேலி செய்வதும் தமிழ் சமூக கூறுகளில் ஒன்று. நான் சொல்வது உருவ கேலியோ வக்கிர கேலிகளோ அல்ல. பாரதிராஜா படத்தின் பெண்களை பாருங்களேன், ஆண்களை அப்படி கேலி செய்வார்கள். உண்மையில் கேலி என்பது நகைச்சுவையால் தன் பக்கம் ஈர்க்கும் உத்தியே. வரகவி காளமேகத்தின் கிண்டலுக்கு இணையேது.  

நூலில் நிறைய ஆக்கிரமித்திருப்பது கபிலரும் அவ்வையும். கற்றாரை காமுறும் sappiophile ஆகவே நூலாசிரியர் மாறிவிடுகிறார். வேள்பாரியின் தாக்கமே, கபிலரை அதிகம் நேசிக்க செய்யும். பரணரின் ‘பாம்படித்த கழி’ ‘பேயும் அறியா மறைஅம் புணர்ச்சி.’ அடடா Dark comedyக்கு அப்பன், எங்கள் கபிலன் சொன்ன ‘பெருங்கருங்கூத்து.’

திருப்பரங்குன்றத்து செங்கோட்டு யானையும் புலிகளின் தேசிய மலரான செங்காந்தளும், வண்ணம் குறித்த சங்கப்புலவர்களின் பார்வை. இன்னும் ஆழமாக வண்ணத்தை ஆய்வு செய்தால் ஆசீவகத்தின் வண்ண பயன்பாடுகளை அறியலாம்.

பைபிள், சினிமா, மேலை இலக்கியங்கள் என பலவாறாக சங்கப் பாடல்களோடு இணைத்து செய்திகள் சொன்னாலும், சங்கத் தமிழின் அடிநாதம் சமத்துவமும் மனிதமும் பாசாங்கற்ற இயல்பும் என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் நூலாசிரியர் வியக்கிறார்.

‘நுவ்வினும் சிறந்தது நுவ்வை.’ தன்னோடு வளர்ந்த மரத்தை பார்த்து, தன் தங்கை இருக்கிறாள் என காதலனிடம் வெட்கும் காதலி, எனக்கு பாரதிராஜாவின் கருத்தம்மாவாகவும் கடைசி விவசாயியில் வரும் விஜய் சேதுபதியின் மறைந்த காதலியாகவும் தெரிந்தார். படத்தில் வரும் காட்சியமைப்பு இதை படித்து எடுக்கப்பட்டதா என தெரியாது. ஆனால், இது ஒன்றை மட்டும் உணர்த்தியது, மாடும் நாயும் மரங்களும் இன்றைக்கும் தமிழ் மரபில் குடும்ப உறுப்பினர்கள் தாம். சங்க காலத்திலிருந்தது இன்றைக்கும் இருப்பது செழும் மரபின் நீட்சியே.

அவ்வை, கபிலர், பரணர் மீது தானும் காதல் கொண்டு நம்மையும் நேசிக்க வைக்கிறார் நூலாசிரியர். ‘கெடுக சிந்தை’ பாடல், கலைஞரின் சங்கத்தமிழால் வீரவுணர்வை கூட்டினால், இவர் அந்த தாயின் தாய்மை உணர்வை கேள்வி கேட்கிறார், ஒக்கூர் மாசாத்தியாரின் உணர்வும் இதுவே.

நற்றிணை கிடாவெட்டு பாடல். இனி பாண்டி கோவிலை கடக்கும் போதெல்லாம், கறியின் மணத்தோடு வாயிலும் நினைவிலூமூறும். விலங்கை பலி கொடுக்க கூடாதென ஆணையிட்ட அசோக மன்னன், 18000 சமண ஆசீவகர்களை கொல்ல உத்தரவிட்டு பராபர் குகையில் பொறித்ததும், அவனை எதிர்த்த கூட்டம் பற்றிய ரொமிலா தாப்பரின் கூற்றும், அவர்களுடைய புலாலுண்ணாமையும் எத்தனை முரண். அசோகர் போரை கைவிட்டது போல சொல்லிக்கொண்டாலும், கல்வெட்டிக் கொண்டாலும் வன்முறையை கை விட்டதில்லையாம். தன் சமையல் கட்டில் கூட கம்மியாக வெட்டி, தன் புலால் உண்ணாமையை கடை பிடித்தானாம், அவன் உடன் பிறந்தார் எண்மரோ நூறு பேரோ அசோகனால் கொல்லப்பட்டனராம். தமிழ் அரச மரபில் அப்படியில்லை என நூலாசிரியர் வியக்க வேண்டாம். தீயில் தப்பித்த கரிகாலனும் பிசிராந்தையின் சோழநண்பனையும் கேளுங்கள் சொல்வார்கள்.

இனி வரும் ஆய்வுகள் வரலாற்றை புனிதப்படுத்த முடியாது என்றே காட்டுகின்றன. கள்ளும் கறியும் காதலும் களவும் தமிழர் இயல்பென சங்கப்பாடல்கள் நிறுவ, வள்ளுவர் கொஞ்சம் எலைட் தான்.

இவற்றையெல்லாம் தாண்டி புலவர்களின் புலமை செருக்கை படிக்க எத்தனை ஆனந்தம். பெருங்குன்றூர்கிழாருக்கும் பெருஞ்சித்திரனுக்கும் எத்தனை அறிவுச்செருக்கு. நாமார்க்கும் குடியல்லோம் என பாடிய கூட்டமல்லவா? தோழமை சுட்டலெல்லாம் இல்லை. மன்னனிடம் நேருக்கு நேராய் அவன் குறையை சொல்லியிருக்கிறார்கள்.

அன்றைய பெருஞ்சித்திரனாரின் கோபமும் புலமையும் செருக்கும் இன்றிருந்த தென்மொழியின் ஆசிரியர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் வரை நீடித்திருப்பது இவ்வினத்தின் பெருமையே.

கலாச்சார கட்டுப்பெட்டி நகரமாக மாறிப்போன மதுரை பற்றிய ஏக்கம் நமக்கும் வருகிறது. பரிபாடலின் வையை வாழ்த்தை படித்த ஆசிரியர், நாளைக்கு அழகர் ஆற்றிலிறங்குவதை பார்த்து ஓரளவேனும் ஆறுதல் பெறலாம். ஓராயிரம் நல்லழுதியார்கள் திரிவார்கள்.

மலைபடுகடாஅம் என்பது ஓசை என சொல்லி, spaghetti இசையின் பிதாமகன் என்னியோ மோரிக்கோனோடு இணைப்பது சிம்பொனி சுகம்.

கலைஞரின் சங்கத்தமிழால் எனக்கு மிகவும் பிடித்த கணியன் பூங்குன்றனை லேசாக தொட்டுவிட்டு சென்றிருக்கிறார்.

பெண்கள் கல்லூரி வாசலென சங்க பாடல், பகடியில் ஆரம்பித்தாலும் இறுதியில் படி படி என சங்கப்பாடலில் முடிப்பது சிறப்பு.

இந்த நூலில் மிக முக்கியமாக கண்ணுற்றது, நூலாசிரியர், எந்த உரையாசிரியர்களையும் நம்பவில்லை. அவருடைய பாரிய வாசிப்பு, உரை அரசியல், மற்றும் பதிப்பரசியலை நன்கு அறிந்தமையால், வெளிப்படையாகவே தன் அதிருப்தியை தெரிவித்து விடுகிறார்.

எழுத்தாளர் சுஜாதாவின் தாக்கம் பரவலாக இருப்பது போல எனக்கு தெரிகிறது. ஒரு வேளை சுஜாதா இருந்திருந்தால் இவர் தான் என் நாயகன் கணேஷ் என அறிமுகப்படுத்தியிருப்பார். வசந்த் பதவிக்கு நான் அப்ளிகேஷனோடு நின்றிருந்திருப்பேன்.

வாழ்த்துகள் அண்ணன் பிரபு ராஜதுரை. வரலாற்றில் இந்நூல் நிலைத்திருக்கும். இதை திக்கெங்கும் எடுத்துச்செல்வது எம் கடமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...