விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், 2009 மே 19 அன்று கொல்லப்பட்டுவிட்டதாகவும், விடுதலைப் புலிகளுடன் நடைபெற்றுவந்த நீண்ட கால யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இலங்கை ராணுவம் அறிவித்தது. தொடக்கத்தில் இதனை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை, மறுத்தார்கள். என்றாலும், மறுப்புக்கான உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால், அடுத்த சில ஆண்டுகளில் பிரபாகரன் இறந்துவிட்டார் என முடிவு செய்யப்பட்டு, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கூட முடித்து வைக்கப்பட்டது. 14 ஆண்டுகள் ஆகிவிட்டது…
இந்நிலையில், சமீபத்தில் உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன், “பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார்’ என்று திடீரென அறிவித்துள்ளார். இது 2009 முதல் அவ்வப்போது அவர் சொல்லி வருவதுதான் என்றாலும், இம்முறை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, அறிக்கையாக வெளியிட்டுள்ளதால், உலகத் தமிழர்களிடையே அது பேசு பொருளாகியுள்ளது. இப்போதும் பிரபாகரன் கொல்லப்படவில்லை என்றும் உயிரோடு இருப்பதாகவும் நம்புபவர்கள் அல்லது நம்ப ஆசைப்படுபவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
சரி, பீடிகை போதும்; விஷயத்துக்கு வருவோம்…
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள இலங்கை இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என அறிந்துகொள்வது அவசியம். அதற்கு உதவக்கூடிய நூல்தான், நிதின் கோகலேயின் ‘இலங்கை இறுதி யுத்தம்’. நிதின் கோகலே ‘SRILANKA: FROM WAR TO PEACE’ என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. இந்தப் புத்தகம் இலங்கை இனப்பிரச்சினையை பற்றி அல்ல இறுதிப் போரை வெறும் போராக மட்டுமே பார்த்து எழுதப்பட்டுள்ளது.
இலங்கை இறுதி யுத்தம் நடைபெற்ற தருணங்களை நேரில் பார்த்து, பலரை பேட்டி கண்டு, இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் நிதின் கோகலே. NDTV தொலைக்காட்சியின் ராணுவ, பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பான ஆசிரியராக பணியாற்றிவர். இருபத்தைந்து ஆண்டுகளாக ஈட்ட முடியாதிருந்த வெற்றியை, 33 மாதங்களில் இலங்கை ராணுவம் எப்படி சாத்தியமாகியது என்பதற்கான இலங்கையின் ராணுவத் திட்டங்களை விளக்கமாக இந்தப் புத்தகம் விவரிக்கிறது. நெருங்க முடியாத நெருப்பாக இருந்த பிரபாகரன் எப்படி வீழ்த்தப்பட்டார், விடுதலைப் புலிகள் இயக்கம் சிதறடிக்கப்பட்டது எவ்வாறு என விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களையும் நுணுக்கமாக ஆராய்கிறது.
இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக சொல்லும் நிதின் கோகலே அது குறித்து புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்…
“இறுக்கமான முகத்துடன் விநாயகமூர்த்தி முரளிதரன் குனிந்து பார்த்தார். உடலைக் கவனித்தார். பெல்ட்டைப் பார்த்தார். அடையாள அட்டையை நோக்கினார். துப்பாக்கியை ஆராய்ந்தார். அனைத்தும் அவரது முன்னாள் தலைவருடையவை. சில கணங்களுக்குப் பின் உலகுக்கு அறிவித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார்.
கர்ணல் கருணா என்றழைக்கப்படும் முரளிதரனுக்கு அது ஒரு சோகமான தருணம். ஒரு காலத்தில் பிரபாகரனின் மெய்க்காப்பாளராக இருந்த கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பின் அடிமட்டத்தில் சேர்ந்து சிறிது சிறிதாக உயர்ந்து அந்த அமைப்பின் மிகவும் சிறந்த தளபதிகளில் ஒருவராக மிகவும் நம்பத்தகுந்தவராக ஆனார். அதே அமைப்பிலிருந்து 2004இல் விலகினார்.
அடிமட்டத்திலிருந்து ஒரு கெரில்லாப் படையை உருவாக்கி, அதில் வலுவான ஒரு தரைப்படை, திறமையான ஒரு கடற்படை, அப்போது தான் முளைத்துள்ள ஒரு விமானப்படை என அனைத்தையும் கொண்டிருந்தார் பிரபாகரன். பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியைத் தன் கைக்குள் வைத்திருந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசை ஆட்டிப்படைத்து வந்தார். அப்படிப்பட்ட வலுவான ஒரு தலைவருக்கு ஏற்பட்டது மிகச் சாதாரணமான ஒரு முடிவு. ஆனால், இலங்கை இராணுவத்துக்கு அது அவ்வளவு எளிதான ஒரு வெற்றியாக இருக்கவில்லை. 33 மாதங்கள் கடுமையான, தொடர்ச்சியான, தீவிரமான போராட்டத்துக்குப் பிறகே, பிரபாகரனை ஒரு சதுப்புநிலக் காட்டுப் பகுதிக்குள் குறுக்கி கொல்ல முடிந்தது.
பிரபாகரன் கொல்லப்பட்டு இரு நாட்களுக்குப் பின் இந்தப் போரை வழி நடத்திய இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா என்னிடம் பேசினார். அவரது அலுவலகத்தில் நடந்த நேர்முகத்தின் போது பிரபாகரனின் கடைசி சில மணிகளைப் பற்றி விளக்கிய பொன்சேகா கூறினார்: ‘18 மே இரவு, 19 காலை, விடுதலைப் புலிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து கொண்டனர். நந்திக்கடல் காயல் பகுதியில் எங்களது முதல் பாதுகாப்பு வளையத்தை தாக்கி உடைத்து வெளியேறினர். இந்த மூன்று குழுக்களுக்கும் தலைமை தாங்கியவர்கள் ஜெயம், பொட்டுஅம்மான், சூசை ஆகியோர். ஆனால், முதல் வளையத்துக்குப் பின் இரண்டாவது மூன்றாவது வளையங்கள் இருக்கும் என்பதை அவர்கள் கணிக்கத் தவறிவிட்டனர். பிரபாகரனும் அவரது மெய்க்காப்பாளர்களும் தப்பித்துவிட்டதாக நினைத்தனர். ஆனால், உண்மையில் 250 பேர் அடங்கிய புலிகள் எங்களது முதலாம், இரண்டாம் பாதுகாப்பு வளையங்களுக்குள் நன்றாகச் சிக்கிக்கொண்டனர்.
அன்று இரவு நடந்த கடுமையான போருக்குப் பின், கிட்டத்தட்ட அனைத்துத் தலைவர்களுமே கொல்லப்பட்டனர். 19 காலை, பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஜெனரல் பொன்சேகா நிதானமாக, சுருக்கமாகச் சொன்ன இது அனைத்துமே தொலைக்காட்சி வாசகர்களுக்கானது. இந்தியாவின் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சி என்.டி.டி.விக்காக நான் அவரைப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன்.”
தொடர்ந்து, “அவரது பேச்சில் 18, 19 மே மாதத்தில் நடந்த முழு விவரமும் வெளிவரவில்லை. பின்னர் பலருடன் பேசியதில் அந்த இரு நாள்களில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டேன்” என்று கூறும் நிதின் கோகலே, 2009 மே 16, 17, 18 தேதிகளில் நந்திக்கடல் பகுதியில் என்ன நடந்தது என்பதை விரிவாக எழுதியுள்ளார்.
பிரபாகரன் சாகவில்லை, உயிருடன்தான் உள்ளார் என சொல்பவர்கள் மீண்டும் மீண்டும் முன்வைக்கும் வாதம், அவர் உடல் டி.என்.ஏ. சோதனை செய்யப்படவில்லை என்பது. ஆனால், “பிரபாகரனின் இறப்புக்கு அடுத்த வாரம், புலி ஆதரவு இணையத்தளங்களும் தமிழ் இதழ்களும் செய்தித்தாள்களும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் இராணுவம் காட்டிய உடல் பிரபாகரனைப் போன்ற வேறு ஒருவரது உடல் என்றும் எழுதின. ஆனால், இலங்கை அரசைப் பொறுத்தமட்டில் இராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியே. ஒரு மாதம் கழித்து டி.என்.ஏ. சோதனை மூலம் நந்திக்கடல் காயலில் கண்டெடுக்கப்பட்ட உடல் பிரபாகரனுடையதே என்று உறுதி செய்யப்பட்டது” என்கிறார் நிதின்கோகலே. இதை இவர் இப்போதல்ல 2009ஆம் ஆண்டே சொல்லிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2009 மே 19இல் நடந்தவற்றில் இருந்துதான் இந்தப் புத்தகம் தொடங்குகிறது. அன்றைக்கு பிரபாகரனின் இறந்த சடலத்தினை ஆய்வு செய்யும் கருணா, அது அவர்தான் என்று சான்றளிக்கிறார். அதைத் தொடர்ந்து சரத் பொன்சேகா, பிரபாகரனை கொன்றது எப்படி என்று விளக்குகிறார். அதைத் தொடர்ந்து கடைசிக்கட்ட போரில் இலங்கை இராணுவத்தின் திட்டமிடலும் போர்த்தந்திரங்களும் விவரிக்கப்படுகின்றன. அதற்குடுத்தடுத்த அத்தியாங்களில் இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியை பிரபாகரன் எப்படி தன்னுடைய முழுமையான நிர்வாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதனையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கான காரணங்களையும் ஆராய்கிறார்.
ஆனால், ‘வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான்’ என்பதுபோல், ‘என்.டி.டிவி. ஆசிரியர் என்பதால் பக்க சாய்வில்லாமல் எழுதியிருப்பார்’ என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் ஏற்படும். ஈழப் போரில் இந்தியாவின் பங்கைப் பற்றி எழுதும் போது, ‘ஐபிகேஎப் இலங்கையில் எதையுமே செய்யவில்லை; புலிகள்தான் போலியான செய்திகளை அது சார்ந்த ஊடகங்களின் மூலம் பரப்பினர்’ என்றெல்லாம் எழுதுகிறார்.
எழுத்தாளர் ஜெயமோகன், இந்நூலை படித்துவிட்டுதான், இந்திய ராணுவம் இலங்கையில் தமிழ் பெண்களை கற்பழக்கவில்லை என்று சொல்கிறார் போலும். ‘இந்திய அமைதிப்படை பற்றிய பெருமளவிலான கற்பழிப்புக் குற்றச்சாட்டுகள் உருவானது பிரேமதாசாவுக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வுக்குப் பின்னர்தான். இந்தியா மீதான கடும் வெறுப்பை உருவாக்குவது சிங்கள தேசியத்தின் தேவை. அதை உருவாக்க புலிகளை பிரேமதாசா பயன்படுத்திக்கொண்டார்” என்று ஜெயமோகன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோல், ‘இலங்கை ராணுவம் எப்போதும் போர்க் காலங்களில் மக்களின் உயிரை மதித்து அவர்களுக்காகவே போர்களில் தோற்றது. புலிகள் எப்போதும் மக்களின் உயிரை மதிக்கவில்லை’ என்று நிதின்கோகலே சொல்வதும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
இவையெல்லாம் இருந்தாலும் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது? பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதா இல்லையா? என்பவற்றை தெரிந்துகொள்ள இந்நூலை படிக்கலாம்.
இலங்கை இறுதி யுத்தம்
நிதின் கோகலே
விலை ரூ. 250
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை