முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகி உள்ள படம் ‘லீச்’. எஸ் .எம் இயக்கியுள்ளார். சென்னையில் நடந்த இந்த படவிழாவில் பேசிய தயாரிப்பாளர் அனுாப்ரத்னா ‘‘லீச் என்றால் அட்டைப்பூச்சி, அது நமக்குத் தெரியாமலேயே நம் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பது.அதை நாம் கவனிக்காமல் விட்டால் ரத்தம் இழந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நல்லவரா கெட்டவரா என்பது நமக்குத் தெரியாது. அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்த படத்தின் கரு ’’என்கிறார் தயாரிப்பாளர்
பட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பேரரசு பேசியது:
‘‘இசைஞானி இளையராஜா பாடல்களை, நாம் கேட்போம், ரசிப்போம். அது மகிழ்ச்சியான அனுபவம். ஆனால், இப்போது நம்மை காப்பிரைட் விஷயம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்.அவர் பாடலைப் பாடும் போது ஒரு ஆத்ம திருப்தி, மகிழ்ச்சி கிடைக்கும் . அவர் பாடல்களை நாம் ரசித்து பாட வேண்டாமா? ஸ்டார் ஹோட்டல்களில் , நட்சத்திர விடுதிகளில் பாடப்படுகிறது என்றால் அதற்காக காப்பிரைட் தொகை வாங்கிக் கொள்ளலாம். பொது இடத்தில் பாட காப்பிரைட் கேட்க கூடாது. ஆரம்பத்தில் கிராமியப் பாடல்கள், கும்மிப் பாடல்கள் அடிப்படையாக வைத்து பாடல்கள் வந்தன. அதிலிருந்து எடுத்து இருக்கிறார்கள். அவை வெற்றி பெற்றன. இப்போது இசை மாறிவிட்டது. கரகாட்டக்காரன் படத்தில் வரும் மாங்குயிலே பூங்குயிலே பாடல் கூட, ஏறு மயில் ஏறிவிளையாடும் முகம் என்று பாடலை தழுவியது. என் பாடலை யாரும் பாடக்கூடாது என்று சொல்ல முடியுமா?
இந்த படக்குழுவினர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்துள்ளனர். தமிழ் சினிமாவுக்கு மொழி பிரச்சினை இல்லை. நாம் அனைவரையும் அரவணைப்போம். தமிழ்சினிமாவில் ஒற்றுமை வேண்டும்.பாலிவுட் நடிகர் அமீர்கான் தான் நடிக்கும் படத்திற்குச் சம்பளம் எதுவும் வாங்குவதில்லை. முன்பணம் எதுவும் வாங்குவதில்லை .கதை பிடித்திருந்தால் நடிப்பார்.அந்தப் படத்தின் வசூலில் ஒரு பகுதியை, லாபத்தில் ஒரு பகுதியை மட்டும் பெறுகிறார் என்று படித்தேன்.என்ன ஒரு அருமையான திட்டம்! எப்படிப்பட்ட மனம் அவருக்கு! அந்த அளவுக்கு அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமாவும் அவரைக் கைவிடாது. அப்படிப்பட்ட நிலை இங்கு வருமா? இங்கே சில நடிகர்கள் முன்பே பல கோடி வாங்குகிறார்கள். நாம் சண்டை போட்டு பிரிந்து நிற்க கூடாது. படம் நல்லா இருந்தால் மக்கள் தியேட்டருக்கு வர்றாங்க. டிராகன் வெற்றி பெற்றுள்ளது.