மது போதையில் பாரில் நடந்த தகராறு தொடர்பாக ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
“ரகுவின்தே ஸ்வந்தம் ரசியா” மலையாள திரைப்படத்தின் மூலம் 2011-ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். பின்னர் இவர் தமிழில் சுந்தரபாண்டியன் (2021), கும்கி (2012) போன்ற படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமானார்.
லட்சுமி மேனன் கடந்த 24-ம் தேதி தனது தோழி உட்பட மூன்று பேருடன் கொச்சியில் உள்ள மதுபான பாருக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு, மது அருந்த வந்த ஆலப்புழாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவருக்கும், லட்சுமி மேனன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருதரப்பினரும் வெளியே வந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அலியார் ஷா சலீம் தனது காரில் புறப்பட்டபோது அவரை பின்தொடர்ந்து சென்ற லட்சுமி மேனன் உள்ளிட்ட நான்கு பேரும் இடையில் வழிமறித்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஐடி ஊழியரை காரிலிருந்து வெளியே இழுத்து லட்சுமி மேனன் தரப்பினர் தங்களது காரில் கடத்தி சென்று கடுமையாக தாக்கி ஓரிடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் அலியார் ஷா சலீம் புகார் அளித்ததைத்தொடர்ந்து போலீஸார் லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் அனீஸ், மிதுன், சோனாமோல் ஆகிய 4 பேர் மீதும் ஆட்கடத்தல், மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். நடிகை லட்சுமி மேனன் தவிர 3 பேரையும் போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர்.
இதற்கிடையே, லட்சுமி மேனன் மற்றும் ஐடி ஊழியர் இடையேயான தகராறு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, முன்ஜாமீன் கோரி லட்சுமி மேனன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ஐடி ஊழியர் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பாரை விட்டு வெளிய வந்த பின்னரும் பீர் பாட்டிலால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். ஐடி ஊழியரை நான் தாக்கியதாக அளித்த புகார் ஜோடிக்கப்பட்டது. எனக்கும் இந்த குற்றத்துக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்.