வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் பண்டிகை, ஹோலி பண்டிகை. வருடா வருடம் வடநாட்டில் அதை கொண்டாடி தீர்ப்பது வழக்கம்தான்.
ஆனால், கடந்த 25-ஆம் தேதியன்று வந்த ஹோலி பண்டிகை வித்தியாசமானது. டெல்லியில் பாரதிய ஜனதாவினர் அதை கொண்டாடிய விதமே தனி. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு ஹோலித் திருநாளில் இந்தமுறை உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. காரணம், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது!
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, மளமளவென கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுகள் நடந்துவந்த நேரம், நடப்பு மக்களவைத் தேர்தலில், ஆம்ஆத்மி கட்சி, டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அதிக அளவில் வெற்றியைக் குவிக்கப் போகிறது என்ற அரசல் புரசலான செய்தி பாரதிய ஜனதா தலைவர்களின் காதுகளுக்கு எட்டியதாகச் சொல்கிறார்கள். இந்த வதந்தி ஒருபக்கம் குடைச்சல் கொடுக்க, மறுபுறம், தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம் பா.ஜ.க.வுக்கு இன்னொருபுறம் குடைச்சல் கொடுத்து கொண்டிருந்தது.
இந்தநிலையில், தேர்தல் நன்கொடை பத்திர பிரச்சினையை திசை திருப்பவும், ஆம்ஆத்மிக்கு ஓர் அடி தரவும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக நடத்தப்பட்டதுதான் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது என்கிறார்கள்.
அந்த கைதுதான், இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகையில் இரட்டிப்பு மகிழ்ச்சியை பாரதிய ஜனதாவினருக்கு அள்ளி வழங்கியது.
டெல்லி பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவர், ‘ஒரே நேரத்தில் எங்களுக்கு ஹோலியும், தீபாவளியும் வந்தது போல இருக்கிறது’ என்று சொல்லி சொல்லி பூரித்து இருக்கிறார்.
ஆனால், வந்தது தீபாவளியல்ல, அது வேறு ஒருவிதமான வலி என்று பாரதிய ஜனதா வட்டாரத்துக்கு அப்போது தெரியவில்லை.
கெஜ்ரிவாலின் கைதுக்குக் காரணமாக அமைந்தது அவரது டெல்லி அரசின் மாற்றியமைக்கப்பட்ட மதுபான கொள்கை.
இந்த மதுபானக் கொள்கை, மொத்த மதுபான வியாபாரிகளுக்கு 12 சதவிகித லாபத்தையும், சில்லறை மதுவணிகர்களுக்கு 185 சதவிகித லாபத்தையும் நிர்ணயிப்பதாகவும், இதில் 100 கோடி ரூபாய் அளவுள்ள முறைகேடு நடந்திருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டை பாரதிய ஜனதா தூக்கிப்பிடித்தது. அது தொடர்பாகத்தான் அரவிந்த் கெஜ்ரிவால் அரெஸ்ட் ஆனார்.
இதே முறைகேடு புகார் தொடர்பாக, ஏற்கெனவே தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கல்வகுந்த்தளா கவிதா கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேப்போல மற்றொரு முறைகேடு புகார் தொடர்பாக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருந்தார். அவர்களது கைதுகளைப் போல, அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதும் கொஞ்சநாளில் சூடுதணிந்து ஆடி அடங்கி விடும் என பாரதிய ஜனதா எதிர்பார்த்தது.
ஆனால், கெஜ்ரிவால் கைது, அடுத்தடுத்து புதுப்புது திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டு வரும் என்று பாரதிய ஜனதா எதிர்பார்க்கவில்லை. அதுவும், அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அந்நிய நாடுகளில் இருந்து எதிர்ப்பு வரும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?
கெஜ்ரிவால் கைது தொடர்பாக கேள்வியை எழுப்பி, இந்த ஆட்டத்தை முதலில் ஆரம்பித்து வைத்த நாடு அமெரிக்கா.
அமெரிக்க அரசுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், ‘கெஜ்ரிவாலின் கைது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
‘கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கெஜ்ரிவால் கைது தொடர்பாக நேர்மையான, ஒளிவுமறைவில்லாத, காலம் தாழ்த்தாத சட்ட நடவடிக்கைகள் வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்’
இதுதான் மேத்யூ மில்லர் தெரிவித்த கருத்து.
இதனால் அதிர்ந்துபோன மத்திய அரசு, டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் துணைத் தலைமை அதிகாரி குளோரியா பெர்பெனாவை அழைத்தது. அவரிடம் அரை மணிநேரம் பேசி தனது எதிர்ப்பை பதிவு செய்தது.
‘இந்தியாவின் தேர்தல் தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் வெளிப்புற குற்றச்சாட்டுகள் தேவையற்றது, அதை ஏற்க முடியாது’ என்பதுதான் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு.
மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சந்தீப் ஜெய்ஸ்வால், இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
‘சட்டத்தின்படிதான் செயலாற்றுகிறோம். இந்த உண்மையை ஏற்க சக ஜனநாயக நாடுகளுக்கு எந்த சிரமமும் இல்லை’ என்று அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில், கெஜ்ரிவால் கைது தொடர்பாக, அமெரிக்காவைத் தொடர்ந்து அடுத்ததாக களமிறங்கி கருத்து தெரிவித்த நாடு ஜெர்மனி.
‘இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது எங்களுக்கு கவலை அளிக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று நாங்கள் கருதுகிறோம். நம்புகிறோம்.
கெஜ்ரிவால் கைது தொடர்பான வழக்கில், நீதித்துறை சுதந்திரம், அடிப்படை கோட்பாடுகள் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். எல்லோரையும் போல கெஜ்ரிவாலும் நியாயமான பாரபட்சமன்ற விசாரணைக்குத் தகுதியானவர். கெஜ்ரிவால் கைது விவகாரத்தில், நீதித்துறையின் அடிப்படை விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்’ என்று ஜெர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூற, அடுத்த சுற்று பரபரப்பு பற்றிக்கொண்டது.
இதற்கும் இந்தியா எதிர்ப்பைக் காட்டத் தவறவில்லை.
இந்தியாவுக்கான ஜெர்மன் தூதரக துணை தலைமை அதிகாரி ஜார்ஜ் என்ஸ்வெய்லரை அழைத்த இந்தியத் தரப்பு, ‘இது வெளித்தலையீடு. எங்களது நீதித்துறையின் செயல்பாட்டில் யாரும் தலையிட வேண்டாம்.
அதுபற்றி குறைத்து மதிப்பிடவும் வேண்டாம். சட்டம் தனது கடமையைச் செய்கிறது. இந்தியா குறித்து ஒருதலைப்பட்சமான அனுமானம் எதுவும் தேவையில்லை’ என காட்டமாக எதிர்ப்பைப் பதிவு செய்தது.
இதோடு கதை முடிந்ததா என்றால் அதுதான் இல்லை.
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளரான அந்தோணியோ குட்டெரெசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டேபன் ஜூஜாரிக், மோடி அரசுக்கு அடுத்தகட்டமாக அதிர்ச்சியை அள்ளி வழங்கியிருக்கிறார்.
பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், இந்தியாவில் நிலவும் ‘கலவரச்சூழல்’ பற்றி ஒருவர் கேள்வி கேட்க, அதற்குப் பதில் அளித்த ஜூஜாரிக், ‘கெஜ்ரிவாலின் கைது, இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு தேர்தல் நேரத்தில் முடக்கப்பட்டது பற்றி கவலை தெரிவித்தார்.
‘தேர்தல் நேரத்தில் இந்தியாவில் ஒவ்வொருவரது அரசியல், சிவில் உரிமைகள் காக்கப் படும் என நம்புகிறோம். இந்தியாவில் சுதந்திரமான, நேர்மையான தேர்தல் வேண்டும். எல்லோரும் வாக்கு செலுத்தும் விதத்தில் நேர்மையான, சுதந்திரமான சூழல் வேண்டும்’ என ஜூஜாரிக், அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
அமெரிக்கா, ஜெர்மனியைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அவையும் இப்படி கச்சைக் கட்டி களம் இறங்கியிருப்பது இந்தியாவில் ஆளும் மோடி அரசுக்கு அதிகப்பட்ச அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஐ.நா.வின் கருத்துத் தொடர்பாகவும் இந்தியா தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
இதுநாள் வரை இந்தியா பற்றியும் பிரதமர் மோடி பற்றியும் மேற்குநாடுகளிடம் ஒரு மனப்போக்கு இருந்தது.
இந்திய பிரதமர் மோடியிடம் பரந்த மனப்பான்மை குறைவாக இருக்கிறது. ஆனால், அவர் சிறப்பாக இந்தியாவை ஆளுகின்றார்’ என்பது மாதிரியான மனப்போக்கு அது.
அந்த மனப்போக்கில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மனப்போக்கு ஆட்டம் கண்டுள்ளது.
‘நடப்பு மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. அதற்கான சூசக அடையாளம்தான் இந்த மாதிரியான திடீர் எதிர்ப்புகள்’ என்ற கருத்தும் ஒருபக்கம் நிலவுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு கருத்து கூறியுள்ள நிலையில், இந்திய ஊடகவியலாளர்களில் ஒருவரான ராஜ்தீப் சந்தேசாய், இதுகுறித்து டிவீட் செய்திருக்கிறார்.
‘இந்தமாதிரி எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எல்லாம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை அழைப்பாணை (சம்மன்) அனுப்புவது வழக்கம். அந்தவகையில் ஐக்கிய நாடுகள் அவைக்கும் சம்மன் அனுப்பப்படுமா?’ என்று அவர் கிண்டலாகக் கேட்டிருக்கிறார்.
முன்பொரு முறை ‘ஐக்கிய நாடுகள் அவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘ஐ.நா. அவை மாற்றியமைக்கப்பட வேண்டும். வெறுமனே பேசிக்கொண்டே இருக்கும் அமைப்பாக ஐ.நா. இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அவை யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதில்லை’ என்று கருத்து கூறியிருந்தார். ‘ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் வேண்டும்’ எனவும் மோடி வலியுறுத்தியிருந்தார்.
ஐ.நா. அமைப்பில் மாற்றம் வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பியிருந்த நிலையில், இந்தியாவில் சிலபல மாற்றங்கள் வேண்டும் என்று ஐ.நா. அமைப்பு தற்போது விரும்புவதைப் போலத் தெரிகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதைத் தொடர்ந்து, இந்தியாவில், அடுத்த கட்டமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், அமெரிக்கா, ஜெர்மனி, ஐ.நா. அவை போன்றவற்றின் அதிரடி கருத்துகள் காரணமாக, இனி மம்தா பானர்ஜி கைது செய்யப்படும் வாய்ப்பு குறைவு என்றே தோன்றுகிறது.