அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள்தான் உள்ளது. நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவாளியும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரெம்பும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் சமீபத்தில் வெளிவந்தன. இதில் கமலா ஹாரிஸுக்கு 44 சதவீத மக்களும், டொனால்ட் ட்ரெம்புக்கு 43 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடும்போட்டி நிலவும் என்பதால் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்த இருவரில் யார் அடுத்த அமெரிக்க அதிபராக போகிறார் என உலகமே உற்று கவனித்து வருகிறது.
சரி, அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் இந்த இருவரில் யாரை ஆதரிக்கிறார்கள்?
இது தொடர்பாக பிபிசி ஊடகத்துக்கு சில அமெரிக்க தமிழர்கள் பேட்டியளித்துள்ளார்கள். அதில் கருத்து தெரிவித்துள்ள, அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் வடக்கு போடோமேக் பகுதியைச் சேர்ந்தவரும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் (IFPRI) மூத்த ஆராய்ச்சியாளராகவும், கற்றல் மற்றும் திறன் வலுப்படுத்தும் திட்டத்தின் தலைவராகவும் பணியாற்றும் முனைவர் சுரேஷ் பாபு, தான் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
“டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வறுமை, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்கான ஒட்டுமொத்த உலகளாவிய நடவடிக்கைகளில் ஒரு தொய்வு இருக்கும். கமலா ஹாரிஸ் நிர்வாகம் உணவுப் பாதுகாப்புக் கொள்கையில் கடுமையான மாற்றங்களைக் கொண்டு வராது, அவர்கள் பைடன் கொள்கையைப் பின்பற்றுவார்கள். கொள்கை ஸ்திரத்தன்மை இருக்கும். அதுவே, டிரம்ப் மீண்டும் வந்தால், அவர்கள் வரிகளை அதிகரிப்பது பற்றிப் பேசி வருவதால் கொள்கை நிச்சயமற்ற தன்மை நிலவும். இதன் காரணமாக நுகர்வோர், உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் போன்ற முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர்கள் முதலீடு செய்ய மாட்டார்கள், இது பொருளாதாரத்தைப் பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.
விர்ஜீனியாவின் ஸ்டெர்லிங் நகரில் வசிப்பவரும், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான நிர்வாகத்தின் (Administration for Child and Families) திட்ட ஆய்வாளருமான ஷெரீன் அலியும் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாகவே கூறியுள்ளார். “இளம் சிறுமிகளின் தாய் என்ற முறையில், பெண்களின் ஆரோக்கியத்தில் அரசாங்கம் எவ்வளவு அக்கறை காட்டுகிறது என்பதில் விழிப்புடன் இருப்பது எனக்கு மிகவும் முக்கியம். டிரம்பின் கருக்கலைப்பு தடை உத்தரவை திரும்பப் பெறுவேன் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இப்போதைய சூழலில், டெக்சாஸில் மிகவும் கடுமையான கருக்கலைப்பு சட்டம் உள்ளது. இதனால், மருத்துவ சூழ்நிலைகள் காரணமாக ஒரு பெண் கர்ப்பமாக இருக்க விரும்பவில்லை என்றாலும்கூட, பெண்களுக்கு தனது கர்ப்பம் குறித்து தீர்மானிக்கும் உரிமையை வழங்கும் வேறு மாகாணத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கருக்கலைப்பு விவகாரத்தில் கமலா ஹாரிஸ் பெண்களின் உரிமையை நீண்ட காலமாக ஆதரித்து வருகிறார். அமெரிக்க உச்சநீதிமன்றம் 2022இல் ரோ vs வேட் வழக்கை ரத்து செய்த பிறகு, அமெரிக்காவில் கருக்கலைப்பு தடைகள் அதிகரித்து வருவதைப் பற்றிப் பேசுவதற்காக அவர் நாடு முழுவதும் பயணம் செய்தார். அவர் ‘தனிப்பட்ட சுதந்திரம்’ என்ற தலைப்பை அடிக்கடி முன்வைத்தார். கருக்கலைப்பு மருத்துவமனைக்குச் சென்ற முதல் துணை அதிபர் கமலாதான்.
பைடன் நிர்வாகத்தின் ‘குழந்தை பராமரிப்புக்கான குறைவான வரி’ மற்றும் தாய்மார்கள் தங்கள் குழந்தை ஆரம்பப் பள்ளியில் சேரும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக சீக்கிரம் வேலைக்குச் செல்ல உதவும் ‘உலகளாவிய ப்ரீகே’ திட்டத்தைத் தொடர்வோம் என்று கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளதையும் நான் வரவேற்கிறேன்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட தெற்காசிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேவைகளை ஆதரிக்கும் ஒரு லாப நோக்கற்ற அமைப்பில் நான் பணிபுரிகிறேன். எனவே பெண்கள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு தொடர்பான அனைத்து திட்டங்களும் தெற்காசியர்களுக்கு உதவும் அமைப்புகளுக்கு உண்மையில் நன்மை பயக்கும்” ” என்கிறார் ஷெரீன் அலி.
ஆனால், வழக்கமாக, கமலா ஹாரிஸ் வேட்பாளராக இருக்கும் ஜனநாயகக் கட்சியினரை ஆதரிக்கும் தமிழரும் விர்ஜீனியாவின் ஆல்டி பகுதியைச் சேர்ந்தவரும் வாஷிங்டன் டிசி-யில் டேட்டா ஆர்கிடெக்ட்டாக (Data Architect) பணிபுரிபவருமான அலியார் சாஹிப், “இந்த முறை நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் இரு தரப்புக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். அதற்குப் பதிலாக சுற்றுச்சூழல், அகிம்சை, சமூக நீதி, ஜனநாயகம், போர் எதிர்ப்பு, இனவெறி எதிர்ப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் பசுமைக் கட்சிக்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்துள்ளோம்.
மேலும், டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தவர்களை அவர் பழிவாங்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம் வேலை வாய்ப்பு, பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் சார்ந்து மாற்றங்கள் நிகழலாம். ஒரு விதத்தில், சட்டவிரோத குடியேற்றக் கட்டுப்பாடு நல்லதுதான். பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும், வட்டி விகிதம் குறையும், ரியல் எஸ்டேட் சந்தை சிறப்பாக இருக்கும்” என்று கூறுகிறார் அலியார் சாஹிப்.
முதல் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க இருப்பவரும் மேரிலாந்தை சேர்ந்த கணினி அறிவியல் மாணவியான அஞ்சலி வெங்கடேஷ், “கமலா ஹாரிஸ் ஒரு சிறந்த வேட்பாளர் என்று நான் நினைக்கவில்லைல; ஆனால், அவர் பெண்கள் உரிமை தொடர்பான பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கிறார். அதற்காக நான் அவருக்கு வாக்களிப்பேன். அவர் ஒரு ஆசிய அமெரிக்கர் என்பது முக்கியமான காரணம்” என்று கூறியுள்ளார், அஞ்சலி.