ஸ்பேட்எக்ஸ் எனப்படும் விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது, இந்திய விண்வெளி ஆய்வு மையம். இதன்மூலம் ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தை கொண்ட 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள இந்த சாதனையை நிகழ்த்தியது எப்படி? விரிவாக பார்ப்போம்…
விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் ஸ்பேஸ் டாக்கிங் என்ற தொழில்நுட்பத்தை சோதனை செய்வதற்காக ஸ்பேட்எக்ஸ் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியது. இதற்காக 2 விண்கலன்களை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் கடந்த திங்கட்கிழமை விண்ணில் ஏவியது. ஸ்பேட்எக்ஸ் ஏ, ஸ்பேட்எக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பூமியில் இருந்து 475 கி.மீ தூரத்தில் திட்டமிட்ட புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
ஸ்பேட்எக்ஸ் திட்டத்தில் முக்கிய சோதனையான ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்கலன்களை ஒன்றிணைக்கும் சோதனை, அதாவது ஸ்பேட்எக்ஸ் ஏ, ஸ்பேட்எக்ஸ் பி விண்கலன்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு விண்கலத்தில் இருந்து மற்றொரு விண்கலத்திற்கு மின் ஆற்றல் (எல்க்ட்ரிகல் எனர்ஜி) அனுப்பப்படும். புவி வட்டப்பாதையில் விண்கலன்கள் நிலைநிறுத்தப்பட்டபோது அவை இரண்டும் அருகருகே நிறுத்தப்பட்டது. சில மணி நேரங்கள் வரை 10 மீட்டர் இடைவெளியில் பயணித்தது. பின்னர் இடைவெளி அதிகரிக்கப்பட்டு அடுத்த நாள் 20 கி.மீ இடைவெளிகளில் பயணிக்கும் வகையில் மாற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து படிப்படியாக இடைவெளி குறைக்கப்பட்டு கடந்த வாரம் 8 முதல் 10 கிமீ இடைவெளியில் விண்கலன்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து இடைவெளி குறைக்கும் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வந்தது. இந்நிலையில் விண்கலன்கள் ஒன்றிணைக்கும் சோதனை ஜன.7ஆம் தேதி நடத்தப்படும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் கூறியிருந்தார். ஆனால், விண்கலன்கள் இணைப்பு பரிசோதனையை மேற்கொள்ள ஆய்வு மையத்தில் செய்யப்பட சோதனைகளில் சரிபார்ப்பு தேவைப்படுவதால் சோதனையும் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சோதனை ஜன.9ம் தேதி நடத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்தது.
இந்நிலையில் விண்கலன்களுக்கு இடையே 225 மீ தூரத்தை எட்டுவதற்கான ஒத்திகை மேற்கொண்டபோது, எதிர்பார்த்ததை விட அதிகமாக அதிர்வுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் திட்டமிடப்பட்ட விண்கலன்கள் இணைக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.
இதையடுத்து மீண்டும் விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 1.5 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டு மீண்டும் 500 மீட்டராக குறைக்கப்பட்டு, கடந்த சனிக்கிழமை 230 மீட்டராக குறைக்கப்பட்டது. இதையடுத்து ஞாயிறு அன்று 105 மீட்டருக்கும் தொடர்ந்து அன்றைய தினமே படிப்படியாக தூரம் குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 15 மீட்டருக்கும், பின்னர் 3 மீட்டர் இடைவெளியில் விண்கலன்கள் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விண்கலன்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் விண்கலன்களை ஒன்றிணைக்கும் டாக்கிங் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஸ்பேட்எக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தவும், ககன்யான் திட்டத்தில் மனிதர்களை 2025ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதையடுத்து 2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியா ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாகத்தான் விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் தொழில்நுட்பத்தை சோதனை செய்ய ஸ்பேட்எக்ஸ் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியது.
இந்த திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில் 2 விண்கலன்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை கொண்ட 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்த சாதனையை நிகழ்த்தியமைக்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ராகுல் காந்தி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.