பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம். நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான். நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம் என்று அதிரடியாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் காயமடநை்தனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளன.
இந்த தாக்குதல் இந்தியா மட்டுமின்றி மொத்த நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்பட பல உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
விரைவில் பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்களை தயாராக வைத்துள்ளது. கடற்படை, விமானப்படையும் பயிற்சியை தொடங்கி உள்ளது. பாகிஸ்தான் கராச்சியில் ஏவுகணை பயிற்சியை தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் இன்று ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு நம் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. இருநாடுகள் இடையே தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இப்படியான சூழலில் தான் பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தால் இந்தியாவுடன் நாங்கள் துணை நிற்போம் என்று இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஓரன் மார்மோர்ஸ்டீன் கூறியதாவது:
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் நாங்கள் இந்தியாவுடன் நிற்போம். நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான். நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம். இது தான் இஸ்ரேலின் கொள்கை ரீதியான நிலைப்பாடு.
பஹல்காம் தாக்குதலுக்கும், 2023 அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமை உள்ளது. இரண்டும் ஒன்றாக உள்ளது. ஆனால் சூழல் மட்டுமே வேறுபட்டு இருக்கிறது. அதேவேளையில் படுகொலை நடந்த விதம் ஒன்று தான். இந்தியாவை போலவே இஸ்ரேலும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு. ஜிகாதி பயங்கரவாத மனநிலையுடன் அப்பாவி மக்களை குறிவைக்கும் பயங்கரவாதத்தை ஆழமாக புரிந்து கொண்டவர்கள் நாங்கள்.
எனவே இந்தியர்களை பயங்கரவாதிகள் குறி வைக்கும் போது, இந்தியாவின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. இஸ்ரேல் இந்தியாவுக்கு துணை நிற்கும். இதற்கு முன்பும் இதை செய்திருக்கிறோம். எதிர்காலத்திலும் இதை தான் செய்வோம்” என்றார்.
கடந்த 22ம் தேதி பஹல்காமில் சுற்றுலா பயணிகள் கூடி மகிழ்ச்சியாக குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டபோது தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதேபோல் தான் கடந்த 2023 அக்டோபரில் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 1000 பேர் வரை பலியாகினர். 250க்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக தான் இஸ்ரேல் போரை தொடங்கியது. பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக வான்வெளி தாக்குதல், தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த போர் ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் நடந்து வருகிறது. இதை தான் பஹல்காம் அட்டாக்குடன் இஸ்ரேல் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஒப்பிட்டு இந்தியாவுக்கு ஆதரவு வழங்கி உள்ளார்.
அதுமட்டும் அல்ல, நம் காஷ்மீருக்கு எதிராக சதி செய்யும் பயங்கரவாதிகள் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கூட்டம் போட்டனர். அந்த கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதியும் பங்கேற்று நம் நாட்டுக்கு எதிராக பேசியிருந்தார்.