No menu items!

மலையாள நடிகர் சங்கத்துக்கு தலைவராகிறாரா பிருத்விராஜ்?

மலையாள நடிகர் சங்கத்துக்கு தலைவராகிறாரா பிருத்விராஜ்?

மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்புக்கு பிரபல நடிகர் பிருத்விராஜை தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். நடிகர்கள், ஜெயசூர்யா சித்திக், ரியாஸ் கான் உட்பட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதற்கிடையே வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.

இதனால் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித் விலகினார். முன்னதாக ‘அம்மா’ அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரும் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த சூழலில் ஹேமா கமிஷன் அறிக்கை பற்றி கருத்து தெரிவித்த நடிகர் பிருத்விராஜ், “குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தாங்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும். நான் செல்லும் படப்பிடிப்பு தளம் மட்டும் பாதுகாப்பானதா என்பது குறித்த அக்கறை மட்டும் இருந்தால் அது போதாது. ஒட்டுமொத்த திரைத்துறையும் பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்வதும் என் கடமை. இந்த பிரச்னையை சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து சென்றுவிட முடியாது. ஹேமா குழுவிடம் முதல் ஆளாக விளக்கமளிக்கச் சென்ற நபர் நான் தான்.
விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை. குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கப்பட்டால், அப்போதும் பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்.

மலையாள திரைத்துறை கலைஞர்கள் கூட்டமைப்பான அம்மா பாலியல் புகார்கள் குறித்து நடவடிக்கைளை முறையாக எடுக்கவில்லை. கடும் நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். நான் பணிபுரியும், என்னைச் சார்ந்த படப்பிடிப்பு தளங்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ளதை உறுதிசெய்வேன்” என்றார்.

பிருத்விராஜைப் போலவே பலரும் அம்மா அமைப்பை விமர்சித்த நிலையில் அதன் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்தார். இந்த பிரச்சினையில் அமைதி காப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் ராஜினாமா செய்தார். அவருடன் மற்ற செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அம்மா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் இன்னும் 2 மாதங்களுக்குள் கூடி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அம்மா அமைப்புக்கு பிருத்விராஜ் தலைவராக வேண்டும் என்று நடிகை ஸ்வேதா மேனன் கருத்து தெரிவித்துள்ளார். பெரும்பாலான நட்சத்த்திரங்கள் ஆதரவு இருப்பதால் அவர் அம்மா அமைப்பின் அடுத்த தலைவராக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...