சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை மிகக் கடுமையாகக் குறைந்து வருவதற்கு எண்ணற்றக் காரணங்களை மனிதன்தான் ஏற்படுத்தியிருக்கிறான்.
இந்த இனம் அழிய பல்வேறு காரணங்களை ஏற்படுத்திவிட்டு, அழிந்து கொண்டிருக்கும் அந்த சின்னஞ்சிறு பறவைக் கூட்டத்துக்காக ஒரே ஒரு நாள் கண்ணீர் அஞ்சலிப் போஸ்டர் ஒட்டுவதுதான் மார்ச் 20 உலக சிட்டுக்குருவி நாள்.
புவியியல் அமைப்பை சீராக வைத்து, இயற்கை சமநிலைக்கு அடிப்படையாக இருக்கும் பல்வேறு உயிரினங்களில் சிட்டுக்குருவியும் ஒன்று. சிட்டுக் குருவி இனம் அழிந்துவிட்டால், விரைவில் மனித இனமும் மண்ணோடு மண்ணாக மக்கிப்போக வேண்டியது வந்துவிடுமே என்ற அச்சத்தில், குழந்தையைக் கிள்ளிய பாவத்துக்கு, தொட்டிலை ஆட்ட வேண்டியே மார்ச் 20 சிட்டுக்குருவி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 364 நாள்களும் அதனை அழிக்க பேயாக உழைத்துவிட்டு, இந்த ஒரு நாளில்மட்டும் சிட்டுக்குருவியை பாதுகாப்பது எப்படி, அதைப் பாதுகாப்பது ஏன் அவசியம்? என பல விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவது வழக்கம்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புதான், அதாவது 2010ஆம் ஆண்டில்தான் சிட்டுக்குருவிகள் நினைவுக்கு வந்து அதன் இனத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதன் இந்த தினத்தைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறான். அதுநாள் முதல், பறவைகளுக்கு தானியம் வைக்கும் பெட்டகம் விற்பனை, வீடுகளில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
முன்பெல்லாம் சிட்டுக் குருவிகளின் ரீங்காரம் எங்கும் இசைத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது பெரிய பெரிய செல்போன் கோபுரங்கள் இன்னமும் நடப்படாத ஒரு சில கிராமங்களிலும், பச்சை பசேலெனக் காட்சி தரும் இடங்களிலும் மட்டும் பறந்து திரிகின்றன இந்த சிட்டுக்குருவிகள்.
உலகின் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் சிட்டுக்குருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பல்வேறு பூச்சிகள் மற்றும் புழுக்களை உண்பதன் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால்தான் விளைபொருள்கள் காக்கப்படுகின்றன.
இவ்வளவு சிறியதாக இருக்கும் இந்தப் பறவைகள்தான், உலகம் முழுக்க தேனீக்களுடன் சேர்ந்து மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதோடு, விதை பரவலில் முக்கிய பங்கும் வகிக்கின்றன. இப்படித்தான் உலகம் முழுவதும் இந்த சிட்டுக்குருவிகள் பல்லுயிரியலை வளப்படுத்தி வருகின்றன.
ஒவ்வொரு மனிதனும் உணவு சாப்பிடுவதை விவசாயிகளுடன் இணைந்து இந்த சிட்டுக்குருவியும்தான் உறுதி செய்து வருகிறது. ஆனால், இவை சாப்பிடும் பூச்சிகளையும், புழுக்களையும் அழிக்க விவசாயிகள் எப்போது பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தத் தொடங்கினானோ, அன்றே இவற்றுக்கு சாவுமணி ஒலிக்கப்பட்டுவிட்டது.
ஒருபக்கம் பூச்சிக்கொல்லிகள் தெளித்ததால் இவற்றின் உணவு குறைந்தது, மறுபக்கம், பூச்சிமருந்துகளால் இறந்துபோன பூச்சிகளை இந்த அப்பாவி சிட்டுக்குருவிகள் சாப்பிட்டு இறந்தன. மிச்சம் மீதி இருந்தவையும் செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சுகளால் பாதிக்கப்பட்டன.
விவசாய நிலங்களை கட்டடங்களாக மாற்றும்போது, இவற்றுக்கான வாழ்விடங்கள் அழிக்கப்பட்டன. புதிய வகை கட்டடங்களும், இவற்றுக்கு கூடு கட்டுவதற்கான அமைப்புகள் இன்றி உருவாக்கப்பட்டன. பிறகு இவைகள் எங்குதான் போகும் வீடு தேடி.